அனந்தி வீட்டுக்குள் நுழைந்து நள்ளிரவில் சிறிலங்கா இராணுவம் தாக்குதல்

20.9.13

இன்று நள்ளிரவு (இலங்கை நேரம் 20-09-13 அதிகாலை) சுழிபுரத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அனந்தியின் வீட்டுக்குள் நுழைந்த சிறிலங்கா இராணுவத்தினரும் ஆயுதந்தாங்கிய ஈபிடிபியினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் அனந்தி சசிதரன் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார். ஆனால் வீட்டில் தேர்தல் பணிகளுக்காக தங்கியிருந்த சுமார் 8 பேர் வரை இந்தத் தாக்குதலில் சிக்குண்டு படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தத் தாக்குதலில் சுமார் 40 வரையிலான ஆயுதபாணிகள், வாள்கள், பொல்லுகள், கத்திகளுடன் பங்கெடுத்ததாக தெரியவருகிறது.

ஆயுதபாணிகள் வீட்டைச் சுற்றி வளைத்ததும், வேட்பாளர் அனந்தி சசிதரன் அங்கிருந்து தப்பி ஓடியதால், அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
அவரது வீட்டில் தங்கியிருந்து தேர்தல் பணியாற்றிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் எட்டுப் பேர் வரை இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில், பவ்ரல் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதியும், மனிதஉரிமை ஆர்வலருமான சட்டவாளர் சுபாசும் அடங்குகிறார்.

இந்தச் சம்பவத்தில் அனந்தி சசிதரன் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த, வாகனங்களும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுமந்திரன், மாவை சேனாதிராசா, சரவணபவன் உள்ளிட்டோரும், தேர்தல் ஆணைய அதிகாரிகள், கண்காணிப்புக்குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் கையில் காயமடைந்த பவ்ரல் கண்காணிப்பாளர், சட்டத்தரணி சுபாஸ், தகவல் வெளியிடுகையில், தமது வீடு சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக வேட்பாளர் அனந்தியிடம் இருந்து கிடைத்த தகவலை அடுத்து, தாம் அங்கு சென்றதாக தெரிவித்தார்.

தாம் அனந்தி வீட்டுக்குச் சென்ற போது, அங்கு சுமார் 20 வரையிலான சிறிலங்கா படையினர் தாக்குதல் நடத்தியதாகவும், அவர்களில் இருவர் சிவில் உடையில் காணப்பட்டதாகவும், குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியம் வேண்டுமா என்று கேட்டுக் கேட்டு அவர்கள் தாக்குதல் நடத்தியதில், சிலருக்கு மண்டை உடைந்துள்ளதாகவும், சட்டவாளர் சுபாஸ் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்தச் சம்பவத்தை கேள்வியுற்று சுழிபுரத்துக்கு செல்ல முயன்ற, கண்காணிப்புக் குழுவினரும் ஆங்காங்கே, சிறிலங்கா படையினரால், தடுக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துக்கள் :