பிளவுபடாத நாட்டிற்குள் தமது அபிலாசைகளை அடையவே தமிழ் மக்கள் விரும்புகின்றனர் : சம்பந்தன் எம்.பி

23.9.13

ஐக்கியம் மற்றும் பிளவு படாத நாட்டிற்குள் பாதுகாப்பாகவும் சுயமரியாதையோடும் கௌரவமாகவும் போதிய சுயஆட்சி பெற்று வாழ்ந்து தமது நியாயமான அரசியல் பொருளாதார சமூக கலாசார அபிலாசைகளை அடையவே தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள் என்பதையே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி வெளிப்படுத்தி நிற்பதாக தமிழரசுக்கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்லேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், இ.சரவணபவான், ஸ்ரீதரன், சுமந்திரன், வட மாகாண சபையின் முதலமைச்சர். சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இதில் சம்பந்தன் வெளியிட்ட வடக்கு மாகாண சபைத்தேர்தல் 2013 முடிவுகள் சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையின் முழு விபரமும் வருமாறு.
வட மாகாண சபைத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு (இலங்கை தமிழ் அரசுக்கட்சி )நாட்டின் அரசியல் சரித்திரத்தில் முன்னெப்போதும் ஒருவரும் அடையாத அமோக வெற்றியீட்டியுள்ளது. வட மாகாணத்தில் ஏறத்தாழ 80 வீதமான ஆசனங்களையும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏறத்தாழ 90 வீதமான ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.

மக்களின் ஐனநாயக தீர்ப்பு மிகவும் தெளிவாக உள்ளது. ஐக்கியம் பிளவுபடாத நாட்டிற்குள் பாதுகாப்பாகவும் சுயமரியாதையோடும் கௌரவமாகவும் போதிய சுய ஆட்சி பெற்று வாழ்ந்து தமது நியாயமான அரசியல் பொருளாதார சமூக கலாசார அபிலாசைகளை அடையவே தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள்.

இந்த இலக்கை அடைவதற்க்கு நாம் அர்ப்பணிப்போடு செயற்படும் அதேவேளையில் அரசாங்கமும் தனது பங்களிப்பை முழுமையாகச் செய்யும் என்று எதிர் பார்க்கிறோம். இந்த தேர்தலின் பெறுபேறுகள் அனைவரும் ஆரோக்கியமான திசையில் பயணிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை தந்திருக்கின்றது.

இந்த தேர்தலில் தாம் சந்திக்க நேர்ந்த பலவிதமான துன்புறுத்தல்களின் மத்தியிலும் வட மாகாணத்தைச் சோந்த தமிழ் மக்கள் தெளிவாகவும் துணிவாகவும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். இந்த ஐனநாயகத் தீர்ப்புக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என நாம் வற்புறுத்திக் கேட்கின்றோம்.

எமது மக்கள் முழுமையாக எம்மை ஆதரித்தமைக்காக எங்கள் இதயபூர்வமான நின்றிகளை தெரிவித்துக்கொள்ளும் அதே வேளையில் அவர்கள் தமது அபிலாசைகளை அடைவதற்கு எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று கூற விரும்புகின்றோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :