புலிகளைப் போலவே கூட்டமைப்பையும் அழிக்க நினைக்கிறார் மகிந்தர்

13.9.13

சிங்கள மக்கள் மத்தியிலும், அனைத்துலக அளவிலும் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக காண்பித்து, அழித்தது போலவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் முடிவுகட்ட சிறிலங்கா அதிபர் முற்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார் தமிழ்த் தேசியக கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன்.

யாழ்.நாவாந்துறையில் நேற்று நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“தம்பி பிரபாகரன் கேட்டதையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் கேட்பதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
சட்டம் படித்ததாக கூறிக்கொள்ளும் அவருக்கு, தனிநாட்டுக் கோரிக்கைக்கும், சமஸ்டிக்கும் வித்தியாசம் தெரியாதா?
தம்பி பிரபாகரன் கேட்டது தனிநாடு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்பது ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு.
சிறிலங்கா அதிபர் இதனை புரிந்து கொள்ளாமல் பேசுகிறாரா அல்லது உள்நோக்கத்துடன் பேசுகிறாரா என்று சந்தேகம் வருகிறது.

அவர் உள்நோக்கத்துடன் பேசியிருந்தால், விடுதலைப் புலிகளை சிங்கள மக்களிடமும், அனைத்துலக அளவிலும் எவ்வாறு பயங்கரவாதிகளாக சித்திரித்தார்களோ, அதுபோலவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும் சித்திரித்து எமக்கும் முடிவுகட்ட நினைக்கிறார் என்றே கருத வேண்டும்.

1956ம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்ட போது தமிழ் மக்களையும் சிங்கள அரசாங்கம் கருத்தில் கொண்டிருந்தால், நாங்கள் இந்தநிலைக்கு வந்திருக்கமாட்டோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :