மீண்டும் பொன்சேகாவின் பொறுப்பற்ற பேச்சு

9.9.13

இறுதி யுத்தத்தில் காணாமல்போனவர்கள் என்று எவருமில்லை. அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்திருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவர் யாழ். ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் நடத்திய செய்தியாளர் மாநாட்டின்போதே இந்தக் கருத்தினை கூறியிருக்கின்றார்.

இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்தோ ஒப்படைக்கப்பட்டோ காணாமல்போனவர்கள் என்று எவருமில்லை. இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த, ஒப்படைக்கப்பட்ட 12 ஆயிரம் புலிகள் இயக்க உறுப்பினர்களும் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டனர்.

 இந்த யுத்தத்தில் 23 ஆயிரம் புலிகள் கொல்லப்பட்னர். அவர்களுள் இந்த காணாமல்போனவர்கள் என்று சொல்லப்படுபவர்களும் உள்ளடங்கியிருக்கலாம். இறுதி யுத்த காலப் பகுதியில் நாள்தோறும் 50 தொடக்கம் 60 புலிகள் கொல்லப்பட்டனர்.

 அவர்கள் இறுதி மரியாதை செய்யப்பட்டு புலிகளால் எரிக்கப்பட்டதை நாம் ஆளில்லாத விமானமூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அவதானித்தோம். அந்தச் சந்தர்ப்பத்தில் உயிரிழந்த புலிகளின் குடும்பத்திற்கு உயிரிழப்புக்கள் குறித்து புலிகளால் அறிவிக்கப்படாமல் இருந்திருக்கலாம். இத்தகையவர்களையே தற்போது காணாமல்போனவர்கள் என பெற்றோர்கள் தேடலாம்.

 இராணுவத்தினரிடம் பிள்ளைகள், பெற்றோர்களினால் கையளிக்கப்பட்டிருந்தால் இராணுவத்தினரால் பதிவெடுக்கப்பட்டிருக்கும். அதற்கான ஆவணங்களும் வழங்கப்பட்டிருக்கம் என்றும் சரத் பொன்சேகா இந்தச் செ்யதியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ளார்.
காணாமல்போன ஆயிரக்ணக்கானோரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தமது உறவுகளைத் தேடி கடந்த 4 வருடங்களுக்கு மேலாக அலைந்து வருகின்றனர். நாள்தோறும் கண்ணீர் சிந்திவரும் இந்த உறவுகளுக்கு சரத் பொன்சேகாவின் கருத்தானது மீண்டும் பேரிடியாக அமைந்துள்ளது.

யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் கொழும்பு உட்பட வடக்கு, கிழக்கில் பெருமளவானோர் காணாமல்போயிருந்தனர். வெள்ளை வேன்களில் பெருமளவானோர் கடத்தப்பட்டிருந்தனர். கைதுசெய்யப்பட்ட பலர் காணாமல்போயினர். யுத்தத்தின்போது சரணடைந்தவர்களில் பெருமளவானோர் காணாமல்போயுள்ளனர். யுத்தத்தின்போது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு முன்பாக இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பிலும் இதுவரை தகவல்கள் பெறமுடியாத சூழலும் காணப்படுகின்றது. இவ்வாறு சரணடைந்த சிலரது உறவினர்கள் வவுனியா மேல்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்களையும் தாக்கல் செய்துள்னர். இந்த மனுக்கள் மீதான விசாரணையும் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்தநிலையில் யுத்தத்தின்போது காணாமல்போனவர்கள் என்று எவரும் இல்லை என அரசாங்கம் கூறிவந்தது. அதனையே தற்போது முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகாவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் அமைத்த நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் காணாமல்போனோரது உறவினர்கள் அழுது குளறி தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். பெருமளவானோர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க முடியாத நிலையில் எழுத்துமூலமாக தமது கோரிக்கைகைள கையளித்திருந்தனர்.

இதனையடுத்து காணாமல்போனோரது விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டுமென் நல்லிணக்க ஆணைக்குழு தமது பரிந்துரைகளில் கூறியிருந்தது. இதனைவிட இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பவேண்டுமென்றம் பரிந்துரைத்தது.

0 கருத்துக்கள் :