சிரிய விவகாரத்தில் திருப்புமுனை...தாக்குதலை தவிர்க்கலாம்

10.9.13

ரசாயன ஆயுதம் விவகாரத்தில் சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா முடிவு செய்துள்ளார்.

 லண்டன் சென்றுள்ள அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியிடம், சிரியா அரசு ஏதாவது முயற்சி அல்லது உறுதி அளித்தால் தாக்குதலை நிறுத்த வழி உண்டா? என நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், ‘சிரியாவிடம் இருக்கும் ரசாயன ஆயுதங்கள் முழுவதையும் அதிபர் ஆசாத் ஒப்படைக்க முன்வந்தால் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவோம்’ என்றார். ‘அவை முழுவதையும் தாமதம் செய்யாமல் உடனே ஒப்படைக்க வேண்டும்.

ஆனால் அவர் அதை செய்ய மாட்டார். அது நடக்க கூடியதல்ல’ என்றும் அவர் பதில் அளித்தார்.

சிரியாவிடம் ரஷ்யா வலியுறுத்தல்

அமெரிக்காவின் தாக்குதலை தவிர்ப்பதற்காக இரசாயன ஆயுதங்களை ஐ.நா. கண்காணிப்பின் கீழ் ஒப்படைக்குமாறு சிரியாவிடம் ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

சிரியாவிடமுள்ள இரசாயன ஆயுதங்களை ஐ.நா கட்டுப்பாட்டின் கீழ் ஒப்படைக்கப்பட்டு பின்னர் அவை அழிக்கப்பட வேண்டுமென சிரிய வெளிவிவகார அமைச்சருடனான கலந்துரையாடலின்போது தான் கோரியதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரேர் இன்று கூறியுள்ளார்.

சிரியாவின் நட்பு நாடான ரஷ்யா இவ்வாறு கோரியிருப்பது சிரிய விவகாரத்தில் திருப்புமுனையாக கருதப்படுகிறது.

சிரியா, தன்னிடமுள்ள இரசாயன ஆயுதங்களின் ஒவ்வொரு சிறுபகுதியையும் இவ்வாரத்துக்குள் சர்வதேச சமூகத்திடம் ஒப்படைப்பதன் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என அமெரிக்க ராஜாங்கச் செயலளர் ஜோன்கெரி கூறிய சில மணித்தியாலங்களின் பின் ரஷ்ய வெளிவிவகார அமைச்சரின் கருத்து வெளியாகியுள்ளது

0 கருத்துக்கள் :