மன்மோகனின் கள்ள மௌனம் எப்போது கலையப் போகிறது? -

29.10.13

சர்வதேச சந்தையில் இலங்கையின் பிரச்சினைக்குரிய விற்பனைப் பொருளாக இப்போதிருப்பது பொதுநலவாய மாநாடு. இது நடைபெறுவதற்கு இன்னமும் மூன்று வாரங்கள் மட்டுமே உள்ளன.

நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இம்மாநாடு உத்தியோகபூர்வமாக நடைபெறவுள்ளது. இந்த திகதித் தெரிவு மிக முக்கியமானது. மாநாட்டின் முடிவுக்கு அடுத்த நாள் – நவம்பர் 18ஆம் திகதி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் 68வது பிறந்தநாள். அதற்கு அடுத்த நாளான நவம்பர் 19, அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்ற எட்டாவது ஆண்டுக் கொண்டாட்ட நாள்.

மாநாட்டில் பங்குபற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளை முன்னிலைப்படுத்தி தமது பிறந்தநாளையும், ஜனாதிபதி பதவியேற்பு நாளையும் பெருவிழாவாகக் கொண்டாட மிக நுட்பமாகத் திட்டமிட்டு மாநாட்டுக்கான நாட்களை மகிந்த தெரிந்தெடுத்துள்ளார். 2015ஆம் ஆண்டில் மாநாடு மற்றொரு நாட்டில்(அனேகமாக மொறிசியஸ் நாட்டில்) நடைபெறும் வரை பொதுநலவாய அமைப்பின் தலைவராக இருக்கப் போகின்றவரும் மகிந்த ராஜபக்சவே.

அந்த வகையில் மாநாட்டையும் அதன் தொடர் நிகழ்ச்சிகளையும் புதிய பதவியையும் சரியாகக் கணக்கிட்டு அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுநலவாய அமைப்பின் முதலாவது மாநாடு லி குவான் யு சிங்கப்பூரின் பிரதமராக இருந்தபோது 1971இல் அங்கு நடைபெற்றது.

இரண்டாவது மாநாடு 1973இல் கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் அன்றைய பிரதமர் பியர் ரூடோ தலைமையிலும், மீண்டும் 10வது மாநாடு 1987இல் கனடாவின் வன்கூவரிலும் அப்போதைய பிரதமர் பிரையன் மல்ரோனி தலைமையில் நடைபெற்றன.

ஆசியாவைப் பொறுத்தளவில் 1971(சிங்கப்பூர்), 1983 (இந்தியா), 1989 (மலேசியா) ஆகிய ஆண்டுகளில் மட்டுமே நடைபெற்றது. 23வது மாநாடு அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறும் என்பது சிறு வரலாற்றுக் குறிப்பு. இதிலுள்ள முக்கிய அம்சம், 1973ஆம் ஆண்டுக்குப் பின்னர் எலிசபெத் மாராணி கலந்துகொள்ளாத மாநாடாக இது அமையப்போவதாகும். மாராணியின் பிரதிநிதியாக அவரது புதல்வரான இளவரசர் சார்ள்ஸ் தமது காதல் மனைவி கமிலா சகிதம் இதில் பங்குபற்றுகின்றார்.

2009இல் முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற போர் தொடர்பான இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், படுகொலைகள், ஒன்றரை இலட்சம் வரையான மக்கள் காணாமற்போன சம்பவங்கள் காரணமாக பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தலாமா என்ற கேள்வி பல மட்டங்களில் எழுப்பப்பட்டுள்ளது. மனித உரிமைச் செயற்பாட்டு அமைப்புகளும் அரச சார்பற்ற பல தொண்டர் நிறுவனங்களும் இங்கு மாநாடு நடத்தப்படுவதை வன்மையாக எதிர்த்து நிற்கின்றன.

54 உறுப்பு நாடுகளின் தலைவர்களில் கனடியப் பிரதமர் ஸ்ரீபன் ஹாப்பர் மட்டுமே மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு மாநாடு ஆஸ்திரேலியாவில் பேர்த் நகரில் நடைபெற்ற வேளையில் தாம் விடுத்த அறிவிப்புக்கு இப்போது அவர் செயல் வடிவம் கொடுக்கின்றார். அந்த மாநாட்டில் இலங்கை ஜனாதிபதியின் உரையை ஸ்ரீபன் ஹாப்பர் பகிஸ்கரித்து மண்டபத்திலிருந்து வெளியேறியது ஒரு வரலாற்று நிகழ்வு.

கனடிய வெளிவிவகார அமைச்சர், கனடிய பல்கலாசார அமைச்சர், கனடிய குடிவரவு-பிரஜாவுரிமைகள் அமைச்சர் ஆகியோர் கனடியப் பிரதமரின் முடிவுக்கு அனுகூலமாக தொடர்ந்து இயங்கி வந்தவர்கள். இங்குள்ள பிரதான அரசியற் கட்சிகளும் பகிஸ்கரிப்பு முடிவை வரவேற்றுள்ளன. இவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒன்றுகூடல் பேரணியொன்றை கனடியத் தமிழர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை ஒட்டாவா நாடாளுமன்ற முன்றலில் நடத்துவது அவர்களின் நன்றி மறவாப் பண்பை எடுத்துக்காட்டுகின்றது.

பிரித்தானியப் பிரதமரை எப்படியாவது இந்த மாநாட்டில் பங்குபற்றாது செய்யவேண்டும் என்ற முனைப்புடன் அங்கு வாழும் தமிழ் உறவுகள் முனைந்து வருகின்றனர். பல்வேறு அரசியற் கட்சிகளும் இவர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்து வருகின்றன. ஆனால் கடந்த மே மாதத்திலேயே மாநாட்டில் பங்குபற்றுவதை பிரித்தானியப் பிரதமர் உறுதிசெய்துவிட்டதால் முன்னைய முடிவை அவரால் மாற்ற முடியாது.

எனினும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை பொதுநலவாய மாநாட்டில் தாம் சுட்டிக்காட்டப் போவதாக அவர் தெரிவித்துள்ளதானது தமிழர்களுக்கு ஓரளவு திருப்தியை வழங்கலாம். பிரித்தானியப் பிரதமரின் இந்த அறிவிப்பு இலங்கை அரசுக்கு வயிற்றைக் கலக்குவதாக இருக்கும் என்பது நிச்சயம்.

போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிடப்போவதாக தம்மைச் சந்தித்த மியன்மார் (பர்மா) நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான ஆங் சான் சூவிடம் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் உறுதியளித்துள்ளது மிகவும் முக்கியமானது. மேலும் சில நாடுகளின் தலைவர்கள் தாமும் இம்மாநாட்டில் பங்குபற்றும் வேளையில் மனித உரிமை மீறல்கள் விடயங்களைச் சுட்டிக்காட்டப்போவதாக அறிவிக்க ஆரம்பித்திருப்பது நல்லதொரு சகுனம்.

புகலிடத் தமிழர்கள் ஓய்ந்துவிடாமல் தொடர்ந்து முயற்சியெடுத்தால் மேலும் சில நாடுகளின் தலைவர்களை இதே முடிவுக்குக் கொண்டுவர வாய்ப்பாக அமையும். இந்தக் களத்தைப் பகிஸ்கரிக்க முடியாத நிலையில், அந்த நாட்டின் மனிதாபிமான முரண்செயல்களை வெளிக்கொணரும் தளமாக மாற்றுவது பொருத்தமான செயற்பாடு.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பொதுநலவாய மாநாட்டில் உரையாற்ற அரசாங்கம் அழைக்கப் போவதாக அரசல்புரசலாக ஒரு செய்தி சில ஊடகங்களில் வந்துள்ளது. இந்தியப் பிரதமர் இம்மாநாட்டில் பங்குபற்ற வேண்டுமென்று தேர்தல் காலத்தில் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்தமைக்குப் பிரதியுபகாரமாக இப்படியொரு யோசனை அரச தரப்புக்கு ஏற்பட்டிருக்கலாமோ என்னவோ!

இதனை முறியடிக்கும் வகையில், இந்தியப் பிரதமர் மாநாட்டில் பங்குபற்றக் கூடாது என்ற கோரிக்கை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் பகிரங்கமாக விடுக்கப்பட்டது. இந்த வாரம் இந்தியா சென்றிருந்த கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தமிழ்நாட்டின் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில், மாநாட்டில் பங்குபற்றக் கூடாதென்ற இலங்கைத் தமிழ் மக்களின் விருப்பத்தை இந்தியா நிறைவேற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார்.

கூட்டமைப்பின் முடிவும் விருப்பமும் என்னவென்று குறிப்பிடாமல், மக்கள் விருப்பம் என்று கூறியிருப்பதை ஒருவகை நழுவல் போக்காகவே பார்க்கவேண்டியுள்ளது. இதன் எதிரொலியாக கூட்டமைப்பு மாநாட்டில் பங்குபற்றக் கூடாது என்ற குரல் அதன் தோழமைக் கட்சியொன்றிடமிருந்து வந்துள்ளது. மறுபுறத்தில், தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த‘பொதுநலவாய மாநாட்டை இந்தியா முற்றாகப் புறக்கணிக்க வேண்டும் ‘என்ற தீர்மானத்தை தி.மு.க. அவைத் தலைவர் ஸ்டாலின் வழிமொழிய, அனைத்துக் கட்சிகளும் ஆதரித்து ஏகமனதாக நிறைவேற்றியது அதிர்ச்சியான ஒரு திருப்பம்.


2009ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடரும் சம்பவங்களை உள்ளடக்கிய 30 பந்திகளிலான நீண்ட அறிக்கையொன்றை ஜெயலலிதா சட்டசபையில் தாக்கல் செய்தார். “இந்தியாக முற்றிலுமாக இந்த மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும்“என்று தீர்மானத்தில் வலியுறுத்தியிருப்பது, அடிமட்டக் குழுவைக்கூட அனுப்பக்கூடாது என்பதாகும். இந்தியா மாநாட்டைப் புறக்கணிக்கும் என்றால், இலங்கை-இந்திய உறவு பாதிக்கப்படுவது மட்டுமன்றி, இந்தியப் பொருளாதாரத்தையும் அது பாதிக்கும் என்று இலங்கை அரசு பயமுறுத்தியுள்ளது.  “மாநாட்டை இந்தியா புறக்கணித்தால் உலக அரங்கில் அது தனிமைப்படுத்தப்பட்டுவிடும்“ என்று புதுடில்லியிலுள்ள இலங்கையின் தூதர் பிரசாத் காரியவசம் எச்சரித்துள்ளார்.


ஆனால் இதுவரை கனடாவை இந்தத் தொனியில் இலங்கை எச்சரிக்காதது வியப்புக்குரியது. தமிழகத்தின் காங்கிரஸ் பிரமுகர்களும் மாநாட்டைப் பகிஸ்கரிக்க வேண்டுமென ஒருமித்துக் குரல்கொடுத்தாலும், இந்திய மத்திய அரசின் பேச்சாளர்கள் நேரடியாக ஒரு முடிவை அறிவிக்காமல் குழப்பம் தரும் குதர்க்கமான பதில்களையே வழங்கி வருகின்றனர்.

“போவது பற்றி முடிவில்லை. இன்னமும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அநேகமாகப் பங்கேற்க மாட்டார். மன்மோகன் சிங்கே இறுதி முடிவு எடுப்பார்“ என்றவாறு வரும் புதுடில்லியின் அறிவிப்புகள், சமூகத்தை நாடிபிடித்துப் பார்க்கும் வேலையை இந்தியா செய்வதுபோலவே தெரிகின்றது. சிரிக்கத் தெரியாத மன்மோகன் சிங் பேசத் தெரியாதவராகவும் நடிக்கின்றார். இவரின் கள்ள மௌனம் கலையப்போவது எப்போது என்பதே இன்றைய பிரதான கேள்வி.

0 கருத்துக்கள் :