காமன்வெல்த் மாநாட்டில் குர்ஷித் பங்கேற்பது உறுதி

27.10.13

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்பேன்Õ என்று வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் உறுதியாக தெரிவித்துள்ளார். ஆனால், பிரதமர் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். இதுகுறித்து சரியான நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் விடுதலை புலிகளுடனான இறுதிகட்ட போரின் போது ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். அங்கு மனித உரிமை மீறல்களில் இலங்கை ராணுவம் ஈடுபட்டதாக சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இங்கிலாந்தின் காலனி ஆட்சியின் கீழ் இருந்த 52 நாடுகளை கொண்ட காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு, மனித உரிமைகளை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் கூடி பேசி வருகின்றன. அந்த கூட்டமைப்பின் தலைமையை ஒவ்வொரு உறுப்பினர் நாடும் 2 ஆண்டுகள் வகிக்கும்.

மனித உரிமைகளை மீறும் நாடுகள் இந்த கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்க முடியாது. ஏற்கனவே மனித உரிமை மீறல்களால் பாகிஸ்தான், நைஜீரியா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் இடைக்காலமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன. இதே போல் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை கண்டித்து இலங்கையை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று சர்வதேச நாடுகள் கோரிக்கை எழுப்பி வருகின்றன.

இந்நிலையில், இலங்கையில் இந்த ஆண்டு காமன்வெல்த் நாடுகள் மாநாடு நவம்பர் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதை கண்டித்து காமன்வெல்த் உறுப்பினர் நாடான கனடா மாநாட்டை புறக்கணித்துள்ளது. இதேபோல் இந்தியாவும் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மாநாட்டில் பங்கேற்பது உறுதியாகி உள்ளது. இதுகுறித்து டிவி ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்த குர்ஷித் உறுதிப்படுத்தினார்.

பிரதமர் பங்கேற்பாரா என்று கேட்டதற்கு,அதுபற்றி சரியான நேரத்தில் முடிவெடுக்கப்படும். இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வு பணிகள் நமக்கு முக்கியம் என்று குர்ஷித் கூறினார். கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் துணை ஜனாதிபதி அன்சாரி பங்கேற்றார்.

 அதேபோல் இந்த முறையும் அன்சாரி தலைமையிலான குழுவினர் மாநாட்டில் பங்கேற்பார்களா அல்லது தமிழகத்தில் எதிர்ப்பு அதிகமாக இருப்பதால், குர்ஷித்தே இந்திய குழுவுக்கு தலைமை வகிப்பாரா என்று தெரியவில்லை. பிரதமர் தொடர்ந்து மவுனம் காத்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :