நீதி கிடைக்கும் வரை ஓயாது தேடியவர்களின் வீரவரலாறு

14.10.13

முயற்சிகள் ஏதும் இன்றி முடங்கி மௌனமாக நீட்டிக்கிடக்கும் எந்த இனத்துக்கும் வலியவந்து நீதி தேவதை வரங்கள் ஏதும் தரப்போவதில்லை. உலகில் நடத்திமுடிக்கப்பட்ட இனப்படுகொலைகள் அனைத்துக்கும், இனச்சுத்திகரிப்புகள் அனைத்துக்கும் உரிய நீதி கிடைத்திருக்கா என்றால் இல்லை.

இனப்படுகொலைகளின் வடுக்களை தாங்கிய மக்கள் ஓய்வின்றி எழுந்து நீதிக்கான தேடலை ஆரம்பித்தால்  நிச்சயம் அது கிடைத்தே தீரும். அது இன்றோ நாளையோ, நாளை மறுநாளோ திடீரென நிகழ்ந்துவிடக்கூடிய ஒன்று அல்ல. அதற்கான நீண்ட பயணங்கள் ஓய்வின்றி நிகழ்த்தப்படும்போது அது பல கதவுகளை திறந்துவைக்கும். நீதியின் கதவு உட்பட.
எல்லாவகையான கொடூரமான கொலைகளையும் செய்து முடித்துவிட்டு நீதியின் கண்ணில் இருந்து தூரச்சென்று ஒழித்திருந்த ஒரு போர்க்குற்றவாளியை, ஆண்டுகள் பல கடந்தபோதும் தேடிச்சென்று தூக்கிவந்து நீதிக்கு முன்னால் நிறுத்திய ஒரு தேசிய இனத்தின் உறக்கமில்லாத பயணம் பற்றியது இந்த ஆக்கம்.
உலகின் இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையாக கிட்லரின் படைகளால் மேற்கொள்ளப்பட்ட
“யூதப்படுகொலை” யே ஆகும். அறுபது லட்சம் யூத மக்கள் விசவாயு அறைகளிலும், கொலைக் களங்களிலும், கடும்குளிரிலும், பசியாலும் கொலை செய்யப்பட்டார்கள். இந்த யூதப்படு கொலையில் முக்கியமானதும், மிகவும் கொடூரமானதும் “அவ்ஸ்விற்ஸ்” (Auschwitz) முகாமில் லட்சோப லட்சம் யூதப்பெண்களையும், சிறுவர்களையும் விசவாயு அறைகளுக்குள் அடைத்து துடிக்கத்துடிக்க கொன்று எரித்தது ஆகும்.

மானுட வரலாற்றில் எப்போதுமே காணப்பட்டிராத இந்த இனப்படுகொலையை வடிவமைத்து முன்னின்று
நடத்தியவன் ‘அடோல்வ் ஏச்மென்’ (Adolf Eichmann) என்ற ஜேர்மனிய தளபதி ஆகும்.கொஞ்சம்கூட தயக்கமோ, சஞ்சலமோ இன்றி யூதர்களை புகையிரதங்களில் கொலை முகாம்களுக்கு அனுப்பிக்கொண்டிருந்தவன் இவன்.
1942ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் அதிகூடிய அமெரிக்க மற்றும் கூட்டுபடைகளின் ஓன்றிணைந்த பலத்தின் முன்பாக“கிட்லரின்” கனவு சாம்ராஜ்யம் கலைந்து வீழ்ந்தவுடன் யூதப்படுகொலைக்கு பொறுப்பான “அடோல்வ் ஏச்மென்” னும் தனது உயிரை காத்துக்கொள்ள ஓடிஒளியத் தொடங்கினான்.
அமெரிக்கா மற்றும் நேசநாட்டுப் படைகளால் பிடிக்கப்பட்ட ஜேர்மனிய தளபதிகள் “நூரன்பேர்க்” நகரில் அமைந்த
நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, சுட்டும், தூக்கலிட்டும் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். நூரன்பேர்க் நீதிமன்றத்தில் பல ஜேர்மனிய தளபதிகள் ஒப்புதல் வாக்கு மூலங்களையும் வழங்கினார்கள். அதில் மிகமுக்கியமாக “அவ்ஸ்விற்ஸ்“ (Auschwitz) முகாமின் பொறுப்பாளரான தளபதி “ரொடுல்வ் கோய்ஸ்” என்பவர்
இந்த படுகொலைகளுக்கான முழு உத்தரவும் “அடோல்வ் ஏச்மென்“ தான் தந்ததாக வாக்குமூலம் கொடுத்ததன் பின்னர் “அடோவ் ஏச்மென்“ யூதப்படு கொலைகளுக்காக மிகவும் தேடப்படும் ஒருவரானார்.
முழு ஜேர்மனியும் கூட்டுப்படைகளினால் கைப்பற்றப்பட்ட சூழலில் கிராமங்களிலும், பண்ணைகளிலும் இந்த கொலைகார தளபதி ஒளித்திருந்தான். ஒருவாறாக 1948ல் இத்தாலியை வந்தடைந்து அங்கிருந்து “றிச்சார்டோ கெலிமன்” என்ற பொய்ப் பெயருடன் சிரியாநாட்டின் “டமாஸ்கஸ்” நகரில் சிறிய ஆயுதங்களை இறக்குமதி செய்பவனாக இருந்தான்.
ஆனால் யூதர்களுக்கான இஸ்ரேல் தேசம் உருவானவுடன் யூதப்படுகொலைகளின் சூத்திரதாரிகளை தேடி அழிக்கவும், பிடித்துக் கொண்டு இஸ்ரேலுக்கு கொண்டு வரவும் விசேட இஸ்ரேலிய பிரிவுகள் மோப்பம் பிடிக்கத் தொடங்கின. விசவாயு அறைகளுக்குள் லட்சோபலட்சம் யூதர்களை கொன்றழித்த “அடோல்வ் ஏச்மென்” என்பவரையும் அவர்கள் தேடியலைந்து கொண்டிருந்தார்கள். இனி இங்கிருப்பது அவ்வளவு பாதுகாப்பானது இல்லையென்று புரிந்துகொண்டு 1950ம் ஆண்டு ஆர்ஜன்டீனவுக்குள் நுழைந்து கொண்டான். அப்போதைய ஆர்ஜன்டைனா அரசு வேறு பொய்ப் பெயர்களில் தப்பித்துவரும் ஜேர்மனிய தளபதிகளுக்கு ஒரு ஒதுங்கிடமாக இருந்தது. அங்கு “கெலிமென்” என்ற பெயரில் ஒரு தொழிலாளியாக இவன் வாழத்தொடங்கினான்.
1952ல் ஆஸ்திரியாவில் இருந்து தனது மனைவியையும் முன்று குழந்தைகளையும் ஆர்ஜன்டீனாவுக்கு வரவழைத்து குடும்பமாக வாழத்தொடங்கினான். ஆண்டுகள் பல கடந்தன. மொத்தத்தில் எல்லோரும் இந்த கொலைகாரனை மறந்துவிட்டிருந்தனர். ஆனால் வலிகளை சுமந்த யூத தேசமும், மக்களும் இவனை மறக்கவோ, மன்னிக்கவோ தயாராக இல்லை. எங்கோ ஒரு உலகமூலையில் “அடோல்வ் ஏச்மென்” என்ற மானுட எதிரி பதுங்கி இருப்பான் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். தேடிக்கொண்டே இருந்தனர். ஒருநாளில் அதற்கு பலனும் கிடைத்தது. மெத்தனமாக இவன்போட்ட கடிதம் ஒன்று ஆஸ்திரியாவின் முத்திரை சேகரிக்கும் ஒருவருக்கு
கிடைத்துப்போக அதை அவர் தனது யூதநண்பருக்கு காண்பிக்க “அடோல்வ் ஏச்மெனின்” புகலிடம் ஆர்ஜன்டீனாதான் என இஸ்ரேலுக்கு தெரிகிறது.
பிறகு தாமதிப்பார்களா என்ன? கணக்குத் தீர்க்கும் “ஒப்பிரேசன் ஏச்மென்” ஆரம்பமாகிறது. மொசாட் புலனாய்வு அதிகாரிகள் ஆர்ஜன்டீனாவுக்கு விரைகிறார்கள். ஏற்கனவே அங்கு இருந்த தகவல்களுடன் “அடோல்வ் ஏச்மென்”னை தேடிச்சலிக்கிறார்கள். இறுதியில் மார்ச்19ம் திகதி 1960ம் ஆண்டு இவனின் இருப்பிடத்தை அடையாளம் கண்டு இவனையும் காண்கிறார்கள். ஆனாலும் இவன்தான் அந்த வெறியன் என்று அடையாளம் படுத்தவேண்டிய தேவை உள்ளது. அதுவரைக்கும் அவனின் இடம் முழநேரமும் இஸ்ரேலிய புலனாய்வு கண்கள் மேய்ந்து கொண்டே இருந்தன.
எங்கே போகிறான். என்ன செய்கிறான். என்பன அனைத்தும் கண்காணிப்பில் இருக்கிறது. “அடோல்வ் ஏச்மென்’னை
அடையாளம் கண்டு முன்று நாட்களின் பின்னர் மார்ச் 21ம் திகதி மாலைப்பொழுதில் அவன் ஒரு பூச்செண்டுடன் வீட்டுக்கு செல்கிறான். அவனின் குழந்தைகளும் மனைவியும்கூட நல்ல உயர்தர ஆடைகளுடன் அன்று காத்து நிற்கின்றனர். வீட்டுவாசலில் வைத்து “அடோல்வ் ஏச்மென்” தனது மனைவியிடம் அந்த பூச்செண்டை கொடுத்த பொழுதில் இவன்தான் அந்த கொலைகாரன் என இஸ்ரேல் உறுதி கொள்கிறது. ஏனெனில் அந்தநாள் “அடோல்வ் ஏச்மென்”னின் திருமணநாள் என்று இஸ்ரேலிய புலனாய்வு தகவல்கள் பதிந்திருந்தன. தனது திருமண நாளின் 25வது வருட நிறைவுக்காக மனைவிக்கு கொடுத்த பூச்செண்டு ஒரு மிகப்பெரிய போர்க்குற்றவாளியை உறுதியாக அடையாளம் காணஉதவியிருந்தது. இவன்தான் அவன் என எல்லாவகையிலும் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.
இனிமேல் எப்படியாவது இஸ்ரேலுக்கு கொண்டுபோக வேண்டும். அப்போது ஆர்ஜன்டீனாவில் இஸ்ரேலிய புலனாய்வாளர்கள் இயங்குவதும், இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டால் மரணதண்டனையோ, மிக நீண்ட சிறைவாசமோதான் கிடைக்கும். அப்படியான பொழுதில் அங்கு ஒரு போர்க்குற்றவாளியை கடத்தி இஸ்ரேலுக்கு
கொண்டுவருவது என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாததாக இருந்தது.
ஆனாலும் தமது உறவுகள் கதறிய இறுதிநேரக் கதறலுக்கு தீர்ப்பு எழுதும் துடிப்பும், ஆன்மவேகமும் எல்லா யூதமக்களிடமும் நிறைந்தே இருந்தது. இஸ்ரேலில் இருந்து பல ஆயிரம்மைல் தூரத்தில் உள்ள ஆர்ஜன்டீனாவில்
கைகளில் துப்பாக்கியோ வேறு எந்த ஆயுதமோ இன்றி அந்த போர்க்குற்றவாளியை கடத்தும் ஆபத்தான வேலைக்குள் இறங்குகின்றனர்.
1960ம்ஆண்டு மே 11ம் நாள் வீட்டுக்கு அருகான பாதையில் நடந்துகொண்டிருந்த உலகின் மிகமோசமான மானுட விரோதி வெறும் கைகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டு கடத்தப்படுகின்றான். கைகளும் கால்களும் கட்டப்பட்டு ஒரு வீடு ஒன்றின் அறையில் கிடத்தப்பட்டிருந்த “அடோல்வ் ஏச்மென்” மே 21ம் நாள் ஆர்ஜன்டீனாவின்’ “போனஸ்
அயர்ஸ்” விமான நிலையத்தில் தரித்திருந்த இஸ்ரேலிய விமானத்தில் போதை ஏறி மயக்கமான விமானபணியாளர் என்று கூறப்பட்டு ஏற்றப்படுகின்றான்.
விமானநிலைய கட்டுப்பாட்டு அறையின் உத்தரவு கிடைத்து விமானம் மேலெழும்பி ஆர்ஜன்டீனாவின்  வான்பரப்பை கடந்த பின்னரே இந்த வீரமிகு செயலை செய்தவர்கள் தங்களுக்குள் கைகுலுக்கி கொள்கின்றனர்.
மறுநாள் இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் பிரதமர் பென்கூரியன் “அடோல்வ் ஏச்மென்” கைது செய்யப்பட்டு இஸ்ரேலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதை உத்தியோகபூர்வமாக அறிவிக்கிறார்.
1961ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் நாள் அடோல்வ் ஏச்மென்னுக்கு மீதான பதினைந்து குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் சுமத்தப்படுகின்றது. கொலை முகாம்களில் இருந்து தப்பியவர்கள் சாட்சியங்களாக உணர்ச்சியுடன் முன்வருகிறார்கள். 1961ம்ஆண்டு டிசம்பர் 15ம் நாள் மனிதகுலத்துக்கு எதிரான செயல்களுக்காக அவனுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. 1962ம் ஆண்டு மேமாதம் 31ம் நாள் மனிதகுல விரோதியான அந்த கொலைகாரனுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது.
பல லட்சம் மக்களை துடிக்கதுடிக்க கொன்று பின் அவர்களின் உடலை எரித்த அடோல்வ் எச்மென் என்ற இனப்படுகொலை குற்றவாளியின் மரணம் 23:58க்கு உறுதி செய்யப்படுகிறது. அதன்பின் அவனின் உடலை எரித்து அந்த சாம்பலை எடுத்துக் கொண்டு ஒரு படகு இஸ்ரேலின் கரையில் இருந்து வெகுதூரம் கடந்து செல்கிறது. இவனின் எஞ்சிய சாம்பல்கூட யூதமண்ணை தீண்டக்கூடாது என்பதற்காக ஒரு வாளிக்குள் வைத்து இஸ்ரேல் கடல் எல்லையை கடந்து கடலின் ஆழத்துள் எறியப்படுகிறது.
ஒரு மிகச்சிறய தேசிய இனம், தனக்கான நீதியை தானே தேடிய நிகழ்வு இது. காலமும், அசையும் வாழ்வியலும் மற்றவர்களை எல்லாம் மறக்கச்செய்துவிடும். ஆனால் உறவுகளை இழந்தவர்களும், வலிகளை சுமந்தவர்களும் ஒருபோதும் மௌனமாயிருக்கார்.
யூதர்கள் இனப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தாலும்கூட அமெரிக்காவின் உதவியுடன் 2000 வருடங்களுக்கு முன்னர் இழந்திருந்த தமது நாட்டை மீண்டும் உருவாக்கிக்கொண்டனர். அவர்கள் பாதுகாப்பாகவும், கௌரவமாகவும் வாழுவதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட இஸ்ரவேல் என்ற தனியரசு அவர்களுக்கு கிடைத்தது.
எனினும் தமது இனத்துக்கு நடந்த கொடூரங்களை மறக்கவோ, இனநல்லிணக்கம் என்னும் பெயரில் கொலையாளிகளை மன்னிக்கவோ அவர்கள் தயாராக இல்லை. ஆனால் இங்கே சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவில்லை. மறுபக்கத்தில் சாதாரண மனித உரிமைகள் கூட மதிக்கப்படாது இன்றும்  சித்திரவதைகளும், இராணுவ மயமாக்கல்களும், நிலப்பறிப்புக்களும் நடைபெற்றக்கொண்டிருக்கும்போதே இன நல்லிணக்கம் என்னும் பெயரில் அனைத்தையும் மறந்து மன்னிக்கப் போகின்றார்களாம் சிங்கக்கொடி சாமும், கிறிக்கெற் வீரன் சுமாவும். அடிமைகளுக்கு எங்கே சுதந்திரத்தின் அருமை புரியும்.

0 கருத்துக்கள் :