துணை நடிகைகள் சிலரிடம் பணத்தை கொட்டி உல்லாசம்

23.8.13

நாமக்கல் கொண்டி செட்டிப்பட்டியை சேர்ந்தவர் கிரிராஜன் (39). ரியல் எஸ்டேட் அதிபர். கடந்த ஜூலை மாதம் 3–ந்தேதி இவரிடம் 5 பேர் கொண்ட கும்பல் நாமக்கல்லில் விலைக்கு நிலம் தேவை என்று கூறி நல்லிப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு அழைத்து சென்றனர்.

அங்குள்ள நிலத்தை கிரிராஜன் காட்டினார். அப்போது திடீரென அந்த நபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி காரில் ஏறக்கூறினர். அப்போது சுதாரித்துக் கொண்ட கிரிராஜன் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பியோடி நல்லிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கடத்தல் முயற்சி தொடர்பாக சேந்தமங்கலம் ஒண்டித் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் (22), சென்னை பெருங்களத்தூர் ரமேஷ் (35), அயனாவரம் தமிழ்சுடர் (35), திருவெற்றியூர் ராபர்ட் (32), சேலத்தை சேர்ந்த வினோத்குமார், கோவையை சேர்ந்த சரவணன் ஆகிய 6 பேரை கடந்த 8–ந்தேதி கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கும்பலுக்கு மதுரை ஆரப்பாளையம் செக்கடித் தெருவை சேர்ந்த சோனையன் என்பவரது மகன் சுரேஷ் (24) என்பவன் தலைவனாக செயல்படுவது தெரியவந்தது.

 மேலும் அவனுடன் சீர்காழியை சேர்ந்த பார்த்திபன், சேந்த மங்கலம் வெண்டங்கியை சேர்ந்த ஐகோர்ட்டு வக்கீல் சஞ்சீவ்குமார், நாமக்கல் மகரிஷியை சேர்ந்த கணபதி ஆகியோரையும் தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நாமக்கல் அருகே வள்ளிபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 அப்போது அவர் ரியல் எஸ்டேட் அதிபர் கிரிராஜன் கடத்தல் முயற்சி வழக்கில் தேடப்பட்டு வரும் கும்பல் தலைவன் சுரேஷ் என்று தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவனை கைது செய்தனர். பின்னர் அவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது.

கொள்ளை கும்பல் தலைவன் சுரேஷ் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகரம், நல்லிப்பாளையம், சேந்தமங்கலம், புதுச்சத்திரம், ஆயில்பட்டி, மோகனூர் ஆகிய பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நடந்த 11 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் இவன் திண்டுக்கல், தஞ்சாவூர், காஞ்சிபுரம், உள்பட தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டியிருப்பதும், இவன் மீது அங்கு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

மேலும் இவன் ரியல் எஸ்டேட் அதிபர் கிரிராஜனை கடத்தி பணம் கேட்டு மிரட்ட திட்டம் போட்டதும் தெரியவந்தது. அதோடு இவன் தலைமையில் ஆள் கடத்தல் கும்பல் செயல்படுவதும் தெரியவந்தது. மேலும் கொள்ளையடித்த பணத்தில் இவன் ஆடம்பரமாக உல்லாச வாழ்க்கை நடத்தி வந்துள்ளான்.

சென்னையில் துணை நடிகைகள் சிலரிடம் பணத்தை கொட்டி உல்லாசம் அனுபவித்து இருப்பதும் தெரியவந்தது.
கொள்ளை கும்பலிடம் இருந்து 3 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள், மற்றும் ரூ.7 லட்சம் மதிப்புள்ள 35 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

 கைதான கொள்ளை கும்பல் தலைவன் சுரேஷ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டான்.
தொடர்ந்து போலீசார் தலைமறைவாக உள்ள பார்த்திபன், வக்கீல் சஞ்சீவ் குமார், கணபதி ஆகியோரை தேடிவருகிறார்கள்.

0 கருத்துக்கள் :