ராஜீவ் கொலை விசாரணை. முக்கிய சாட்சி மன்மோகன்சிங்கிற்கு கடிதம்.

16.9.13

ராஜீவ்காந்தி கொலை வழக்கு, குறித்த மத்திய புலனாய்வுத்துறையின் (சிபிஐ) விசாரணையில் குறைபாடுகள் இருப்பதாக, இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் மத்திய புலனாய்வுத்துறை இயக்குனர் ரஞ்சித் சின்ஹா ஆகியோருக்கு முக்கிய சாட்சி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.


ஜெயின் ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளித்த சட்டவாளரான ரமேஸ் தலால் என்பவரே இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.

“ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான, மத்திய புலனாய்வுத்துறை விசாரணையில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன.

ஒரு சில முக்கியமான விவகாரங்கள் விசாரிக்கப்படவில்லை.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரங்கநாதன், விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த கே.பி.எனப்படும் குமரன் பத்மநாதன் ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன் தனித் தனியாக அறிக்கை வெளியிட்டனர்.

அதில், இந்த கொலைச் சதியில், சாமியார் சந்திரசாமிக்கு தொடர்பிருப்பதாக, இவர்கள் தெரிவித்திருந்தனர்.

ஜெயின் ஆணைக்குழுவும் இதைச் சுட்டிக்காட்டியிருந்தது. இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.

மத்திய புலனாய்வுத்துறை தலைமையிலான, பல்நோக்கு விசாரணை அமைப்பு ( எம்.டி.எம்.ஏ) இதை விசாரிக்கும் என்றும் தெரிவித்தது.

ஆனால், இது தொடர்பான விசாரணை, இன்னும் முடிவடையவில்லை.

எனவே, ராஜீவ் கொலை வழக்கில் எழுப்பப்பட்ட சந்தேகங்கள் குறித்து விசாரித்து, மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி, எம்.டி.எம்.ஏ.,வுக்கு உத்தரவிட வேண்டும்.” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1991 மே 21ம் நாள் சிறிபெரும்புதூரில், தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக நீதிபதி மிலாப் சந்த் ஜெயின் தலைமையிலான ஆணைக்குழுவும் விசாரணை நடத்தியது.

இதில், முக்கிய சாட்சியாக முன்னலையானவர் சட்டவாளர் ரமேஸ் தலால் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :