ஒட்டுகேட்டது ஒபாமாவுக்கு தெரியாது : அமெரிக்க உளவு நிறுவனம்

28.10.13

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்லின், டெலிபோனை ஒட்டு கேட்கும் விவகாரம் ஒபாமாவுக்கு தெரியாது என்று அமெரிக்க உளவு நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சி (என்எஸ்ஏ) பல்வேறு நாடுகளின் பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் டெலிபோன்
உரையாடல்களை ஒட்டு கேட்பதாக அதன் முன்னாள் அதிகாரி ஸ்நோடென் அம்பலப்படுத்தினார். அதன்பின், அவர் மாஸ்கோவில் தஞ்சம் அடைந்தார்.

இந்நிலையில், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் உள்பட 35 நாட்டு தலைவர்களின் டெலிபோன் பேச்சுகளை என்எஸ்ஏ ஒட்டு கேட்டதாக ஸ்நோடென் தகவல் வெளியிட்டார். இதனால், ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏஞ்சலாவின் டெலிபோன் உரையாடல்களை கடந்த 2010ம் ஆண்டில் இருந்து அமெரிக்கா ஒட்டு கேட்கிறது என்று ஜெர்மனி பத்திரிகைகள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன.

ஏஞ்சலா மெர்க்கல்லின் டெலிபோன் பேச்சுகள் ஒட்டு கேட்கப்படும் விவகாரம் அதிபர் ஒபாமாவுக்கு தெரியும் என்று ஜெர்மனி பத்திரிகை கூறியிருந்தது. இதுகுறித்து என்எஸ்ஏ செய்தி தொடர்பாளர் வான்னி வின்ஸ் கூறுகையில், ஜெர்மனியின் குற்றச்சாட்டில் உண்மையில்லை. கடந்த 2002ம் ஆண்டு முதலே ஐரோப்பிய நாடுகளின் எலக்ட்ரானிக் ஊடகங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக 2010 முதல் ஜெர்மனியும் கண்காணிக்கப்பட்டது. இதுகுறித்து அதிபர் ஒபாமாவுக்கு தனிப்பட்ட முறையில் எதுவும் தெரியாது. பிரதமர் ஏஞ்சலாவின் டெலிபோன் உரையாடலை ஒட்டு கேட்க அவர் உத்தரவிடவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :