புலிகளின் செயற்பாடுகளால் படைகளைச் சேர்ந்த 28158 பேர் பலியாம்??

26.10.13

1980 ஆம் ஆண்டு முதல் யுத்தம் முடிவடையும் காலப்பகுதி வரை வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளால் சிறிலங்கா படைகளைச் சேர்ந்த 28 ஆயிரத்து 158 பேர் உயிரிழந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

 இந்த தரவானது இறுதி யுத்தத்தில் உயிரிழந்த படையினரின் எண்ணிக்கையை விடவும் குறைவான எண்ணிக்கையைக் கொண்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது ஐ.தே.க. எம்.பி. புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு  சபாபீடத்தில் சமர்ப்பித்த பதிலிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1980 ஆம் ஆண்டு தொடக்கம் யுத்தம் முடிவுக்கு வரும் வரை வடக்கு,  கிழக்கு பிரதேசங்களில் இடம்பெற்ற புலிகளின் செயற்பாடுகளினால்  முப்படைகளையும் சேர்ந்த  24 ஆயிரத்து 992 பேரும் பொலிஸ் படையில் 2 ஆயிரத்து 159 பேரும் விசேட அதிரடிப் படையில் 462 பேரும் சிவில் பாதுகாப்புப் படையில் 545 பேருமாக மொத்தம் 28 ஆயிரத்து 158 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது கூட இராணுவ ஆஸ்பத்திரிகளிலும் அதற்கு நிகரான இடங்களிலும் 357 பேர் சிகிச்சை  பெற்று வருகின்றனர். அதேவேளை  போரில் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்காக இதுவரை 92.39 மில்லியன் ரூபா நஷ்ட ஈடாக செலுத்தப்பட்டுள்ளது.

1971 மற்றும் 1988, 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறிலங்காவில் ஏற்பட்ட கிளர்ச்சிகளின் காரணமாக மேற்படி படைப் பிரிவுகளைச் சேர்ந்த 883 பேர் உயிரிழந்துள்ளனர். இக்காலப்பகுதியில் 320 பேர் அங்கவீனமாகினர். இவர்களுக்கு நஷ்ட ஈடாக 37.97 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்பு அமைச்சு பாராளுமன்றத்ததிற்கு அறிவித்துள்ளது.

இதேவேளை, வன்னிப் பெருநிலப்பரப்பில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலகளின் எதிர்த் தாக்குதல்களிலேயே பல்லாயிரக்கணக்கான படையினர் உயிரிழந்த நிலையில் இதுவரை இடம்பெற்ற யுத்தத்தில் 28ஆயிரத்து 158 படையினர் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளமையானது நகைப்புக்கிடமானது என்று அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கம் சிங்கள மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக்கொண்டே இந்த தகவல்களைத் தெரிவித்துள்ளதாகவும் சிங்கள மக்கள் அனைவரும் முட்டாள்கள் இல்லை என்றும் அவர்கள்   தெரிவித்துள்ளனர்.

0 கருத்துக்கள் :