வட மாகாண தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பம்

21.9.13

இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, குறிப்பாக  சர்வதேச சமூகத்தினால் பெரிதும் எதிர்பார்க்கப்படுவதுமான வட மாகாணசபைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்களிப்பு மாலை 4 மணியளவில் நிறைவடையும்.
வடக்கு உள்ளிட்ட மூன்று மாகாணசபைகளுக்கு இன்று நடக்கும் தேர்தலில், வாக்காளர்கள் காலையில் நேரகாலத்துடன் சென்று வாக்களிக்கும்படி தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
வாக்காளர் ஒருவர் யாருக்கு வாக்களிக்கின்றார் என்பதை கண்டுபிடிக்க முடியும் என்பது வெறும் கற்பனை. இதற்கு ஏமாற வேண்டாம்.
எந்தவிதமான அச்சமோ, சந்தேகமோ இன்றி வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
வாக்காளர்கள் காலையிலேயே சென்று வாக்களிப்பது நல்லது. எனினும் பிற்பகல் 4.00 மணி வரையும் வாக்களிக்கலாம்.
வாக்காளர் அட்டை கிடைக்காவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்க முடியும்.
வாக்களிப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை முக்கியமானது.
இம்முறை தேர்தல் பாதுகாப்புக் கடமைகளில்  இராணுவத்தினரை ஈடுபடுத்துமாறு எவரும் கேட்கவில்லை. இராணுவத்தின் உதவியை நாம் கோரவும் இல்லை.
பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  பொலிஸ் மா அதிபருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் ஒரு வாக்களிப்பு நிலையத்தில் தேர்தல் சுதந்திரமாகவும் நீதியாகவும் நடத்தத் தடை ஏற்பட்டால், அங்கு வாக்களிப்பு ரத்துச் செய்யப்படும்.
வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்தாலோ, அவர்களைக் கட்டாயப்படுத்தினாலோ, அச்சுறுத்தினாலோ, அந்த நிலையத்தின் வாக்களிப்பு நிறுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

0 கருத்துக்கள் :