பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்த முயன்றார் நவநீதம்பிள்ளை

3.9.13

சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கொழும்பில் வெளியிட்ட கருத்துகள், முற்றிலும் நியாயமற்ற – தவறான – பக்கசார்புடையவை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

நவநீதம்பிள்ளையின் அறிக்கையின் தொனி மற்றும் பொருள் என்பன நடுநிலைமைக் குறைபாட்டை வெளிப்படுத்துவதாக உள்ளது என்றும் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கம்போடியாவிலும், யூகோஸ்லாவியாவிலும் போர் முடிந்து பல ஆண்டுகளாகியும் செய்யமுடியாத புனரமைப்புப் பணிகளை சிறிலங்கா அரசாங்கம் நான்கே ஆண்டுகளில் செய்திருப்பதாகவும், அதை நவநீதம்பிள்ளை கவனத்தில் கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிப்படைத்தன்மை மற்றும் தெளிவான நோக்குடனேயே சிறிலங்கா அரசாங்கம், நவநீதம்பிள்ளைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அவருக்கு எந்த இடத்துக்கும் செல்வதற்கு தடைவிதிக்கப்படவில்லை என்றும் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால், வடக்கில் சிறிலங்கா இராணுவத்தின் பங்கு தொடர்பாக அவர் கடுமையாக விமர்சித்துள்ளதாகவும், சிறிலங்கா படையினர் அழையா விருந்தாளியாக, தேவையின்றி தலையீடு செய்வதாகவும், ஒடுக்குமுறைகளை கையாள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது தவறானது.

சிறிலங்கா எதேச்சாதிகாரப் பாதையில் செல்வதாக குற்றம்சாட்டிய நவநீதம்பிள்ளை அதற்கான ஆதாரங்களை வழங்கவில்லை என்றும், நவநீதம்பிள்ளையை சந்தித்தவர்கள் மிரட்டப்பட்டுள்ளதாக கூறிய குற்றச்சாட்டுக்கும், அவர் ஆதாரங்களை தரவில்லை என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

நவநீதம்பிள்ளையை சந்தித்தவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், அவர்கள் மிரட்டப்பட்டதற்கு ஆதாரங்கள் தரப்பட்டால் விசாரிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்காலில், நவநீதம்பிள்ளை மலர்வளையம் வைக்க இருந்து திட்டத்தை அவர் சிறிலங்கா அரசாங்கத்துக்கு தெரியாமல் மறைத்திருந்தார்.

எனினும் அந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.
போரில் கொல்லப்பட்ட அனைவருக்காகவும் அவர் அஞ்சலி செலுத்தி விரும்பியிருந்தால், அதற்கு பொதுவான ஒரு இடத்தை தெரிவு செய்திருக்கலாம்.  இது ஒருதலைப்பட்சமானது என்றும் பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

0 கருத்துக்கள் :