மாவீரர் துயிலும் இல்லங்களை மீளவும் நிர்மாணிக்க வேண்டும்; சாவகச்சேரி பிரதேச சபை தீர்மானம்.

16.10.13

சிதைக்கப்பட்ட சகல மாவீரர் துயிலுமில்லங்களையும் உடனடியாக வடக்கு மாகாண அரசு மீள நிர்மாணிக்க வேண்டும் என்று சாவகச்சேரிப் பிரதேச சபையில் நேற்று முன்தினம் அதிரடியாகத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பிரதேச சபையின்  மாதாந்தக் கூட்டம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை தவிசாளர் த.துரைராசா தலைமையில் நடைபெற்றது.

இதன் போது பிரதேச சபை உறுப்பினரான ஸ்ரீரஞ்சன் , "எமது விடுதலைக்காக போராடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வித்தாக வீழ்ந்தபோது அவர்களின் நினைவாகவும் வித்துடல்களை விதைக்கவும் உருவாக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களை இறுதிப் போரின் பின்னர் படையினர் அழித்து, அவற்றின் மேல் முகாம்களை அமைத்துள்ளனர்.

தற்போது எங்களுக்கென வட மாகாண அரசு அமைந்துள்ள நிலையில் எமது இளைஞர்களின் உயிர்த்தியாகத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் சிதைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களை மீள அமைக்க வேண்டும்'' என்ற பிரேரணையை முன்வைத்தார்.

இதனை சபையின் உபதவிசாளர் த.யோகராசா வழிமொழிந்தார். பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

0 கருத்துக்கள் :