விடுதலைபுலிகளை தீவிரவாதிகளாய் காட்டுகிறதா ‘மெட்ராஸ் கஃபே’ படம்?

5.8.13

விடுதலைபுலிகளை தீவிரவாதிகளாய் காட்டுகிறதா ‘மெட்ராஸ் கஃபே’ படம்? ஜான் ஆபிரகாமின் நழுவல் பதில்கள்!!
--------------------------------------------------------------------------------

இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ‘மெட்ராஸ் கபே’ படத்தின் ஹீரோவும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான ஜான் ஆபிரகாம் நிருபர்கள் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் “இது ஒரு கமர்ஷியல் படம்”, “இது ஒரு கமர்ஷியல் படம்” என்ற வார்த்தையையே திரும்ப திரும்ப சொல்லிவிட்டு பசிக்கிறது என்று 10 நிமிடங்களுக்குள் சத்யம் தியேட்டரை விட்டு எஸ்கேப் ஆனார்.
இந்த கிரேட் எஸ்கேப் தான் இந்தப்படம் உண்மையிலேயே ஈழத்தமிழர்களுக்கு எதிரான படமாக இருக்குமோ..? என்ற சந்தேகத்தை த்ற்போது பலமாக கிளப்பியிருக்கிறது.

நடிகர் ஜான் ஆபிரகாம் ஒரு தயாரிப்பாளராகவும் இருந்து ஹீரோவாகவும் நடித்து விரைவில் ரிலீஸாக இருக்கும் ஹிந்திப்படம் தான் ”மெட்ராஸ் கபே”. ‘விக்கி டோனர்’ ஹிந்திப்படத்தை டைரக்ட் செய்த ஸுஜித் ஸிர்கர் தான் இந்தப்படத்தையும் டைரக்ட் செய்திருக்கிறார்.

இந்தமாதம் 23- ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் இந்தப்படத்தை திடீரென்று தமிழிலும் ‘டப்’ செய்திருக்கிறார்கள். கூடவே படத்தின் டைரக்டர் ஸுஜித் ஸிர்கர் வந்திருந்தும் அவரை மேடையில் ஏற்றவில்லை.

கதைப்படி இந்தப்படத்தில் இந்திய உளவுத்துறையின் சார்பில் ஒரு பணிக்காக இலங்கை யுத்த களத்திற்கு செல்கிறார் இந்திய ராணுவ அதிகாரியான ஜான் ஆபிரகாம். அங்கு ஒரு பத்திரிகையாளரை சந்திக்கும் அவர் அவர் மூலமாக அங்கு நடக்கும் போராட்டத்துக்கான உண்மையான காரணத்தை தெரிந்து கொண்டு அதிர்ச்சியடைகிறார்.

அதாவது இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடந்த யுத்தம் தான் படத்தின் கதைக்களம் என்று சொல்லப்படுகிறது.
இதனால் இந்தப்படத்தின் டீஸர் வெளியான போதே இதில் விடுதலைப்புலிகள் தீவிரவாதிகளாக சித்தரித்திருக்கிறார்கள் என்ற சந்தேகம் கிளம்ப, சீமானின் நாம் தமிழர் கட்சி உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகள் இந்தப்படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று இரண்டு வாரங்களுக்கு முன்பில் இருந்தே போராட்டங்களை நடத்தி வருகின்றன, கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

ஆனால் அப்போது பேசிய படத்தின் டைரக்டர் ஸுஜித் ஸிர்கர், படத்தில் கான்ட்ரவர்ஸியான விஷயங்கள் எதுவும் இல்லை. படத்தின் கதை சிம்பிளானது, தெளிவானது. சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லாததால் தான் சென்சார் போர்டு இந்தப்படத்துக்கு U/A சர்டிஃபிகேட் கொடுத்துள்ளது என்றார். மேலும் இந்தப்படம் தமிழகத்தில் ரிலீஸாகும் என்று நம்புகிறேன், இந்தப்படத்தை எதிர்க்கும் தமிழ் அமைப்புகள் முதலில் படத்தை பார்க்கட்டும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்தப்படத்தின் தமிழ் டப்பிங் வெர்ஷனை விளம்பரப்படுத்த இன்று சென்னை சத்யம் தியேட்டர் வந்த ஹீரோ ஜான் ஆபிரகாம் “நான் விடுதலைப்புலிகளையும் ஆதரிக்கல, எதிர்க்கல, இலங்கை அரசையும் ஆதரிக்கல, எதிர்க்கல இதை ஒரு கற்பனைப்படமாக பண்ணியிருக்கேன்” என்றார்.

தொடர்ந்து ஒரு நிருபர் இந்தப்படத்துக்கு ‘இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே பண உதவி செய்ததாக தகவல்கள் வந்ததே உண்மையா?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.
அதற்கு ஜான் ஆபிரகாம் மேடையின் கீழே நின்று கொண்டிருந்த படத்தின் இரண்டு தயாரிப்பாளர்களை கை காட்டி இவர்கள் தான் பணம் போட்டவர்கள் என்றார்.

அதேபோல முன்னதாக பிரஸ்மீட்டில் போட்டுக் காண்பிக்கப்பட்ட டீஸரில் வரும் ‘கண்ணால பார்க்குறதையும், காதால கேட்குறதையும் உண்மைன்னு நம்பிட முடியாது’ என்ற வசனத்தை குறிப்பிட்டு ஒரு நிருபர் கேள்வி கேட்டார்.
ஆனால் அந்தக்கேள்விக்கு சரியான பதிலைச் சொல்லாமல் இது ஒரு கமர்ஷியல் படம் என்று மட்டுமே சொன்னார்.

‘விடுதலைப்புலிகளை நீங்க எப்படி பார்க்கிறீங்க?’ என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இலங்கை அரசு, விடுதலைப்புலிகள் இரண்டு தரப்பையுமே நான் பொதுவாகத்தான் பார்க்கிறேன் என்றார்.
இப்படி நிருபர்களிடமிருந்து வந்து விழுந்த எல்லாக் கேள்விகளும் விடுதலைப்புலிகளைப் பற்றிய கேள்விகள் என்பதால் ஒருகட்டத்தில் வெக்ஸான ஜான் ஆபிரகாம் தொடர்ந்து கேள்விகளுக்கு பதில் சொல்வதைத் தவிர்த்தார்.

பிறகு மேடையை விட்டு கீழிறங்கும் போது ‘இந்தப்படத்தை தமிழ் அமைப்புகளிடம் போட்டுக்காட்டுவீர்களா?’ என்று கேட்டபோது “அவர்கள் விரும்பினால் கண்டிப்பாக போட்டுக்காட்டுவேன். கண்டிப்பாக அவர்களுக்கு இந்தப்படம் பிடிக்கும்” என்றார்.
‘விஸ்வரூபம்’ பட ரிலீஸின் போதும் முஸ்லீம் அமைப்புகளிடம் கமல் இதையே தான் சொன்னார்….
கடைசியில் என்ன ஆனது…!

0 கருத்துக்கள் :