இழப்புக்கள் ஏற்பட்ட போதும் வடக்கு மக்கள் தன்னம்பிக்கையை இழக்கவில்லை அப்துல் மஜீத்

22.9.13

நடந்து முடிந்த மாகாண சபை தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது எத்தனை இழப்புக்கள் ஏற்பட்ட போதும் வடக்கு தமிழ் மக்கள் தன்னம்பிக்கையை இழக்கவில்லை என்பது தெரிகிறது என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

வடமாகாண சபை தேர்தல் முடிவுகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி பிழைக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய ஏமாற்றுக்கட்சிகளை பெரும்பாலான முஸ்லிம்கள் நிராகரித்துள்ளமையையும் காட்டுகிறது.

மன்னார், அமைச்சர் ரிசாதின் மாவட்டமாக இருந்தும் அங்கு ஆளுங்கட்சி ஒரு ஆசனத்தையே பெற்றுள்ளதன் மூலம் அவரது கட்சி வட மாகாண முஸ்லிம்களுக்கு உதவாமல் அவர்களை வைத்து பிழைப்பு நடத்துகிறது என்பது தெரிகிறது. எதிர்காலத்தில் அவர் தனது கட்சியை தூக்கி வீசிவிட்டு வன்னி முஸ்லிம்களுக்கு வேலை செய்யாவிட்டால் அடுத்த பாராளுமன்ற தேர்தல் அவருக்கு கேள்விக்குறியாகி விடும். அதன் பின் அவரை வைத்து பிழைப்பு நடத்தும் செயலாளர் நாயகம் கல்முனைக்கு ஓட வேண்டிய நிலைவரும்.

அதேபோல் 1988ம் ஆண்டு வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் 17 உறுப்பினர்களை கண்டது. இன்று 25 வருடங்களின் பின் வடக்கிலும் கிழக்கிலும் 8 பேரையே கொண்டிருப்பதன் மூலம் பாதி ஆதரவை அக்கட்சி இழந்துள்ளது என்பதன் மூலம் ரஊப் ஹக்கீமின் தலைமை மறுக்கப்பட்டுள்ளது.

இதுதான் ஹக்கீமின் சாதனையாகும். கிழக்கு மாகாணத்தை ஏமாற்றி கொதள்ளையடித்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரசின் ஏமாற்று போராளிகள் வடக்குக்கு படை எடுத்தும் அவர்களால் ஒரு உறுப்பினரையே பெற முடிந்துள்ளது என்பது மிகப்பெரிய அவமானமாகும்;.

இதன் மூலம் 2005 முதல் முஸ்லிம் காங்கிரசை கடுமையாக விமர்சித்து வரும் எமக்கு பாரிய வெற்றி கிடைத்துள்ளதாகவே நாம் காண்கிறோம். அதே போல் அ. இ. முஸ்லிம் காங்கிரசும் முஸ்லிம்களை ஏமாற்றுகிறது என பகிரங்கமாக குற்றம் சாட்டிய ஒரேயொரு முஸ்லிம் கட்சியும் நாமே. அந்த வகையில் அக்கட்சியின் தோல்வி எமது பிரச்சாரத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.

அதே போல் அசாத் சாலியின் கட்சி புத்தளத்திலும், அவரது ஆட்கள் வடக்கில் போட்டியிட்டும் படு தோல்வி அடைந்திருப்பதன்; மூலம் அவரது தலைமையையும் முஸ்லிம் சமூகம் நிராகரித்துள்ளது. அவர் கன்டியில் ஐ தே கவில் போட்டியிடாமல் சுயேச்சையாக போட்டியிட்டிருந்தால் படுதோல்வியடைந்திருப்பார் என்பதை இது மிகத் தெளிவாக காட்டுகிறது.

அதேபோல தொலைக்காட்சியை வைத்து மக்களை ஏமாற்றலாம் என குதித்த ஸ்ரீரங்கா மோசமான படுதோல்வியை அடைந்துள்ளார். ஐ தே க மூலம் நுவரேலிய மாவட்ட மக்களை ஏமாற்றி வென்ற அவர் மீண்டும் ஐ தே கவில் சேர்ந்தால் மட்டுமே அடுத்த பாராளுமன்றத்துக்கு புட் போட்டிலாவது வர முடியும் என்ற செய்தியை மலையக மக்கள் அவருக்கு புகட்டியுள்ளார்கள்.
மொத்தத்தில் முஸ்லிம் தமிழ் மக்களை ஏமாற்றி அரசுடன் ஒட்டிக்கொண்டு சமூகத்தை காட்டிக்கொடுக்கும் அரசியல்வாதிகளுக்கு மக்கள் நல்ல பாடத்தை இத்தேர்தலில் கற்றுக்கொடுத்துள்ளார்கள்.
 ஆனாலும் வடக்கு தமிழ் மக்கள் தமது ஜனநாயக ரீதியிலான உரிமைப்போராட்டத்தில் பாரிய வெற்றியை கண்ட நிலையில் முஸ்லிம் சமூகம் இப்போதுதான் ஒரு அடியை எடுத்து வைத்துள்ளது என்பது தான் கவலையான விடயமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :