பிரபாகரன் போட்ட பூட்டை சம்பந்தன் உடைக்கின்றாரா?

7.8.13

வடமாகாணசபை தேர்தல் ஆரவாரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் இழுபறிகள் காணப்பட்டாலும், இந்தியாவின் அழுத்தத்தினால், மாவை வாபஸ் பெற தமிழரசுக் கட்சிக்காறர்களும் புகைந்து அடங்கிவிட்டனர். விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளர் என்பது உறுதியாகி வேட்புமனுத்தாக்கல் செய்வதும் மாலை, மரியாதைகளுடன் முடிந்துவிட்டது. தனது தம்பியை மாகாண அமைச்சராக்குவது என்ற உறுதிமொழியை சம்பந்தன் வழங்கியதுடன் சுரேஷ்பிரேமச்சந்திரனும் அடங்கிவிட்டார். அவரது கட்சியைச் சேர்ந்த ஐங்கரநேசனுக்குத்தான் இலவு காத்த கிளி போல ஒரு ஏமாற்றம். புரூட்டஸ் நீயும் தானா? என மனதுக்குள்ளே குமுறுவதைத் தவிர அவருக்கு வேறுவழிகள் இருக்கவில்லை. தம்பியாரை அரசியலில் இறக்கியதன் மூலம், தமிழர் வரலாற்றில் அதிகம் பரீட்சயமில்லாத வாரிசு அரசியலை சுரேஷ்பிரேமச்சந்திரன் தொடக்கிவைத்திருக்கின்றார்.

வேட்பாளர்களை கூட்டமைப்பின் கட்சிகளுக்கு ஒதுக்கும் விடயத்தில் கூட சம்பந்தன் தலைமை பெருந்தன்மையோடு நடந்துகொண்டது. தமிழ்த்தேசியநீக்கஅரசியலே அவரின் நிகழ்ச்சிநிரலில் முதன்மையாக இருந்தமையினால், இந்த விடயத்தை அவர் பெரிதுபடுத்தவில்லை. ஜனநாயகத்தோற்றம் வேட்பாளர் தெரிவிற்கு கொடுக்கப்பட்டது. வேட்பாளர் தெரிவுக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டு, அதன் அடிப்படையிலேயே தெரிவுகள் இடம்பெற்றன. மிகத் தாராளமான வகையில் கூட்டமைப்பின் கட்சிகளுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டது. எவரும் எதிர்பார்த்திராத வகையில் சுரேஷின் ஈழமக்கள் புரட்சிகர முன்னணிக்கு 16 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழரசுக்கட்சிக்கு அடுத்த படியாக பெரிய கட்சி அந்தஸ்தினை அது பெற்றிருக்கின்றது. யாழ் மாவட்டத்தில் மக்கள் வாக்கு வங்கியை கவரத்தக்க நான்கு வேட்பாளர்களை சுரேஷ்பிரேமச்சந்திரன் இறக்கியிருக்கின்றார்.

தமிழரசுக்கட்சிக்காறர்களுக்குத் தங்களது முதன்மை நிலை கீழிறங்குகின்றது, என்பதையிட்டு புகைச்சல்தான். ஆனாலும் ஒருவாறு அடக்கிக்கொண்டனர். தமிழரசுக்கட்சியாக முன்னேறுவதைவிடுத்து, கூட்டமைப்பாக முன்னேறு என இந்தியா போதித்ததன் விளைவாக இம்மாற்றங்கள் இருக்கலாம். தேர்தல் முடிந்த கையோடு கூட்டமைப்பைப் பதிவுசெய்வதில் சம்பந்தன் இறங்கினாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை.

சம்பந்தன் தலைமைக்குப் பின்னால் நின்று வியூகம் வகுக்கும் அமெரிக்க – இந்திய கூட்டின் இலக்கு மிகவும் தெளிவானது. இலங்கையில் ஆட்சிமாற்றம் ஒன்றைக்கொண்டு வருவதே அதன் இலக்கு. அதற்கு வடமாகாணசபைத்தேர்தலை எவ்வளவு உச்சத்திற்கு பயன்படுத்தலாமே அந்தளவிற்கு பயன்படுத்த முனைகின்றது.
இந்த ஆட்சிமாற்றம் நிகழவேண்டுமானால், தென்னிலங்கையில் பேரினவாத அணியிலிருந்து மகிந்தர்அரசாங்கம் தனிமைப்படுத்தப்பட வேண்டும். மகிந்தர்அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்துக்கொண்டிருக்கின்ற மகிந்தருக்கு, பலம்சேர்க்கின்ற பேரினவாத அணி அவரிடமிருந்து விலகவேண்டும். வடமாகாணசபைத் தேர்தல் அதற்கு உதவும் என இந்திய – அமெரிக்கக் கூட்டு திடமாகவே நம்புகின்றது.

13வது திருத்தத்தையும், அதன் அடிப்படையில் அமைந்த மாகாணசபை முறையையும், பேரினவாதிகளும், அரசாங்கத்தில் இருப்பவர்களும் ஊதிப்பெருப்பித்தினால், வடமாகாணசபைத் தேர்தல் நடைபெறுவதை பேரினவாதிகள் விரும்பவில்லை. 13வது திருத்தம் பிரிவினைக்குச் சமனானது என தற்போது அவர்கள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர். மகாநாயக்கர்களே 13வது திருத்தத்தினை நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
எனவே மாகாணசபைகளுக்கு எந்தவித அதிகாரங்களும் இல்லாவிட்டாலும் கூட வடமாகாணசபைத் தேர்தல் நடைபெற்று கூட்டமைப்பு நிர்வாகத்தைப் பெற்றுக்கொண்டால், பேரினவாதிகள் அதிருப்திடைய வாய்ப்புக்கள் உண்டு. இது பண்டாரநாயக்கா கால நிலமைகளை உருவாக்கலாம். பண்டாரநாயக்காவை ஆட்சிக்குக் கொண்டுவந்த பேரினவாத சக்திகளே பின்னர் எதிராகக் கிளர்ந்தார்கள் என்பது வரலாறு. அந்த வரலாற்றினைத் திரும்பவும் கொண்டுவரலாம் என்பதே அமெரிக்க – இந்திய கூட்டின் நினைப்பாக உள்ளதுபோல் தெரிகின்றது.

தென்னிலங்கையில் இச்செயற்பாடு நடைபெறவேண்டுமானால் அதற்கு முன்னர் தமிழர்அரசியல் தமிழ்த்தேசியநீக்கம் செய்யப்படவேண்டும். ஏனெனில் தமிழ்த்தேசியவாதமும், பேரினவாதமும் ஒன்றையொன்று பலப்படுத்துபவை. புலிகளும், மகிந்தரும் பலமானது இந்தப்போக்கினால்தான். எனவே தற்போதைய நிலையில் ஆட்சிமாற்றம் ஒன்று இடம்பெறவேண்டுமானால், தென்னிலங்கையில் மகிந்தர் தனிமைப்படுத்தப்படவேண்டும். வட – கிழக்கில் தமிழ்த்தேசிய நீக்கம் இடம்பெற்று தமிழ்த் தேசியவாதிகள் சிறுகுழுவாக மாறுதல் வேண்டும்.

தென்னிலங்கையில் மகிந்தர் தனிமைப்படுத்தப்படுகின்றாரோ இல்லையோ தமிழர் அரசியலில் தமிழ்த்தேசியநீக்கம் செய்வதற்கு, போர்க்காலத்திலேயே சம்பந்தன் தலைமை உத்தரவாதம் கொடுத்துவிட்டது. போர் முடிந்த கையோடு, தமிழ்த்தேசியநீக்க வேலைத்திட்டத்தினைக் கட்டம், கட்டமாக நகர்த்தத்தொடங்கியது.
அந்த நகர்த்தல் செயற்பாட்டில் முதலாவது கட்டம்தான், கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது புலிநீக்கம் இடம்பெற்றமையாகும். முதலில் புலிநீக்கம், பின்னர் தமிழ்த்தேசியநீக்கம், தொடர்ந்து மக்களை அதற்குத் தயார்படுத்தல் என்பதே இதுவிடயத்தில் சம்பந்தன் தலைமையின் நிகழ்ச்சிநிரலாக இருந்தது. அந்தத் தேர்தலில் புலிகளுடன் நேரடியாக அடையாளம் காணப்பட்ட, செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் என்போர் இந்தியாவின் ஆலோசனையின் பேரில் கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்த்தேசியநீக்கஅரசியலுக்கு உடன்படாததினால், கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார்.

இரண்டாவது கட்டத்தில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கொழும்பு மேட்டுக்குடியைச் சேர்ந்த சுமந்திரன் களமிறக்கப்பட்டார். தமிழ்த்தேசிய நீக்க அரசியல் செயற்பாட்டை சர்வதேச மட்டத்தில் முன்னெடுப்பதற்கு சம்பந்தனுக்கு ஒரு உதவியாள் தேவைப்பட்டார். உண்மையில் சம்பந்தன் கஜேந்திரகுமாரையே இதற்குப் பயன்படுத்த விரும்பியிருந்தார். அவர் சம்மதிக்காததினாலேயே இந்தியாவின் ஆலோசனையின் பேரில் சுமந்திரன் கொண்டுவரப்பட்டார். சர்வதேசத் தொடர்புகளில் மருந்திற்குக்கூட தமிழ்த்தேசிய வாசனை இருக்கக்கூடாது என்பதே சுமந்திரன் வருகைக்குக் காரணமாக அமைந்தது. அவரும் அரசாங்கத்துடன் இணைந்து கிறிக்கட் விளையாடியும், ஒற்றையாட்சி அடிப்படையிலான ஐக்கியதேசியக் கட்சியின் அரசியல் தீர்வை வரவேற்றும், சம்பந்தனுக்கு தமது விசுவாசத்தைத் தெளிவாகவே தெரிவித்துக்கொண்டார்.

மூன்றாவது கட்டத்தில், சம்பந்தன் சிங்கக்கொடியேற்றி தமிழ்த்தேசியஅரசியல் நீக்கத்திற்குத் தயார் எனப் பகிரங்கமாக அறிவித்தார். அதுவும் ரணிலுடன் சேர்ந்து கொடியேற்றியதன் மூலம் தனது உச்ச விசுவாசத்தைக் காட்டிக்கொண்டார். சிங்கக்கொடி பேரினவாதத்தின் அடையாளக்கொடி என்பது பற்றி, சம்பந்தனுக்கு எந்தவிதக் கவலையும் கிடையாது. நிர்ப்பந்தம் எதுவும் இல்லாமல், விருப்பத்தின் அடிப்படையிலேயே கொடியை ஏற்றினேன் என துணிச்சலுடன் கூற அவரால்முடிந்தது. இதுவிடயத்தில் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களுடைய வெளிப்பாடு வெறும் புறுபுறுப்புக்கள் மட்டும்தான்.
நான்காவது கட்டம், கிழக்குமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டமையாகும். இதன் மூலம் வடக்கு – கிழக்கு பிரிப்பிற்கு அரசியல் அந்தஸ்து வழங்கப்பட்டது. வடக்கு – கிழக்கு இணைப்பு தமிழ்மக்களது கூட்டிருப்பின் அடையாளம். இது அரசியல் ரீதியாகவும், பிரிப்புக்குள்ளாகும் போது தமிழ்த்தேசிய அரசியல் தானாகவே சிதைவடையும். என்பது சம்பந்தன் தலைமைக்கு நன்றாகவே தெரியும்.

கிழக்குத் இத்தேர்தலிலும் தமிழ்த்தேசிய நீக்கத்தைக் கருத்தில்கொண்டு தமிழ்த்தேசியசாயம் இல்லாத முன்னாள் கல்விஅதிகாரி தண்டாயுதபாணி முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருந்தார். அவரும் சம்பந்தனின் கொள்கைக்கு மிகுந்த விசுவாசம் தெரிவிக்கும் வகையில் கிழக்குமாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றபோதும், தமிழ்த்தேசியஅரசியல் பற்றி வாயே திறப்பதில்லை. தனது சொந்த மாவட்டமான திருகோணமலையில் பேரினவாத ஆக்கிரமிப்பு பச்சையாக இடம்பெறுகின்றபோதும் சம்பந்தன் போலவே அவரும், அதுபற்றி அக்கறைப்படுவதில்லை.

எதுவும் செய்யவேண்டாம் என சம்பந்தன் கட்டளையிட்டிருக்கக்கூடும். ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத்தெரிவிப்பது தமிழ்த்தேசியஅரசியலை வெளிப்படையாகக் காட்டமுற்படும் என சம்பந்தனைப் போல அவரும் கருதியிருக்கலாம். கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தினைப் பேரினவாதிகள் முழுமையாக ஆக்கிரமித்தபோதும், அங்குள்ள தமிழ் அடையாளங்களை அழிக்கமுற்பட்டபோதும் அந்தவிடயத்தை பெரியளவிற்கு பேசுபொருளாக்க இவர்கள் இருவரும் முன்வரவில்லை. அன்று அங்குள்ள இந்துக்கோயில் கட்டுவிக்க தடைவிதித்த பேரினவாதம் இன்று மிகப் பிரமாண்டமான பௌத்த விகாரை ஒன்றினைக் கட்டுவதற்கு முயற்சிக்கின்றது.

ஐந்தாவது கட்டம்தான் வடமாகாணசபைத் தேர்தலில் விக்னேஸ்வரனை களமிறக்கியமையாகும். இவ்வளவு காலமும் சம்பந்தன் தலைமையின் தமிழ்த்தேசியநீக்கச் செயன்முறை விக்னேஸ்வரனின் வருகையோடு முழுமைபெறுகின்றது. அதாவது பண்புமாற்றத்தினைப் பெறுகின்றது. தமிழ்த்தேசியநீக்கம் செய்யப்பட்ட அரசியலை வருங்காலத்தல் நகர்த்துவதற்கான தொடக்கப்புள்ளியாக அமைகின்றது. சம்பந்தனின் இதுவரைகால உழைப்பிற்கு தற்போது தான் வெற்றிகிடைத்திருக்கின்றது.
கூட்டமைப்பிற்குள் சம்பந்தனும், சுமந்திரனும் மட்டும் தமிழ்த்தேசிய நீக்கத்தை ஏற்றுக்கொணடவர்களல்ல. சுரேஸ்பிரேமச்சந்திரன், மாவை, செல்வம் உட்பட எல்லாத்தலைவர்களுமே தமிழ்த்தேசிய நீக்கத்தை ஏற்றுக்கொண்டவர்கள்தான். இவர்கள் எப்போது இந்தியாவின் எடுபிடிகளாக செயற்படமுன்வந்தார்களோ, அன்றிலிருந்தே தங்கள் அளவில் தமிழ்த்தேசியநீக்கத்தை செய்துவிட்டனர். ஆனால் மக்களிடம் வாக்குப் பெறவேண்டும் என்பதற்காக தமது தமிழ்த்தேசியநீக்கத்தை வெளிப்படையாகக் கூறத்தயாரில்லை. அதனால் தமிழ்த்தேசிய சாயத்தை அடிக்கடி பூசிக்கொள்கின்றனர். மாகாணசபைத் தேர்தல் போன்ற குறிப்பான விடயங்களில் மட்டும் இவர்களுடைய சாயம் வெழுத்து கறுப்பும் அல்லாத, வெள்ளையும் அல்லாத செம்மஞ்சள் நிறம் தெரியத் தொடங்குகின்றது.

மகிந்தர் ஒரு நாடகமாக 13வது திருத்தத்தினை மேலும் பலவீனமாக்க முற்பட்டபோது இவர்களும் 13வது திருத்தத்தினை பாதுகாக்கும் வீரர்களாயினர். பட்டு வேட்டி கேட்டோம் இப்போ கோவணத்தையே உருவப்போகின்றார்கள் அதனையாவது பாதுகாக்க வேண்டும் என்ற கோசத்துடன் 13ஐ விரும்பி ஏற்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 13 உண்மையில் கோவணம் அல்ல மாறாக அது செல்லரித்த கோவணம். இது தெரிந்தும் மகிந்தர் உள்ளதையும் உருவப்போகிறார், அதனையாவது பாதுகாப்போம் என்றுகூறி செல்லரித்த கோவணத்தையே பொத்திப்பிடிக்க வருமாறு தமிழ் மக்களை கேட்கின்றனர். இந்த செல்லரித்தகோவணத்தைப் பொத்திப்பிடிக்கும் அரசியலைத் தமிழர்கள் செய்யவேண்டும் என்பதுதான் இந்தியாவினதும், மேற்குலகத்தினதும் விருப்பம். ஏனென்றால் அதுவும் உருவப்பட்டால் இந்திய இலங்கை ஒப்பந்தம் குப்பையில் போகும். அது இந்திய நலன்களை முழுமையாகப் பாதிக்கும். அதனால் செல்லரித்த கோவணத்தையாவது தமிழ் தலைமைகளை வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர். அதுமட்டுமன்றி தமிழர் அம்மணமானால் புது உடுப்புப்போடவேண்டிய தார்மீகப் பொறுப்பு அவர்களுக்கு வந்துசேரும். புதுஉடுப்பு போடும் செயற்பாடு என்பது பேரினவாதத்துடன் நேரடியாக மோதுகின்ற ஒன்று என்பதால் அவை அதற்கு தயாராக இல்லை.

செல்லரித்தகோவணத்தை உருவும் செயற்பாட்டினை முன்னெடுத்தபோதே மகிந்தருக்கு நன்கு தெரியும், இந்திய – அமெரிக்கக் கூட்டு இதற்கு அனுமதிக்காது என்பது. ஆனாலும் முயற்சித்தமைக்கு காரணம் தமிழ்அரசியலை இப்பொத்திப்பிடிக்கும் அரசியலோடு மட்டுப்படுத்திவைத்திருக்க வேண்டும் என்பது தான். இதுவிடயத்தில் இந்திய – அமெரிக்கக் கூட்டு, மகிந்தர் அரசாங்கம், சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு எல்லாமே ஒரு கட்ட வெற்றியை அடைந்துவிட்டார்கள் என்றே கூறவேண்டும்.

இங்கு மாவையா? விக்கினேஸ்வரனா? என்பது ஒரு பிரச்சினையே அல்ல. விக்கினேஸ்வரன் எந்த அரசியலின் குறியீடாகக் கொண்டு வரப்படுகின்றார் என்பதுதான் பிரச்சினை. தமிழ்த்தேசியநீக்க அரசியலின் குறியீடாகவே அவர் கொண்டுவரப்படுகின்றார்.
கொழும்பு மேட்டுக்குடியின் அடிவருடிகள் சிலர் விக்கினேஸ்வரனுக்கு தமிழ்த்தேசிய சாயம் பூச முயற்சிக்கின்றனர். விக்னேஸ்வரனின் வருகை ஐந்தாம் கட்ட ஈழப்போரின் தொடக்கம் என்றும் கதைவிடுகின்றனர் அரசியல் அயோக்கியர்கள். விக்கினேஸ்வரன் ஒரு லிபறல்வாதி. அவரிடம் இனப்பற்று, மொழிப்பற்று, கலாசாரப்பற்று இருக்கலாம். ஆனால் அவரால் ஒருபோதும் தமிழ்த்தேசியவாதியாக மாறிவிடமுடியாது. தமிழ்த்தேசியம் என்பது ஒரு தேசியஇனம் அல்லது தேசம் தன்னைத் தானே ஆள்வதுடன் தொடர்புடையது. தேசத்தின் இருப்பு பாதுகாப்பதுடன் தொடர்புடையது. இது வாழ்ந்து அனுபவித்து அதனூடாக எழுச்சியடையும் ஒரு உணர்வு. விக்னேஸ்லவரனுக்கு வாழ்ந்து அனுபவித்த பழக்கம் இல்லை. அவருடைய இருப்பு, அவருடைய குடும்பத்தின் இருப்பு எல்லாம் தென்னிலங்கையைச் சார்ந்தது.

விக்கினேஸ்வரன் இதுவரை தெரிவித்த கருத்துக்களில் எந்த இடத்திலும் தேசியக்கோரிக்கைகளைப் பற்றிக் கூறவில்லை. ஜனநாயகக் கோரிக்கைகளையே கூறியிருக்கின்றார். ஒற்றையாட்சியின் கீழ் அமைந்த மாகாணசபைகளுக்கு அதிகாரம் வழங்கப்படவேண்டும் எனக்கூறியிருக்கின்றார். இராணுவம் பறித்த காணிகள் திருப்பிக்கொடுக்கப்படவேண்டும் எனசக்கூறியிருக்கின்றார். ஒற்றையாட்சிக்குப் பதிலாக சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த இணைப்பாட்சி உருவாக்கப்படல் வேண்டும் என்றோ, சிங்களக்குடியேற்றங்கள் அமைத்தல், விகாரைகளை அமைத்தல், மீனவர் படையெடுப்பைத் தடுத்தல் என்பவை பற்றியோ எதுவும் கூறவில்லை. பின்னயவையெல்லாம் தேசியக்கோரிக்கைகள் அவற்றைக் கூறுவதற்கு அவர் தயாரில்லை.

தாரளவாதச் சிந்தனையின்படி எவரும் எங்கும் குடியேறலாம். எங்கும் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடலாம். பெரும்பான்மை ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளலாம். இதன்படி சிங்களகுடியேற்றமும் தவறல்ல, மீனவர் படையெடுப்பும் தவறல்ல. விகாரைகளை அமைத்தலும் தவறல்ல. ஒற்றையாட்சியும் தவறல்ல. விக்னேஸ்வரன் இதனையே பிரதிபலிக்கின்றார். தேசியக்கோரிக்கைகளை முன்வைத்து தனது பிள்ளைகளின் இருப்பிற்கு நெருக்கடிகளைக் கொண்டுவர அவர் ஒன்றும் பிரபாகரன் அல்லவே.

முதலமைச்சராக வருவதற்கு முன்னரே புலம்பெயர்ந்துவாழும் தமிழர்(டயஸ்போறா)ற்கும், தமிழ்நாட்டு தேசியசக்திகளுக்கும் கட்டளையிடுகின்றார். கூட்டமைப்பின் தமிழ்த்தேசியநீக்க அரசியலுக்கு ஒத்துழையுங்கள் எனக்கேட்கின்றார். பாதுகாப்பான இடத்தில் நின்றுகொண்டு அரசியல் செய்யாமல் நாட்டிற்கு திரும்புங்கள் எனக்கிண்டலடிக்கின்றார். இவையெல்லாம் அவர் என்ன அரசியலை நகர்த்தப்போகின்றார் என்பதை வெளிப்படையாகக் காட்டுகின்றன.
இன்று கூட்டமைப்பின் தமிழ்த்தேசியநீக்கஅரசியலால் பலவீனப்படப்போகின்றவர்கள் புலம்பெயர் சக்திகளும், தமிழ்நாட்டுச்சக்திகளுமே. தமிழர் விவகாரத்தை சர்வதேசமயமாக்குவதிலும், இந்தியமயமாக்குவதிலும் இவர்களின் பங்கு அளப்பரியது. கடந்த 2009 ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் கூட்டமைப்பின் அரசியல் நடவடிக்கைகளினால் ஏற்கனவே பலவீனப்படுத்தப்பட்டுள்ள தமிழக மற்றும் புலம்பெயர் தமிழர்களது முயற்சிகள், மேலும் விழுந்து நொருங்கப்போகின்றன. தமிழ்நாட்டு இளைஞர்களின் எழுச்சியினால் இந்தியமத்திய அரசாங்கம் திணறுகின்றது. கூட்டமைப்பு அந்தத் திணறலை இல்லாமல் செய்கின்றது.

இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்று இருப்பதை தெளிவாக வெளிப்படுத்துவது தமிழ்த்தேசிய அரசியலே அதனை நீக்கம் செய்துவிட்டால் நாட்டில் இனப்பிரச்சினை இருக்காது. அதன் பின்னர் ஜனநாயகப் பிரச்சினையும் மத்திய அரசுக்கும் – தமிழ் மக்களின் கூட்டிருப்பை சிதைத்த மாகாண நிருவாகத்திற்கும் இடையேயான நிர்வாகப் பிரச்சினையுமே இருக்கும்.

ஜனநாயக முரண்பாடு என்பது ஆளும்கட்சி, எதிர்க்கட்சி அரசியலுக்குரியது. சம்பந்தன் தலைமை இன அரசியலை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி அரசியலாக மாற்றமுனைகின்றது. இந்த அரசியல் உருவாகிவிட்டால் சிங்களக்கட்சிகளோடு கூட்டுச்சேர்வதற்கு எந்தவிதத் தடையும் கிடையாது. அமெரிக்க – இந்தியக்கூட்டு விரும்புவது இதைத்தான். சம்பந்தன் தலைமையும் அந்த இலக்கினை நோக்கியே நகர்ந்துகொண்டிருக்கின்றது. இது தமிழர் அரசியலை 40 களுக்கு இழுத்துக்கொண்டு செல்லும் முயற்சியாகும்.

ஆட்சிமாற்றம் ஒன்றிற்கு இன அரசியலைக் களத்திலிருந்து அகற்றவேண்டியது முன்நிபந்தனையாக உள்ளது. அமெரிக்க – இந்தியக்கூட்டு இந்த இலக்கினை நோக்கியே நகர்கின்றது. சம்பந்தன் தலைமை அதற்கு பாதை அமைத்துக்கொடுக்கின்றது.

புலிகள் மகிந்தரை ஆட்சிக்குகொண்டு வந்ததன் மூலம் இந்திய – அமெரிக்கக் கூட்டின் புவிசார் அரசியல் நலன்பேண் நகர்வுகளுக்கு ஒரு பூட்டுப்போட்டிருந்தனர். இப்பூட்டை உடைக்கவேண்டுமாயின் தமிழ்த்தேசிய அரசியலை ஏற்று அங்கீகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இந்திய – அமெரிக்கக்கூட்டிற்கு இருந்தது. தமிழ்த்தேசிய அரசியல் உறுதியாக இருந்தால் அதற்கு அங்கீகாரம் வழங்குவதைத் தவிர அவைகளுக்கு வேறு தெரிவு இருந்திருக்காது. புலிகள் தொடர்ச்சியாக இருந்தால் அங்கீகாரத்தை கொடுக்கவேண்டி வரும் என்பதற்காகவே முதலில் புலிகளை அழித்தனர். தற்போது அங்கீகாரம் எதுவும் இல்லாமலே கூட்டமைப்பின் தலைமையைக் கொண்டு உடைக்கமுயற்சிக்கின்றனர்.

பிரபாகரன் போட்ட  பூட்டை சம்பந்தன் உடைக்கின்றார். இதற்கு கைமாறு வெறும் 13வது திருத்தம் மட்டுமே!

முத்துக்குமார்.

0 கருத்துக்கள் :