13 ஐ அதிகாரங்களுடன் நடைமுறைப்படுத்துங்கள்;மஹிந்தவிடம் வலியுறுத்துவார் குர்ஷித்; கூட்டமைப்புடனும் இன்று பேச்சு.

7.10.13

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் முக்கிய செய்தியுடன் இருநாள் பயணம் மேற்கொண்டு இன்று காலை இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், அரச தரப்பினரையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்தித்துப் பேச்சு நடத்தும்போது, 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமாகியுள்ள வடக்கு மாகாணசபைக்கான அபிவிருத்தி உட்பட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடுவார் என்று அறியமுடிகின்றது.

அத்துடன்,  இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்  கொடுத்தனுப்பியுள்ள முக்கிய  செய்தியை இந்தச் சந்திப்பின் போது ஜனாதிபதி மஹிந்தவிடம்  குர்ஷித் கையளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ­ மற்றும்  பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ஷ ஆகியோரையும் இந்திய வெளி விவகார அமைச்சர் சந்தித்துப் பேச்சு நடத்துவார் எனவும் தெரியவருகின்றது.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சில்  வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸூடன் சல்மான் குர்ஷித் பேச்சு நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது சம்பூர் அனல் மின்நிலையம் தொடர்பான உடன்பாடுகளும் கைச்சாத்திடப்படவுள்ளன. அத்துடன், மீனவர்கள் பிரச்சினை குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.

அதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும்  இடையிலான சந்திப்பு  இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் தலைமையில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.இதன்போது பல முக்கிய விடயங்கள் குறித்து அவருடன் தாம் பேச்சு நடத் தவுள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்  தெரிவித்தார்.

நாளை செவ்வாய்க் கிழமை வடக்கு மாகாண முதலமைச்சரையும், ஆளுநரையும் யாழ்ப்பாணத்தில் வைத்துச் சந்திக்கவுள்ளார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித். இதன்போது வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கு இந்திய அரசின் வாழ்த்துக்களையும் அவர் தெரிவிக்கவுள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்த பின்னர் சந்திக்கும் முதல் வெளி நாட்டுப் பிரமுகராக சல்மான் குர்ஷித் இடம்பெறுகின்றார்.இறுதியாக மாலை 5.30 மணிக்கு ஊடகவியலாளர்களுடன் சந்திப்பை நடத்துவார். இதன் பின்னர் மாலை 6 மணிக்கு பலாலி விமான நிலையம் ஊடக மீண்டும் அவர் கொழும்பு திரும்பவுள்ளார் என்று இந்தியத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

0 கருத்துக்கள் :