ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிருடன் மீட்பு

28.9.13

ஆரணி அருகே 200 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவ குழு உதவியுடன் மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சியால் 9 மணி நேரத்திற்கும் மேலானா போராட்டத்திற்கு பிறகு சிறுமி பத்திராமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த புலவன்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனி (32), விவசாயி. இவரது மனைவி மலர்க்கொடி (28). இவர்களது ஒரே மகள் தேவி (4). இவள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படிக்கிறாள். அதே கிராமத்தை சேர்ந்த சங்கரன் என்பவரது விவசாய நிலத்தில் வேர்க்கடலை பறிக்க இன்று காலை மலர்க்கொடி சென்றார்.

பள்ளி விடுமுறை என்பதால் குழந்தை தேவியையும் தன்னுடன் அழைத்து சென்றார். சங்கரன் விவசாய நிலத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 400 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறு தோண்டி உள்ளார். ஆனால், தண்ணீர் வரவில்லை. அதனால் ஆழ்துளையை மூடாமல் விட்டுள்ளார். இந்நிலையில் காலை 8 மணிக்கு சங்கரனின் விவசாய நிலத்தில் மலர்க்கொடி வேர்க்கடலை பிடுங்கி கொண்டிருந்தார்.

 அங்கு விளையாடி கொண்டிருந்தாள் சிறுமி தேவி. சிறிது நேரம் கழித்து குழந்தை இல்லாததை கண்டு மலர்க்கொடி தேடினார்.
அப்போது வேர்க்கடலை பயிர் அருகே மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து சிறுமியின் அலறல் குரலை கேட்டு மலர்க்கொடி அதிர்ச்சி அடைந்தார். அப்போது குழந்தை அம்மா, அம்மா என கூச்சலிட்டாள். பீதி அடைந்த மலர்க்கொடி, குழந்தையை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார். பக்கத்து விவசாய நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மற்றும் கிராம மக்கள் அங்கு ஓடி வந்தனர். குழந்தையை எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். அதற்குள் குழந்தையின் அலறல் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.

இதுகுறித்து களம்பூர் போலீஸ், தீயணைப்பு துறை மற்றும் ஆம்புலன்சுக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, ஆரணி தாலுகா இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் ஆரணி, களம்பூர், சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர். மேலும் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிறுமிக்கு ஆக்சிஜன் செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

0 கருத்துக்கள் :