முதுமையால் கணக்குத் தெரியாமல் உளறுகிறாராம் சம்பந்தன்

6.8.13

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முதுமையினால் கணக்குத் தெரியாமல் உளறுகிறார் என்று கூறியுள்ளார் சிறிலங்கா இராணுவத்தின் யாழ்.படைகளின் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க.
வடக்கில் படைகள் குறைக்கப்பட்டு விட்டதாக சிறிலங்கா இராணுவம் கூறுவது பொய் என்றும், யாழ்ப்பாணத்தில் ஒன்றரை இலட்சம் படையினர் உள்ளதாகவும், இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள யாழ்.படைகளின் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க,
“தேர்தலில் வங்குரோத்து நிலையை அடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா இராணுவத்தை அரசியலுக்குள் இழுத்து சுயலாபம் தேட முனைகிறது.

யாழ்ப்பாணத்தில் ஒன்றரை இலட்சம் சிறிலங்காப் படையினர் நிலை கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளது, முதுமையில் அவர் உளறுகின்றார் என்பதையே புலப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் தற்போது சுமார் 13,150 சிறிலங்கா இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர் என்பதே உண்மை.
2008இல் போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது கூட யாழ்.குடாநாட்டில் ஆகக்கூடுதலாக 43 ஆயிரம் இராணுவத்தினர் தான் நிலை கொண்டிருந்தனர்.

2009 ஆம் ஆண்டு 26,200 ஆக குறைக்கப்பட்ட படையினரின் தொகை,. தற்போது 13,150 ஆக உள்ளது.
சிறிலங்கா இராணுவத்தின் மொத்த ஆட்பலமே, சுமார் ஒரு இலட்சத்து 85 ஆயிரம் தான்.

இந்தநிலையில், யாழ்.குடாநாட்டில் மட்டும் ஒன்றரை இலட்சம் படையினர் நிலை கொண்டுள்ளதாக இரா.சம்பந்தன் கூறுவது, முதுமையால் கணக்கு தெரியாமல் தடுமாறுவதையே காட்டுகிறது.

தேவைகளைக் கருத்தில் கொண்டு இராணுவத்தை குறைக்கும் நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வட மாகாணத்தை விட வடமத்திய மாகாணத்தில் அதிகமான படையினர் நிலைகொண்டுள்ளனர்.

ஆனால், அவர்கள் தமது தேர்தல் பரப்புரைகளுக்கு இராணுவத்தை பயன்படுத்தி சேறுபூச முனைகின்றனர்.
இராணுவப் புலனாய்வு பிரிவினரை அரசியல் செயற்பாடுகளில் அரசாங்கமோ இராணுவமோ ஈடுபடுத்தியதில்லை.
நாட்டின் தேசிய பாதுகாப்பு, பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பாகவே, சிறிலங்கா இராணுவமும் மற்றும் புலனாய்வுப் பிரிவுகளும் செயற்பட்டு வருகின்றன.”என்று கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :