அரசுக்கு எதிராக நவநீதம்பிள்ளை ஆபத்தான அறிக்கையினை சமர்ப்பிபது உறுதி

2.9.13

நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டுக்குள் உரிய வகையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தால் நவநீதம்பிள்ளை இலங்கை வந்திருக்கமாட்டார்.

 இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என்றும் அவர் கூறியிருக்கமாட்டார் என்று ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளரும் எம்.பி.யுமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

இலங்கை வந்திருந்த ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கருத்து தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

 இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,
நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரியவகையில் விசாரணை நடத்தப்படாமையே நவநீதம்பிள்ளையின் வருகைக்கு காரணமாகும்.

 நவநீதம்பிள்ளையின் வருகையின்போது வெலிவேரிய தாக்குதல் சம்பவம், ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தல், கிராண்ட்பாஸ் பள்ளிவசால் தாக்குதல் சம்பவம் என்பன நாட்டில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதற்கு சான்றாக அமைந்திருந்தன.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ள கருத்திலிருந்து அரசக்கு எதிரான ஆபத்தான அறிக்கையினை அவர் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிப்பது நிச்சயமாகியுள்ளது.

 இராணுவத்தினர் இழைத்த குற்றங்களை இராணுவத்தினர் விசாரிப்பது முறையல்ல என நாம் பல தடவைகள் அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்டியிருந்தோம். ஆனால் அரசாங்கம் அதற்கு செவிசாய்க்கவில்லை. இதனால்தான் அரசுக்கு எதிராக அந்த விவகாரமும் திசைதிரும்பியுள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ காணாமல் போனோர் என்று எவரும் இல்லை என்றும் அப்படி இருந்தால் அதற்கான பட்டியலை தருமாறும் கோரியுள்ளார்.

காணாமல்போனவர்களை தேடிக் கண்டுபிடிப்பதென்பது அரசாங்கத்தின் கடமையாகும். இதற்கான பட்டியலை மக்களிடம் கோருவது தவறான செயற்பாடாகும்.

 இலங்கை மீது சர்வதேசத்தின் தலையீடு ஏற்படுவதற்கு அரசாங்கமே வழிவகுத்துள்ளது. எனவே இனியாவது மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளக விசாரணையினை ஒழுங்கான முறையில் நடத்த வேண்டும்.

0 கருத்துக்கள் :