விக்னேஸ்வரனை மிரட்டுகிறார் கெஹலிய ரம்புக்வெல

17.10.13

வடக்கு, கிழக்கு இணைப்புக் குறித்து வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் சிந்திப்பது கூடத் தவறானது என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.

கிழக்கு மாகாணம் வடக்குடன் சேர்ந்து செயற்பட எண்ணினால், வடக்கு மாகாணம் அதற்கு இணங்கினால், சிறிலங்கா அரசாங்கம் அதனை நிறைவேற்றியாக வேண்டும் என்று வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல,
“வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் எவ்வாறு கூறியிருந்தாலும், அரசியலமைப்புக்கு மாறாக எதையும் நடைமுறைப்படுத்த முடியாது.
நாட்டில் நிலவும் சமாதான சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவர் சிந்திப்பதே தவறானது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தாம் நினைத்தவாறு ஒழுங்கு முறையின்றி மேலதிக அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு கூறுவாறானால் அது கவலைக்குரியது.

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் நல்லுறவுடன் வாழும் நிலை உருவாக்கப்பட்டுள்ள சூழலில், தன்னிச்சையாக இத்தகைய கருத்துக்களைத் தெரிவிப்பது முறையற்றது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :