பாலசிங்கத்தின் வெற்றிடத்திற்கே விக்னேஸ்வரன் நியமனம்

30.9.13


தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரான அன்டன் பாலசிங்கத்தின் வெற்றிடத்தை நிரப்பும் விதமாக அவருக்கு சரி சமமாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்படுவதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவிக்கின்றது.

நேற்று பத்திரமுல்லையில் உள்ள அக்கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் அதன் ஊடகப் பேச்சாளர் முஸம்மில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி கருத்து வெளியிடப்பட்டது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முஸம்மில் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கில் தேர்தல் நிறைவடைந்த நிலையில் முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் நியமனம் பெறவுள்ளார். இந்நிலையில் அவர் தமிழ், சிங்கள ஊடகங்களுக்கு வெளியிடும் கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதுடன் பாரிய வித்தியாசத்தையும் காட்டுகிறது.

அன்று புலிகளின் அன்டன் பாலசிங்கம் மேற்கொண்ட உபாயங்களையே விக்னேஸ்வரனும் கையாள்கிறார். தெற்கில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை எந்த வகையிலும் குழப்பாது தனித் தமிழீழம் நோக்கிய திட்டத்தை விக்கினேஸ்வரன் சூட்சுமமாக முன்னெடுத்துள்ளார்.

முன்னர் அன்டன் பாலசிங்கம் இவ்வாறான அரசியல் ரீதியான வழிமுறையையே தனித் தமிழீழத்துக்காக முன்னெடுத்தார். எனினும் பிரபாகரனின் ஆயுத கலாசாரத்தால் அது சாத்தியமற்றுப் போனது. இந்நிலையில் அன்று அன்டன் பாலசிங்கம் மேற்கொண்ட அரசியல் நகர்வுகள் இன்று விக்னேஸ்வரன் ஊடாக சூட்சுமமாக மேற்கொள்ளப்படுகிறது.


இன்று வடக்கு மக்கள் காணி அதிகாரத்தையோ, பொலிஸ் அதிகாரத்தையோ ஒருபோதும் கோரவில்லை. அதனைவிட அத்தியாவசியமாக தீர்க்கப்பட வேண்டிய எத்தனையோ பிரச்சினைகள் அவர்களுக்கு உள்ளன.

அத்துடன் வடக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த கால எல்லைக்குள் பிரிவினைவாதிகளுக்கு பணம் சேர்க்க அங்கு விஜயம் செய்த ஐ.நா. மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கூற்றுகளையும் நாம் முற்றாக நிராகரிக்கிறோம்.

இந்தியா, அதன் அரசியல் தந்திரங்களை இலங்கைக்குள் செயற்படுத்த முயற்சிக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் உளவுப் பிரிவினால் வேட்பாளராக்கப்பட்ட விக்னேஸ்வரன் வடக்கு மக்களின் பிரதான பிரச்சினையான மீன்பிடி தொடர்பான பிரச்சினைக்கு தாம் மிக அந்நியோன்னியமாக பழகும் இந்தியாவின் மீனவர் அத்து மீறலுக்கு முற்றுப்புள்ளி வைத்துக் காட்டட்டும் என்றார்.

0 கருத்துக்கள் :