தெற்கில் பலருக்கு விக்னேஸ்வரன் காய்ச்சல் பிடித்துள்ளது. பா.அரியநேத்திரன்

3.10.13

தென்னிலங்கையில் உள்ள பலருக்கு இன்று விக்னேஸ்வரன் காய்ச்சல் பிடித்துள்ளதால் வடமாகாணசபை குறித்து சட்டதிட்டங்களை மீறிய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளமை தொடர்பாக தென்னிலங்கை அரசியல்வாதிகளின் கருத்து தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தென்னிலங்கையில் உள்ள இனவாதக் கட்சிகள் சில விக்னேஸ்வரன் தமிழீழத்தை பெற்றுக்கொடுக்கப் போகின்றார் என உழறுவதுடன் தென்னிலங்கை மக்களையும் குழப்பி வருகின்றனர்.
ஜனாதிபதி முன் விக்னேஸ்வரன் அவர்கள் வடமாகாணசபை முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்தால் அது அரசாங்கத்தை கவிழ்ப்பதுடன் தமிழீழத்தை பிரகடனப்படுத உதவும் என சில இனவாதிகள் கோசம் போடுகின்றனர்.

நாங்கள் தமிழீழத்தை பிரகடனப்படுத்துவதாக இருந்தால் நாங்கள் வட மாகாணசபை தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை என்பதை முதலில் இனவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
அத்தோடு இலங்கை வரலாற்றில் இதுவரை எந்த மாகாணசபை முதலமைச்சரும் ஆளுனரிடம் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதாக வரலாறு இல்லை அனைத்து முதலமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையிலேயே பதவிப் பிரமாணம் எடுத்துள்ளனர்.
இந்நிலையில் வடமாகாண சபை முதலமைச்சரை மாத்திரம் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுக்கக்கூடாது என கூறுவதற்கு காரணம் தென்னிலங்கையில் பிடித்துள்ள விக்னேஸ்வரன் காய்ச்சலேயாகும்.
தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ நினைத்தாலும் அதனை காலம் காலமாக சிங்கள இனவாதிகள் விடுவதில்லை என்பதற்கு இதுவே சிறந்த சான்று என்றார்.

தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் எம் மத்தியில் இருந்து சிறந்த விளையாட்டு வீரர்களும் உருவாவது உறுதி: பா.அரியநேத்திரன்

மட்டு கல்லடி – வேலூர் விபுலானந்தா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட ரீதியாக நடாத்தப்பட்ட கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 4.00 மணிக்கு கல்லடி – வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
இந்த இறுதிப் போட்டியில் சீலாமுனை சில்வெஸ்ரார் விiயாட்டுக் கழகமும் மைக்கல்மென் விளையாட்டுக் கழகமும் விளையாடின.
இந்த விளையாட்டு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போது,
கடந்த பல தசாப்த காலமாக எமது தமிழ் இனம் சொல்லொண்ணா துயரங்களுடனும் இன்னல்களுடனுமே வாழ்ந்து வருகின்றோம். இந்த நேரத்தில் எமது ஒற்றுமை ஒன்றே எமது பலமாக காணப்படுகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக நடந்து முடிந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலை நாம் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாக்களித்தமையினாலேயே நாம் இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றோம். இந்த ஒற்றுமையானது எமது உரிமையை வென்றெடுப்பதற்கான அடிக்கல்லாக அமைந்துள்ளது.

இதேபோன்று எல்லாத் துறைகளிலும் நாம் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் செயலாற்ற வேண்டும் அவ்வாறு செயற்பட்டோமானால் எமக்கும் எமது இனத்திற்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :