யாழ்.வருகிறார் பிரிட்டன் பிரதமர்; கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும்

20.10.13

பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகைதரும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் வடக்கு மாகாணத்துக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று நம்பகரமாகத் தெரிய வருகிறது.

குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு அவர் நேரில் பயணங்களை மேற் கொள்வதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அரசுத் தலைவர்கள் கலந்து கொள்ளும் பொதுநலவாய மாநாடு அடுத்த மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதிவரை கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரிட்டன் இளவரசர் சார்ள்ஸ் மற்றும் பிரதமர் டேவிட் கமரூன் ஆகியோர் இலங்கை வருகின்றனர்.

பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்ற பின்னர், இளவரசர் சார்ள்ஸ் தலைமையிலான 20 பேர் கொண்ட குழுவினர் கிழக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொள்வர்.

அதே போன்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் தலைமையிலான ஒரு குழுவினர் வடக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். பிரிட்டன் பிரதமர் வடபகுதிக்கான பயணத்தின் போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கே செல்லவுள்ளார் என்று அறிய முடிந்தது.

பிரதமர் பயணம் மேற்கொள்ளவுள்ள இடங்களைத் தீர்மானிப்பதற்காகவும் பிரதமர் சந்திப்பவர்களைத் தீர்மானிப்பதற்காகவும், பயண முன்னேற்பாடுகளைக் கவனிப்பதற்காகவும் பிரிட்டனின் விசேட தூதுக்குழுவினர் வட பகுதிக்கு வந்து சென்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இதேவேளை, போரின் பின்னர் வடபகுதிக்கு பயணம் மேற் கொள்ளும் முதலாவது வெளிநாட்டுத் தலைவர் டேவிட் கமரூன் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :