போர் மௌனிக்கப்பட்ட பின் தமிழர்களது கல்வி,கலாசாரங்களில் பின்னடைவு: பா.அரியநேத்திரன்

19.10.13

போர் மௌனிக்கப்பட்ட பின் தமிழ்ச் சமூகத்திடையே ஒழுக்க விழுமியச் செயற்பாடுகள், பாலியல் துஸ்பிரயோகங்கள், மதுபான சாலைகளின் அதிகரிப்பு என்பவை நன்கு திட்டமிட்ட முறையில் ஒரு சக்தியின் பின்னணி இருப்பதனை அவதானிக்க முடிவதாக பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.

மட்டக்களப்பு சென். யோசப் குழந்தை யேசுவின் பாலர் பாடசாலையின் பெற்றோர் தின விழா நேற்று சிசிலியா பெண்கள் பாடசாலையில் மடத்தலைவி மாரிபு லோரன்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

தமிழர் கலாசாரத்தினையும் இல்லாமல் செய்து அவர்களினது இருப்புக்களை சிதறடித்து தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வரும் நிலங்களை அபகரிக்கும் நோக்கோடு பலர் திட்டம் தீட்டி செயற்படுவதனை அண்மைக்காலமாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இவர்களினது திட்டமிட்ட செயற்பாடுகள் காரணமாக எதிர்காலச் சமூகத்தில் பல பின்னடைவுகள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுகின்றன. வெறுமனே கல்வியை மாத்திரம் கற்றுக்கொண்டு பொறியியலாளராகவோ. வைத்தியராகவோ, கணக்காளராகவோ மாத்திரம் வந்துவிட்டால் போதாது. மாறாக எமது நிலம். தேசியம், கலாசாரம் ஆகியவற்றிலும் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்படவேண்டும்.

எமது நிலம் பறிபோகுமாக இருந்தால் கலாசாரம், ஒழக்க விழுமியங்களும் பறிபோய் எமது சமூகம் ஏனைய கலதசாத்தில் மூழ்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலையும் உருவாகிவிடும். அதற்காகவே நாம் அனைவரும் எமது நீண்ட நாள் இலக்கை அடைவதற்கு ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பகுதியில் விடுதலைப் புலிகள் இருந்த காலங்களில் எந்தவிதமான மதுபானசாலைகளும் இருக்க வில்லை.

தற்போது 22 மதுபானசாலைகள் திடீரென முளைத்து இயங்கி வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையினை ஒழிக்க வேண்டுமாக இருந்தால் மதுபான சாலைகளுக்கு மூட விழா செய்ய வேண்டும். அப்போதுதான் மக்களின் வறுமையை ஓரளவாவது போக்க முடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதனைகளை விட வேதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது. இந்த மாவட்டத்திலே 21.5 வீதமானவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள். இத்தோடு 18 வயதிற்கு குறைந்த பெண் பிள்ளைகளிகளின் திருமணம் அதிகரித்துள்ளதனையும் நோக்கவேண்டி உள்ளது எனத் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :