சச்சின் விளையாடும் கடைசி டெஸ்ட் மும்பையில்

11.10.13

கிரிக்கெட்டில் ஏராளமான உலக சாதனைகளை படைத்து, ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ள சச்சின் டெண்டுல்கர் தனது 200-வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் தனது கடைசி போட்டி சொந்த மண்ணில் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக அவர் கிரிக்கெட் வாரியத்திற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியே சச்சின் விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டியாகும். இந்த போட்டியை மும்பை வான்கடே மைதானத்தில் நடத்த வேண்டும் என்று பி.சி.சி.ஐ.-க்கு சச்சின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள பி.சி.சி.ஐ.-யின் சுற்றுப்பயணம் மற்றும் போட்டி அட்டவணையை நிர்ணயிக்கும் கமிட்டியின் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். ஆனால், வான்கடே மைதானத்தில் போட்டியை நடத்த பி.சி.சி.ஐ. சம்மதித்துள்ளது.

இதுதொடர்பாக பி.சி.சி.ஐ. துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், “சச்சின் விரும்பியபடி மும்பையில் கடைசி டெஸ்ட் போட்டி நடத்தப்படும். வெஸ்ட் இண்டீசுடனான போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் செவ்வாய்க்கிழமை இறுதி செய்யப்படும். அப்போது சச்சினின் கடைசி போட்டி நடக்கும் மைதானத்தையும் முடிவு செய்வோம். போட்டி முடிந்ததும் சச்சினுக்கு பெரிய அளவில் பிரியாவிடை கொடுக்க பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது” என்றார்.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சச்சினின் கடைசி டெஸ்ட் போட்டியை நடத்தும் வாய்ப்புள்ள மைதானங்களில் கொல்கத்தா மற்றும் மும்பை மைதானங்கள் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :