குருடாக இருக்கிறார் ஹக்கீம் – கோத்தா பதிலடி

8.9.13

முஸ்லிம் தீவிரவாதம், சிறிலங்காவுக்கு மட்டுமன்றி, பிராந்தியத்திலுள்ள பல நாடுகளுக்கும், அச்சுறுத்தலாக இருப்பதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா இராணுவம் நடத்திய பாதுகாப்புக் கருத்தரங்கில் உரையாற்றிய கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்காவில் முஸ்லிம் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையிலேயே, கோத்தாபய ராஜபக்ச தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
“ரவூப் ஹக்கீம் களநிலவரம் தெரியாமல் – குருட்டுத்தனமாக இருக்கிறார்.

தீவிரவாதத்தினால் உலகமே பாதிக்கப்பட்டு இப்போது நெருக்கடியில் உள்ளது.
தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு நாம் பல நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்றுகிறோம்.
புலனாய்வு அமைப்புகளாலும் ஏனைய சம்பந்தப்பட்ட அமைப்புகளாலும் இதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான கண்காணிப்பின் மூலம், அவர்களின் வன்முறைத் திட்டங்களை முறியடிக்க முடிகிறது.

ஈரான், பாகிஸ்தான், சவூதி அரேபியா போன்ற நாடுகளை ரவூப் ஹக்கீம் இந்த விவாதத்துக்குள் இழுத்து வரக் கூடாது. நான் அந்த நாடுகளை சுட்டிக்காட்டவில்லை.
நான் என்ன கூறினேன் என்பதை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புரிந்து கொள்ளத் தவறிவிட்டது.
தீவிரவாதம் முஸ்லிம் நாடுகள் உள்ளிட்ட எல்லா நாடுகளுக்குமே அச்சுறுத்தல் தான்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்காவுடன் சிறிலங்கா இணைந்து செயற்பட்டது.
ஹக்கீம் அந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த போது தான், தீவிரவாதி ஒருவரை அமெரிக்கப் புலனாய்வு அமைப்பிடம் சிறிலங்கா ஒப்படைத்தது.

உள்ளூர் முஸ்லிம்களை உலகத் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புபடுத்தியதாக ஹக்கீம் தவறாக வழிநடத்த முற்பட்டுள்ளார்.

முஸ்லிம் அடிப்படைவாதம், இந்தப் பிராந்தியத்தில் மட்டுமன்றி, உலகெங்கும் பரவிவருகிறது.
இந்தநிலைமை குறித்து, சட்டத்தை பேணும் அமைப்புகளும் பாதுகாப்புப் படையினரும் கவலை கொண்டுள்ளனர்.

தீவிரவாத அமைப்புகள் சிறிலங்காவில் முஸ்லிம் தீவிரவாதத்தை ஊக்குவிக்க முனையலாம் என்பது, கவலை தரும் ஒரு விடயம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :