யாழ் தட்டாதெருவில் இராணுவ வாகனம் மோதி இளம்பெண் பலி

1.10.13

நேற்று திங்கட்கிழமை இரவு 9.45 மணியளவில் யாழ்ப்பாணம் தட்டாதெரு சந்தியில் இடம்பெற்ற இந்த விபத்தில் கல்வியங்காட்டைச் சேர்ந்த சதீஸ்குமார் கீர்த்தனா என்ற 20 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணே பலியானவராவார். இவரது கணவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இவர்கள் திருமணமாகி ஐந்து மாதங்களேயாகின்றன என்று இவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த கணவனும் மனைவியும் அவசர அலுவல் காரணமாக தங்கள் உந்துருளியில் யாழ்.நகருக்குச் சென்றுவிட்டு யாழ்.கே.கே.எஸ் வீதியூடாக வந்து தட்டாதெரு சந்தியிலிருந்து நல்லூர் வீதியால் திரும்பியுள்ளனர். அந்தச் சந்தர்ப்பத்தில் இவர்களுக்கு பின்னால் மிக வேகமாக வந்த சிறீலங்கா படையினரின் வாகனம் ஒன்று இவர்களின் உந்துருளியை பலமாக மோதியதால் உந்துருளியில் பின்னாலிருந்து பயணித்த பெண் வீதியில் விழுந்தார். இதன்போது சிறீலங்கா படையினரின் வாகனச் சக்கரம் அந்தப் பெண்ணுக்கு மேலாக ஏறியுள்ளது. இதனால் அவர் உடல் நசிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் ஒன்றுகூடிய மக்கள் சிறீலங்கா படையினரிடம் நியாயம் கேட்க முற்பட்டுள்ளனர். அப்போதுதான் குறித்த வாகனத்தில் வந்த சாரதி உள்ளிட்ட சிறீலங்கா படையினர் மது போதையில் இருந்தமை தெரியவந்தது. இதனால் படையினர் அங்கு ஒன்றுகூடிய மக்களை அச்சுறுத்தினர்.

உடனடியாகவே அங்கு நூற்றுக்கணக்கான சிறீலங்கா படையினர் குவிக்கப்பட்டனர். அங்கிருந்த பொது மக்களை கலைந்து செல்லுமாறு அவர்கள் அச்சுறுத்திவிட்டு தங்களில் பிழை இல்லையென்றும் உந்துருளியைச் செலுத்தியவரின் பிழையினாலேயே விபத்து ஏற்பட்டதாகவும் சமாளித்துவிட்டு அங்கிருந்து வாகனத்தையும் எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர். ஆனால் நள்ளிரவு 12 மணிவரை அங்கு சிறீலங்கா படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டது. யாழ்.காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் சிறீலங்கா படையினருக்கு சார்பாகவே விசாரணைகளை மேற்கொண்டதை அவதானிக்க முடிந்தது.

தமிழர் தாயகப் பகுதியில் நிலைகொண்டுள்ள இலட்சக்கணக்கான சிறீலங்கா படையினரின் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தினமும் மிக வேகமாக வீதிகளில் பயணம் செய்கின்றன. இதனால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு அப்பாவி தமிழ் மக்களின் உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :