தேசப்பற்றாளர் இ.செந்தில்குமரனுக்கு வீரவணக்கம், ஆடுகளம் இடைநிறுத்தம்

7.9.13

எமது அன்பிற்குரிய ஐரோப்பா வாழ் தமிழ் உறவுகளே…!
05.09.2013 வியாழக்கிழமை அன்று தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு யெனிவா ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் தமிழ்த் தேசப்பற்றாளர் ஒருவர் தன்னையே உயிர்த்தியாகம் செய்துள்ளார்.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் திருவுருவப் படத்தினை ஏந்தியவாறு சென்று தமிழ்மக்களின் விடியலுக்கு ஆதரவாக முழக்கமிட்டு, பின்னர் தீயினில் தன்னையே ஆகுதியாக்கியுள்ளார். அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் முகமாகவும், அவரின் அளப்பரிய உயிர்த்தியாகத்திற்கு மதிப்பளித்தும் ஐரோப்பா எங்கும் நடைபெறவிருந்த அனைத்து நிகழ்வுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில் 08.09.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று சுவிற்சர்லாந்தில், சொலர்தூன் மாநிலத்தில் அனைத்துலக ரீதியில் நடைபெறவிருந்த ஆடுகளம் மாபெரும் நடனப்போட்டி நிகழ்வானது சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினராகிய எம்மாலும் இடைநிறுத்தப்பட்டுள்ளது என்பதனை உத்தியோகபூர்வமாக அறியத்தருகின்றோம்.
தமிழ்த் தேசப்பற்றாளராகிய இரட்ணசிங்கம் செந்தில்குமரன் அவர்களின் நினைவுகளைச் சுழந்தும், தொடர்ச்சியாக நடைபெற்று வரும் தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டும் 16.09.2013 திங்கட்கிழமை அன்று ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் அமைந்துள்ள முருகதாசன் திடலில் பிற்பகல் 14:00 மணி தொடக்கம் மாலை 17:00 மணி வரை நடைபெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலிலும் கலந்து கொண்டு அனைத்துலக சமூகத்திடம் நீதிகேட்க அனைத்து தமிழ் உறவுகளையும் குறிப்பாக இளந்தலைமுறையினர் அனைவரையும் அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழ்த் தேசப்பற்றாளர் அவர்களுக்கு எமது வீரவணக்கங்களைச் செலுத்துவதோடு கண்ணீர் வணக்கங்களையும் காணிக்கையாக்குகின்றோம்.
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்“
நன்றி
சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு

0 கருத்துக்கள் :