குழந்தையை புதைத்து காணாமல் போனதாக நாடகமாடிய தாய்

17.9.13

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் பெரிய பள்ளிவாசல் வீதியை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவர் பழநி கோயில் அடிவாரத்தில் பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார். இவரது மனைவி சகீலாபேகம். இவர்களுக்கு ஏற்கனவே 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்து 28 நாட்களானது.

 இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அலங்கியம் காவல் நிலையத்தில்  சகீலாபேகம் அளித்த புகாரில், வீட்டில் மதியம் ஒரு அறையில் குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு, வீட்டின் பின்புறத்தில் துணி துவைத்தேன். பிறகு வந்து பார்த்த போது குழந்தையை காணவில்லை, என்று, தெரிவித்திருந்தார். வீடு புகுந்து குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 இது குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் ஹேமா சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்தார். விசாரணையில், சகீலா பேகம் முன்னுக்குபின் முரணாக பேசினார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது, குழந்தை இறந்ததால் புதைத்துவிட்டதாக கூறினார்.

குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தபோது, அதிக அளவு பால் குடித்ததால் மூச்சுமுட்டி குழந்தை இறந்துவிட்டது. குடும்பத்தினர் தன்னை திட்டுவார்கள் என்ற பயம் சகீலாபேகத்துக்கு  ஏற்பட்டுள்ளது. இதனால், இறந்து போன குழந்தையை புதைத்து விட்டு காணாமல் போனதாக சொல்லி சமாளித்துவிடலாம் என்று முடிவு செய்து, வீட்டின் பின்புறத்தில் ஒதுக்குப் புறமாக இருந்த ஒரு இடத்தில்  யாருக்கும் தெரியாமல் குழியைத் தோண்டி, அதில் குழந்தையை புதைத்து விட்டார்.

 இரவு வீட்டுக்கு வந்தவர்களிடம் குழந்தை காணாமல் போய்விட்டதாக சொல்லி அழுது நாடகமாடியது, தெரியவந்தது. குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. அரசு மருத்துவமனை மருத்துவர் தினேஷ் தலைமையில் மருத்துவக்குழுவினர் குழந்தையின் பிரேதத்தை அதே இடத்தில் வைத்து பரிசோதனை செய்தனர்.

 குழந்தை பால் குடிக்கும் போது மூச்சுமுட்டி இறந்து போனதா அல்லது கொலை செய்யப்பட்டதா என்பது பற்றி பிரேத பரிசோதனையின் முடிவுக்கு  பிறகு தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்

0 கருத்துக்கள் :