அமெரிக்காவில் இந்தியர் உள்பட 12 பேர் சுட்டுக்கொலை

17.9.13

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் கடற்படை கப்பல் கட்டும் தளம் உள்ளது. நேற்று அங்கு புகுந்த 2 முகமூடி மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். அதில் கொலம்பியா மாவட்ட போலீஸ் அதிகாரி, கடற்படை அதிகாரி உள்பட 7 பேர் அதே இடத்தில் பலியாகினர். 12 பேர் காயம் அடைந்தனர்.

இவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.
பலியானவர்களில் அமெரிக்க வாழ் இந்தியரும் அடங்குவர். அவரது பெயர் பண்டிட் (61). இவர் தவிர மைக்கேல் அர்னால்டு (59), சில்வியா பிராசியர் (53), காதி கண்டே (62), ஜான் ரோஜர் ஜாண்சன் (73), பிராங்க் கோலர் (50), ஜன்னத் பெர்னார்ட் பிரோக்டர் (46) ஆகிய 6 பேரும் அடையாளம் தெரிந்தது.

மற்றவர்களின் பெயர் விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. பலியான அமெரிக்க வாழ் இந்தியர் பண்டிட் ராணுவ காண்டி ராக்டர் ஆவார்.
இச்சம்பவத்தின் போது துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்களுடன் போலீசார் எதிர்தாக்குதல் நடத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் 2 மர்ம நபர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் யார்? எதற்காக இந்த துப்பாக்கி சூடு நடத்தினார்கள் என்ற விவரம் தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் துப்பாக்கியால் சுட்டவன் யார் என்ற விவரத்தை வாஷிங்டன் போலீஸ் தலைமை அதிகாரி கேதி லானியர் வெளியிட்டுள்ளார்.
அதில், தொடக்கத்தில் கப்பல் கட்டும் தளத்தில் 2 பேர் புகுந்து தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. ஆனால் ஒருவன் மட்டுமே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறான். அவனது பெயர் ஆரோன் அலெசிஸ் (34). நியூயார்க்கில் உள்ள குவின்ஸ்சில் பிறந்தவன். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள போர்ட் வொர்த் நகரின் தங்கி இருந்தான்.

இவன் அமெரிக்க கடற்படையின் முன்னாள் வீரர். கடந்த 2007 முதல் 2011 வரை பணி புரிந்து இருக்கிறான். தனது பணிகாலத்தில் மூன்றாம் தர அதிகாரம் இல்லாத ‘பெட்டி ஆபீசர்’ பதவி வகித்து இருக்கிறான். பணியின் போது ஒழுங்கீன நடவடிக்கையால் ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்பட்டான்.

இவன் புத்தமதத்துக்கு மாறியவன். கட்டுமான ஊழியர் ஒருவரின் கார் டயரை துப்பாக்கியால் சுட்டதற்காக கடந்த 2004–ம் ஆண்டு கைது செய்யப்பட்டிருக்கிறான். இதுகுறித்து போர்ட் வொர்த் போலீசார் விசாரணை நடத்தியபோது இது தற்செயலாக நடந்த விபத்து என கூறினான்.

தற்போது கப்பல் கட்டும் தளத்தில் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு என்ன காரணம் என தெரியவில்லை. பலியானவர்கள் 46 முதல் 73 வயது வரையிலானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :