நந்திக்கடலில் அஞ்சலி செலுத்த முயன்ற நவநீதம்பிள்ளை – தடுத்து நிறுத்தியது சிறிலங்கா அரசு

1.9.13

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில், உயிரிழந்தவர்கள் நினைவாக நந்திக்கடலில், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த, நவநீதம்பிள்ளை விரும்பிய போதும், சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்ப்புக் காரணமாகவே, அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாக, தெரியவந்துள்ளது.

நந்திக்கடலில், நவநீதம்பிள்ளை மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளதான தகவல்,சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மற்றும், வெளிவிவகார அமைச்சு மூலம் பெற்றுக் கொண்ட சிறிலங்கா அரசாங்க உயர்மட்டம், குழப்பமடைந்தது.
இதையடுத்து. கொழும்பிலுள்ள ஐ.நா பணியகத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டது.

அதற்கு அவர்கள் அதுபற்றித் தாம் அறியவில்லை என்று நிராகரித்திருந்தனர்.
இதையடுத்து, அவ்வாறு மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்வது மோசமான தாக்குதலாக கருதப்படும் என்றும், மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்றும் நவநீதம்பிள்ளையின் மூத்த அதிகாரிகளுக்கு, சிறிலங்கா அரசாங்கத் தரப்பில் ஆலோசனை கூறப்பட்டது.

இந்தநிலையில், இதுகுறித்து நேற்று செய்தியாளர் சந்திப்பில், நவநீதம்பிள்ளையிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், தான் இறந்தவர்களை மதிப்பதாகவும், எந்த நாட்டுக்குச் சென்றாலும், இறந்தவர்களை அஞ்சலி செலுத்த விரும்புவது வழக்கம் என்றும் கூறினார்.

அதுபோலவே, விடுதலைப் புலிகள், படையினர், பொதுமக்கள் எல்லோருக்கும் அஞ்சலி செலுத்த விரும்பியதாவும் குறிப்பிட்ட அவர், மொஸ்கோவிலும், இதை செய்தாகவும், கௌதமாலாவில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கும் தாம் அஞ்சலி செலுத்தியதாகவும் தெரிவித்தார்.

அதுபோலவே இங்கு செய்ய விரும்பினேன். அவ்வாறு செய்திருக்க முடியும், ஆனால், சில காரணங்களுக்காக அதுபற்றி இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், அஞ்சலி செலுத்துவது குறித்து, நவநீதம்பிள்ளையின் பணியகம் சிறிலங்கா அரசிடம் வலியுறுத்திய போது, அந்தக் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தினால், முல்லைத்தீவுக்கான ஒட்டுமொத்த பயணமும் நிறுத்தப்படும் என்று சிறிலங்கா அரசதரப்பில் கூறப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துக்கள் :