சிறிலங்கா: நான்கு சகோதரர்களால் ஆளப்படும் ஒரு நாடு - ஊடகவியலாளர்

19.10.13

சிறிலங்கா அதிபரின் மகனான 27 வயதுடைய நாமல் ராஜபக்ச ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அதிபர் ராஜபக்சவின் நெருங்கிய உறவினர்கள், மைத்துனர்கள் போன்றோர் நாட்டின் அமைச்சுக்கள் மற்றும் மாகாணங்களின் மிக முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு The Telegraph ஊடகத்தின் வெளிவிவகாரத்திற்கான தலைமைச் செய்தியாளர் David Blair கொழும்பில் இருந்து தொடராக தனது உடகத்திற்கு அனுப்பிவரும் செய்தி அறிக்கையில் தெரிவித்து வருகிறார். அதில் ஒரு குறிப்பு இது:

தமது அரசாங்கத்தை குடும்ப வியாபாரமாக மாற்றியுள்ள நான்கு சகோதரர்களால் ஆளப்படும் நாடே சிறிலங்காவாகும். 2005ல் சிறிலங்கா அதிபர் தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச முதன்முதலாக தெரிவுசெய்யப்பட்டார். நாட்டில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் 2010ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் மீண்டும் மகிந்த ராஜபக்ச வெற்றியீட்டினார்.

சிறிலங்கா அதிபரின் இளைய சகோதரரான கோத்தபாய பாதுகாப்புச் செயலராகப் பதவி வகிப்பதன் மூலம் நாட்டின் அதிகாரம் மிக்க ஒருவராக உள்ளார். முல்லைத்தீவில் 2009ல் 40,000 உயிர்கள் காவுகொள்ளப்பட்டு அழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக பரப்புரை செய்ததில் கோத்தபாய மிகவும் முதன்மையானவர் ஆவார்.

இதிலிருந்து வடக்கின் அபிவிருத்தியானது சிறிலங்கா அதிபரின் பிறிதொரு சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்சவின் தலைமையில் மேற்கொள்ளப்படுகிறது. சிறிலங்காவின் வடக்கில் கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு புதிய வீதிகளின் அருகிலும், பாடசாலைகளிலும் நாட்டப்பட்டுள்ள விளம்பரப் பலகையில் சிறிலங்கா அதிபரின் ஒளிப்படத்துடன் பசில் ராஜபக்சவின் ஒளிப்படமும் காணப்படுகின்றது.
அரசியல் யாப்பின் பிரகாரம் 'இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசானது' அடிப்படையில் நாடாளுமன்றுக்கும் நிறைவேற்று அதிபருக்கும் இடையிலான அதிகாரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா அதிபரின் மூத்த சகோதரரான 70 வயதான சமல் ராஜபக்ச நாடாளுமன்றின் சபாநாயகராக உள்ளார் என்பது நடைமுறை உண்மையாகும்.

இதேவேளையில், சிறிலங்கா அதிபரின் மகனான 27 வயதுடைய நாமல் ராஜபக்ச ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அதிபர் ராஜபக்சவின் நெருங்கிய உறவினர்கள், மைத்துனர்கள் போன்றோர் நாட்டின் அமைச்சுக்கள் மற்றும் மாகாணங்களின் மிக முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறிலங்காவின் மிகவும் முக்கிய அதிகாரம் மிக்க ஆட்சிப் பொறுப்புக்கள் ராஜபக்ச சகோதரர்களின் கைவசமுள்ள நிலையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச 'நீடுழி வாழ்க' எனக் குறிப்பிடப்பட்டுள்ள சுலோகங்களை நாட்டில் பரவலாகக் காணமுடியும்.

0 கருத்துக்கள் :