ஈழப்போர் கொழும்புக்கும் வருமாம் - சிறிலங்கா அமைச்சர்

27.9.13

காலம் தாழ்த்தாமல் மாகாணசபைகளின் அதிகாரங்களை சிறிலங்கா அரசாங்கம் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“வடக்கு மாகாணசபைத் தேர்தலில் பெற்றுள்ள வெற்றியை, அரசியல் வழிமுறைகளின் மூலம் தனிநாட்டை உருவாக்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயன்படுத்திக் கொள்ளப் போகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில், ஈழத்தைப் பிரகடனம் செய்யப் போவதாக நேரடியாக கூறப்படவில்லை என்றாலும், நுட்பமாக அதனை செய்யப் போகிறார்கள்.

வடக்கில் கடந்த 30 ஆண்டுகளில் வேறெந்த அரசியல் கட்சிகளும், செயற்படாத நிலையில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பாலான வாக்குகளைப் பெற்றுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட, அங்குள்ள மக்களின் இதயங்களில் இன்னமும் காயங்கள் உள்ளன. அதனால் தான், அங்கு அரசாங்கத்தினால் அதிகளவு வாக்குகளைப் பெறமுடியாது போயுள்ளது.

30 ஆண்டுகாலப் போரில், அவர்கள் புதிதாக எதையும் சிந்திக்கவில்லை. வடக்கில் இன்னமும் புலிகள் இருப்பதாக நினைத்துக் கொண்டே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளனர்.

எனவே தாம்தமின்றி சிறிலங்கா அரசாங்கம் மாகாணசபைகளின் முக்கியமான அதிகாரங்களை பறித்துக் கொள்ள வேண்டும்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலின் போது இந்தியாவும் ஏனைய நாடுகளும் இனவாதத்தை கிளப்பின.
இந்த அனைத்துலக சக்திகள் தமது தலையீடுகள் மூலம் நாட்டில் அமைதி ஏற்படுவதைத் தடுத்தன.

வடக்குக்கு சென்ற நவநீதம்பிள்ளை அந்த மக்களுக்கு போர் தொடர்பான பழைய துன்பியல் நிகழ்வுகளை ஞாபகப்படுத்தியதால், வடக்கில் சுதந்திரமான நியாயமான தேர்தல் நடப்பது தடுக்கப்பட்டுள்ளது.
இதுவே வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற உதவியது.

.
முன்னர், பிரபாகரனின் துப்பாக்கிக்கு பயந்து, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் விரும்பியது போல வாக்களித்தனர்.
இப்போது அவர்கள் பாரிசில் இருந்தும், ரொறன்ரோவில் இருந்தும் வரும் தொலைபேசி அழைப்புகளுக்குப் பயந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளனர்.

எனினும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தாளத்துக்கு ஏற்ப, நாட்டின் அரசியலை ஆட நாம் விடப் போவதில்லை.
ஈழத்துக்கான போர் கொழும்புக்கும் வரும். சி.வி.விக்னேஸ்வரன் வெள்ளவத்தையையும் மட்டக்குளியையும் நந்திக்கடலாக மாற்றுவார்.

இவர்கள் பிரபாகரனின் அரசியல் போரை முன்னெடுக்கின்றனர். இது குரங்கு கத்தியை எடுத்தது போலாகும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :