ஐபோன் வாங்குவதற்காக பெற்ற மகளை விற்ற சீன தம்பதியர்

18.10.13

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் செல்போன் மோகம் அதிகரித்துள்ளது. தற்போதைய நவீன தொழில்நுட்பங்களுடன் ஐபோன் மற்றும் ஐபேடுகளை வாங்குவதற்கு இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக சீனாவில் உள்ள இளைஞர்கள் தங்கள் கிட்னியைக் கூட விற்பதாக பரவலாக பேசப்பட்டது.

இதையெல்லாம் மிஞ்சும் வகையில், சீனாவில் உள்ள ஒரு இளம் தம்பதியர், ஐபோன் வாங்குவதற்காக தங்கள் பெண் குழந்தையை விற்பனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அவர்கள் தங்களின் 3-வது குழந்தையை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ததாகவும், ஐபோன், விலை உயர்ந்த காலணிகள் மற்றும் பிற பொருட்கள் வாங்குவதற்கு அந்த பணத்தை பயன்படுத்தியதாகவும், உள்ளூர் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த அந்த தம்பதியர், சலுகைகளை பெறுவதற்காக குழந்தையை கொடுக்க வில்லை என்றும், தாங்கள் வளர்ப்பதை விட அவர்களால் நன்றாக வளர்க்க முடியும் என்பதால் கொடுத்தோம் என்றும் கூறுகிறார்கள்.

குழந்தையை விற்று எவ்வளவு பணம் பெற்றார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனால், அவர்களின் இணையதள தகவல் பரிமாற்றத்தில், 30 ஆயிரம் யான் மற்றும் 50 ஆயிரம் யான் என்று பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

0 கருத்துக்கள் :