பள்ளிவாசல்கள் உடைப்பதை பற்றி பேசுவதானால் சுன்னத் செய்துகொண்டு வாருங்கள்

28.9.13

இஸ்லாமிய பள்ளிவாசல்கள் உடைப்பதை பற்றி பேசுவதானால் சுன்னத் செய்து கொண்டு வாருங்கள் என்றும், மனோ கணேசன் கோவிலை பற்றி பேசவேண்டுமே தவிர பள்ளிவாசலை பற்றி பேசக்கூடாது என்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து ஒளிபரப்பாகும் பிரபல தனியார் தொலைகாட்சியில் சிங்கள மொழியிலான நேரடி அரசியல் விவாத நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், தம்புள்ளை பள்ளிவாசல் உடைப்பு பற்றி பிரஸ்தாபித்த போது, அதற்கு பதிலாக அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஸ்வர் எம்பி, இஸ்லாமிய பள்ளிவாசல்கள் உடைப்பதை பற்றி பேசுவதானால் சுன்னத் செய்து கொண்டு வாருங்கள் என்றும், மனோ கணேசன் கோவிலை பற்றி பேசவேண்டுமே தவிர பள்ளிவாசலை பற்றி பேசக்கூடாது என்றும், தான் சலீம்டீனுக்கு பதில் சொல்லுவேனே தவிர சுப்பையாவுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்றும் பகிரங்கமாக தெரிவித்தார்.

"பலய" என்ற பெயரில் சிங்கள மொழியிலான நேரடி அரசியல் விவாத நிகழ்ச்சி கொழும்பில் இருந்து ஒளிபரப்பாகும் பிரபல தனியார் தொலைக்காட்சியினால் வாராந்தம் நடத்தப்படுகின்றது.
இந்நிகழ்ச்சியில் இவ்வாரம் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன், ஜாதிக ஹெல உறுமயவின் உதவி பொதுச்செயலாளரும், மேல்மாகாணசபை அமைச்சருமான உதய கம்மன்பில, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எம்பி அஸ்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி தற்போது யூடியூப் மற்றும் பல்வேறு சமூக இணையங்களில் காணக்கிடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அரசியல்வாதிகளிடம் பொதுமக்கள் தொலைபேசியில் கேள்வி கேட்கும் சந்தர்ப்பமும் வழங்கப்படுகின்றது.

இதன்போது தம்புள்ளை நகரில் இருந்து முஹம்மத் சலீம்டீன் என்ற நபர் அஸ்வர் எம்பியிடம் தம்புள்ளை பள்ளிவாசல் உடைப்பு பற்றியும், தற்போதும் அந்த பள்ளிவாசலை அகற்ற காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது பற்றியும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலாக அஸ்வர் எம்பி, இந்த பள்ளிவாசல் பிரச்சினையை தங்கள் அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும், இப்போது அங்கு பிரச்சினை இல்லை என்றும், முஸ்லிம் மக்கள் தொடர்பாக அரசாங்கம் நியாயமாக நடந்து கொள்வதாகவும், சிலர் வெளியிலிருந்து மதவாதத்தை தூண்டி விடுவதாகவும் சொல்லிக்கொண்டே போனார்.

இந்த சந்தப்பத்தில் அஸ்வரை இடைமறித்த மனோ கணேசன் ,"அஸ்வர் கேள்வி கேட்டவர் தம்புள்ளையில் இருந்து கேட்டுள்ளார். அங்கு இன்னமும் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை என்கிறார். நீங்கள் ஒன்றும் இல்லை என்று சொல்கிறீர்கள். அவருக்கு நேரடியாக பதில் கூறுங்கள்" என்று சொன்னார்.

இதற்கு பதிலாகவே அஸ்வர் எம்பி மனோ கணேசனை நோக்கி, பள்ளிவாசல்கள் உடைப்பதை பற்றி பேசுவதானால் சுன்னத் செய்து கொண்டு வாருங்கள் என்றும், மனோ கணேசன் கோவிலை பற்றி பேசவேண்டுமே தவிர பள்ளிவாசலை பற்றி பேசக்கூடாது என்றும், தான் சலீம்டீனுக்கு பதில் சொல்லுவேனே தவிர சுப்பையாவுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனோ கணேசன் கூறியதாவது,
இந்த கருத்து மிகவும் வருந்தத்தக்கது.ஆனாலும் இதை முஸ்லிம் மக்களின் கருத்தாக நான் பார்க்கவில்லை. இஸ்லாமிய சகோதரர்கள் எனது மக்கள் என்றே நான் நினைந்து வாழ்கின்றேன். அஸ்வர் போன்றவர்கள் என்னை நிறுத்த முடியாது. இத்தகைய கருத்து புனித இஸ்லாத்துக்கு விரோதமானது என்றே நான் கருதுகின்றேன்.

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் போது நான் இன, மத பேதம் பார்ப்பதில்லை. தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை தொடர்பாக நாட்டின் கவனத்தை ஈர்க்கும் முதல் ஆர்ப்பாட்டம் மாகாணசபை உறுப்பினர் நண்பர் முஜிபுர் ரஹ்மானினால் கொழும்பில் நடத்தப்பட்ட போது அதில் நான் அக்கறையுடன் கலந்துகொண்டேன், தொடர்ச்சியாக நண்பர் அசாத் சாலியுடன் இணைந்து முஸ்லிம் சகோதர மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக போராடி வருகிறேன்.

சமீபத்தில் வெலிவேரிய ரதுபஸ்கல கிராமத்தில் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்ட போது, உடனடியாக அந்த கிராமத்து மக்களுக்கு தலைமை தாங்கும் பெளத்த தேரரை அழைத்து நண்பர் விக்கரமபாகு கொழும்பில் ஏற்பாடு செய்து நடத்திய ஆர்பாட்டத்தில் நான் அக்கறையுடன் கலந்துகொண்டேன்.
மலையக தோட்ட தொழிலாளரின் சம்பள உயர்வு தொடர்பாக கூட்டு ஒப்பந்தம் என்ற மோசடியை எதிர்த்து மலையக தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் என்ற முறையில் கொட்டகலையில் ஆர்ப்பாட்டம் செய்தேன். கொட்டகலையில் யாருக்காக ஆர்ப்பாட்டம் செய்தேனோ அந்த மக்களை சார்ந்த ஒரு பிரிவினரே என்னை கல்லால் அடித்து இரத்தம் சிந்த வைத்து காயப்படுத்தினார்கள்.

மலையக மக்களுக்காக குரல் கொடுக்காதே என்று அவர்கள் கல்லால் அடித்தார்கள். இன்று முஸ்லிம் மக்களுக்காக பேசாதே என்று அஸ்வர் சொல்லால் அடிக்கிறார்.
வடக்கில் வாழும் மக்களுக்காக குரல் கொடுக்கிறேன். அங்கேயும் எனக்கு ஒருநாள் அடிவிழுமோ தெரியவில்லை.

ஆகவே இது எனக்கு புதிய அனுபவம் அல்ல. என் பணி தொடரும்.
ஆனால், இத்தகைய சம்பவங்கள் என் உள்ளத்தில் அரசியல் தொடர்பாக ஒருவித சலிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை மறுக்க முடியாது..

0 கருத்துக்கள் :