மக்களின் அபிலாசைகளை ஏற்க மறுத்தால் பிரச்சினை தான் ஏற்படும் – சி.வி.விக்னேஸ்வரன்

23.9.13

மக்களின் அபிலாசைகள் என்ன என்பதை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொள்வதில் தான் எதிர்காலமே தங்கியுள்ளது என்று வடக்கு மாகாணசபை முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“வடக்கில் பிரச்சினைகளின்றித் தேர்தல் நடக்கவில்லை. சில பிரச்சினைகள் இடம்பெற்றன.

அத்துடன், இந்தத் தேர்தலை நடத்தி விட்டோம் என்று மார்தட்ட வேண்டிய அவசியம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இல்லை.
சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து 13வது திருத்தச்சட்டத்தை நல்லமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கம்.
பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள் என்பதால், எமது பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் தான் கேட்க வேண்டும்.
 அத்துடன், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கமாட்டோம், எதேச்சாதிகாரமாகவே நடப்போம், அதேபோன்று நீங்கள் நடந்து கொள்ளுங்கள் என்று சொன்னால், பிரச்சினைகள் தான் ஏற்படும்.
சிறிலங்கா அரசாங்கத்துடன் சேர்ந்து ஜனநாயக முறைப்படி உருவாக்கப்பட்ட நிறுவனங்களை நல்லமுறையில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

இராணுவத்தில் இருந்த ஒருவர் ஆளுநராக இருப்பதால், பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
அவர் மக்களின் பிரச்சினைகளை முறையாக சரியாக உணர்ந்து செயற்படுத்துகிறாரா என்ற கேள்வி எழுகிறது.
சிவில் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் பிரச்சினைகளை புரிந்து - தெரிந்து கொண்ட ஒருவர் ஆளுநராக இருந்தால் தான் நல்லது. அதற்குத் தொடர்ந்தும் வலியுறுத்துவோம்.

சிவில் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை, சிறிலங்கா அதிபர் ஆளுனராக நியமிக்கவுள்ளதாக, கேள்வியுற்றுள்ளோம்.
அவருடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேசுவோம்.
சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படுவோம் என்பதால், அவர்களுடன் இணைந்து கொள்வதாக அர்த்தமில்லை.
இணைந்து செயலாற்றுவதற்கும், இணைந்து பேச்சு நடத்துவதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன.

எமக்கென்று சில உரிமைகள் இருக்கின்றன. சட்டப்படி எமக்குள்ள உரிமைகளை பெரும்பான்மை மக்களிடம் இருந்து, எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
எமக்கு எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. பெரும்பான்மை மக்கள் அதுபற்றிய எண்ணங்கள் இன்றி இருக்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

சிறிலங்கா அரசாங்கம் தனது போக்கை மாற்றி எம்முடன் இணைந்து, செயற்பட வேண்டும்.
அரசுடன் பேசும் போது உரிமையுடன் பேச வேண்டும். இப்போது பேசுவதற்கு மக்களின் ஆணை கிடைத்திருக்கிறது. அது வலிமையானது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :