முதல்வர் ஜெயலலிதாவின் உறுதி

28.10.13

நேரம் பார்த்து காய்களை நகர்த்துவதில் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா வல்லவர். அண்மைக்காலமாக அவர் தாயகத் தமிழர்விடயத்தில் கூடுதல் அக்கறை காட்டிவருகின்றார். அவதிப்படும் தமிழருக்கு ஆறுதலாக இருப்பவர்.

அதேநேரத்தில் தமிழர்களை அவதிக்குள்ளாக்கும் சிறிலங்கா அரசுக்கு எதிரான அழுத்தங்களை இந்தியா அதிகரிக்க வேண்டும் என்றும் கோரி வருபவர்.
சிறிலங்கா அரச அதிபர் மகிந்த ஒரு போர்க்குற்றவாளி. அவருக்கு எதிராகச் சர்வதேச விசாரணை அவசியம் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தவர். தாயகத் தமிழரின் துன்பம் தீர்க்க அவரால் என்ன செய்யமுடியுமோ, அவற்றையெல்லாம் செய்ய ஒருபோதும் தயங்காதவர்.

இப்போது அவர் சட்டமன்றத்திலே கொண்டுவந்துள்ள தீர்மானம் இந்திய மத்திய அரசை தர்மசங்கடத்துக்கு இலக்காகியுள்ளது.
கோடைகால விடுமுறையின் பின் சட்டமன்றம் கூடிய முதல்நாளே முதல்வர் ஜெயலலிதா இதனைக் கொண்டுவந்துள்ளார். சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பு மகாநாட்டை இந்தியா முற்றுமுழுதாகப் பகிஷ்கரிக்க வேண்டும். பிரதமர் மாத்திரமல்ல எந்தவொரு பிரதிநிதியும் கலந்து கொள்ளக்கூடாது.

அதேநேரத்தில் பொதுநலவாய அமைப்பு விதிகளுக்கு மாறாக நடந்து கொள்ளும் சிறிலங்காவை அமைப்பிலிருந்து தற்காலிகமாக நீக்க வேண்டும். சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் தமிழருக்கும் வழங்கப்படும்வரை இந்நிலை நீடிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிடும் அந்தத் தீர்மானத்தை இந்தியா செயற்படுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
முதல்வரின் தீர்மானத்தை கட்சி வேறுபாடின்றி சகல கட்சிகளும் ஆதரித்தன. பொதுநலவாய அமைப்பு மகாநாட்டில் கலந்துகொள்வதா இல்லையா என்பதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங் இன்னும் முடிவுசெய்யவில்லையென்று குறிப்பிடுகின்றது.

தமிழ் நாடு முழுவதும் இதில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என ஆர்ப்பாட்டம் செய்யப்படுகின்றது.

இந்திய மத்திய அரசு தமிழ்நாட்டிலுள்ள எட்டுக்கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை மதிப்பதாக இருந்தால் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற அழுத்தமும் எழுந்துள்ளது. இந்நிலையில் முதல்வரின் சட்டசபைத் தீர்மானம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. கனடா பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர்மகாநாட்டில் கலந்துகொள்வதில்லை என எடுத்த முடிவை வரவேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா, சிறிலங்காவில் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக பிரதமர் குறிப்பிட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதல்வரின் தீர்மானத்தை உலகத் தமிழர்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர். சிறிலங்கா அரசினால் தமிழர்கள் பெரும் துன்பத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதை சர்வதேசத்திற்கு முதல்வர் உரத்த குரலில் தெரிவித்துள்ளார். பொதுநலவாய அமைப்பு விதிகளில் மனித உரிமை தொடர்பான விதியை சட்டசபையில் வாசித்துக்காட்டிய முதல்வர், ஜெயலலிதா, அந்த விதியை சிறிலங்கா மீறியுள்ளதாக குறிப்பாகச் சுட்டிக்காட்டினார்.
எனவே இவ்வாறு விமர்சனத்திற்கு இலக்காகியுள்ள பொதுநலவாய அமைப்பு சிறிலங்காவில் மகாநாட்டை நடாத்த எடுத்த முடிவு எவ்வளவு தவறானது என்பதை இப்போதாவது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
மகாநாட்டில் பங்குபற்றக்கூடாதென பிரித்தானியா பிரதமர் டேவிட் கமரூன் பெரும் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அவரும் கனடா பிரதமர் எடுத்த முடிவையே எடுக்க வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம்.
ஆசிரியர் தலையங்கம்
நன்றி: உலகத்தமிழர்

0 கருத்துக்கள் :