சிரியா: சோதனைச்சாவடி மீது இன்று கார்குண்டு தாக்குதல்-30 பேர் பலி

20.10.13

சிரியாவில் ஷியா பிரிவு அதிபர் ஆசாத்துக்கு எதிராக சன்னி பிரிவு போராளிகள் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சிரியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஹமா நகரின் சோதனைச்சாவடியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.

அதிபர் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஹமா நகரின் போக்குவரத்து நிறைந்த சோதனைச்சாவடியில் குண்டுகள் நிரப்பப்பட்ட காரைக்கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. விவசாயிகளின் வாகனத்தில் வந்த போராளிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக அரசு தரப்பு செய்தி நிறுவனம் சனா தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து அப்பகுதிகளில் இருதரப்புக்கும் இடையே தீவிர சண்டை நடந்து வருவதாக கூறப்படுகிறது. நேற்று ஜரமானா சோதனைச்சாவடியில் நடந்த தாக்குதலில் ராணுவத்தினர் 16 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :