நவநீதம் பிள்ளை கண்டனம் இலங்கை தன்னிலை விளக்கம்

1.9.13

இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணைய நவநீதம் பிள்ளை நேரில் பார்வையிட்டும், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தும் விசாரணை நடத்தி வருகிறார்.

 கடந்த 7 நாட்களாக பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்திய நவநீதம் பிள்ளை இன்று கொழும்பில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

போரின்போது மாயமானவர்களை கண்டுபிடிப்பது தொடர்பாக இலங்கை அரசு அமைத்த குழுவின் நடவடிக்கை ஏமாற்றம் அளிக்கிறது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பெண்களின் நிலை கவலையளிப்பதாக உள்ளது. தமிழர்கள் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.

என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்தவர்களை, ராணுவத்தினர் முன்கூட்டியே சந்தித்து மிரட்டல விடுத்திருக்கிறார்கள். மேலும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல், தொடர் அச்சுறுத்தல் என எதேசச்திகாரத்தை நோக்கி இலங்கை சென்றுள்ளது. தமிழர் பகுதியில் ராணுவத்தின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. வடகிழக்கு மாகாணங்களில் முகாமிட்டிருக்கும் ராணுவ வீரர்களை அரசு திரும்ப பெற வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்.

நான் ஐ.நா.வில் உள்ள தமிழ் பெண் புலி என்று கடந்த இலங்கையின் 3 மந்திரிகள் கூறுகின்றனர். நான் தமிழ் பெண் என்பதால், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு அளிப்பதாக எனது நடுநிலை குறித்து கேள்வி எழுப்பினர்.
 இது முற்றிலும் தவறானது மட்டுமல்ல, மனதை புண்படுத்துவதாகவும் உள்ளது. தனது மந்திரிகள் இத்தகைய அறிக்கை வெளியிட்டதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே மன்னிப்பு கேட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

எதேச்சாதிகாரமாக செயற்படவில்லை - இலங்கை அரசு
ஐநாவின் மனித உரிமைகள் ஆணையர் நவிபிள்ளை வெளிப்படுத்தியுள்ள கருத்து ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான், என்றும் இலங்கையில் எதேச்சாதிகாரம் நடைமுறையில் இல்லை என்றும் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. 'நவி பிள்ளை இலங்கை எதேச்சாதிகார பாதையில் செல்வதாகக் கருத்துக்கூறியிருக்கிறார்.
 
இதனைவிட வேறுவகையான நிலைப்பாட்டை இங்கு நாங்கள் எதிர்பார்க்கவில்லை. காற்று எந்தப்பக்கம் வீசுகிறது என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. 30 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் பிடியில் இருந்த வடக்கில் இன்று மக்களுக்கு தேர்தல் என்ற வார்த்தையாவது கேட்பதற்கு உரிமை கிடைத்திருக்கிறது' என்றார் இலங்கை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல. 'பயங்கரவாதத்தின் மூலம் இந்த நாட்டின் ஸ்திரதன்மையை சீர்குலைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன.
 
 அவை தோல்வியடைந்தாலும் சர்வதேச மட்டத்தில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பார்க்கிறார்கள். விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களின் கருத்துக்களை இன்னும் முன்னெடுத்துச் செல்லும் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது' என்றும் கூறினார் கெஹெலிய ரம்புக்வெல்ல.'இங்கு தேர்தல்கள் நடக்கின்றன.
 
அரசியலமைப்பின் கட்டமைப்புக்கு வெளியில் எதுவும் நடக்கவில்லை. பலமான நாடாளுமன்றம் இருக்கிறது. பெரும்பான்மையான மக்களின் பங்களிப்புடன் அரசியல் நடக்கிறது எல்லாம் இருக்கிறது' என்று பிபிசியிடம் தெரிவித்த இலங்கை அரசின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் கருத்துக்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலொன்றின் வெளிப்பாடு தான் என்றும் கூறினார்.
 
 யுத்த காலத்தில் சர்வதேச அழுத்தங்களை எவ்வாறு எதிர்கொண்டதோ அதேபோலவே இப்போதும் பதில் நடவடிக்கை அமையும் என்றும் அவர் கூறினார். 'விடுதலைப் புலிகளுடனான போரின்போது சர்வதேச அமைப்புகள் எவ்வளவு நெருக்குவாரங்களை கொடுத்தன.
 
 முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதியும் மக்களின் ஆணைபெற்ற கட்சியின் அரசாங்கம் என்ற வகையில் திடமான முடிவுகளை எடுக்காமல் சர்வதேச மட்டத்தில் உள்ள சிலரை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் செயற்பட்டிருந்தால் நாட்டில் இன்னும் யுத்தம் முடிந்திருக்காது.இனிவரும் சவால்களையும் அதேபோலவே எதிர்கொள்வோம்' என்றார் இலங்கை அரசின் நிலைப்பாடுகள் பற்றி பேசவல்ல அதிகாரி அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல -
 

0 கருத்துக்கள் :