சேரன் பேட்டியை பார்த்து சந்துரு குடும்பத்தினர் கொதிப்பு

4.8.13

தனது மகளின் காதல் விவகாரம் குறித்து டைரக்டர் சேரன் தனது மனைவியுடன் இன்று பேட்டி அளித்தார். அப்போது டைரக்டர் அமீரும் உடன் இருந்தார். இந்த பேட்டியின் போது சேரனும், அமீரும் சந்துருவை பற்றியும் அவரது குடும்பத்தினர் பற்றியும் பல்வேறு கருத்துக்களை கூறினார்கள்.

சேரன் கூறும் போது ‘‘சந்துரு நல்லவனாக திரும்பி வந்தால் பின்னர் பார்க்கலாம்’’ என்றார். அமீர் கூறும் போது, ‘‘சந்துருவின் குடும்பத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபற்றி உளவு பிரிவு போலீசார் விரிவாக விசாரித்தால் உண்மை தெரியும்’’ என்றார்.

இதனை டி.வி. நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்த சந்துருவும், அவரது சகோதரிகளும், குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தங்களை பற்றி அவதூறான கருத்துக்களை கூறியதை கேட்டதும் அவர்கள் கொதிப்படைந்தனர்.

இது பற்றி சந்துருவின் சகோதரி பத்மா கூறும் போது, ‘‘எங்கள் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு டைரக்டர் சேரனும், அமீரும் நிச்சயம் ஒரு நாள் பதில் சொல்ல வேண்டியிருக்கும்’’ என்றார். சந்துரு கூறும்போது, ‘‘தாமினியை அருகில் வைத்து கொண்டு சேரன் இப்படி சொல்வாரா’’ என்றார்.

சேரன் கொடுத்த பேட்டி

நடிகரும், டைரக்டருமான சேரன் நேற்று போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் தனது மகளின் காதல் பற்றி பரபரப்பு கண்ணீர் பேட்டி கொடுத்தார்.
நடிகரும், டைரக்டருமான சேரன், நேற்று பகலில் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து பேசினார். புகார் மனு ஒன்றையும் கொடுத்தார். அவருடன் தென் இந்திய நடிகர் சங்கத்தலைவர் சரத்குமாரும் சென்று போலீஸ் கமிஷனரை சந்தித்தார்.
நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி மற்றும் டைரக்டர்கள் அமீர், ஜனநாதன், அஸ்லாம், கரு.பழனியப்பன், சுப்பிரமணியம் சிவா, வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் ஆகியோரும் கமிஷனர் அலுவலகம் வந்திருந்தனர்.

நேற்று முன்தினம், சேரன் மீது, அவரது மகள் காமினி புகார் மனு ஒன்றை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்தார். அந்த மனுவில், தனது காதலர் சந்துருவை, தனது தந்தை சேரன் மிரட்டுவதாக தெரிவித்து இருந்தார்.

அந்த மனு அடிப்படையில், ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் சேரனிடம், உதவி போலீஸ் கமிஷனர் ஷியாமளாதேவி விசாரணை நடத்தினார். விசாரணையின்போது, புகார் கொடுத்த காமினியும் அங்கு இருந்தார். விசாரணை முடிந்த பிறகு, காமினி தனது தந்தை சேரனுடன் செல்ல மறுத்தார். காமினியை அவரது உறவுப்பெண் ஒருவர் வீட்டில் போலீசார் நேற்று முன்தினம் இரவு தங்க வைத்தனர்.

தனது மகள் கொடுத்த புகார் மனுவிற்கு மறுப்பு தெரிவித்தும், தனது மகளின் காதல் பற்றிய உண்மை நிலையை வெளியிட்டும், போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகார் மனுவில் சேரன் தெரிவித்து இருந்தார்.
கமிஷனரை சந்தித்துவிட்டு வெளியில் வந்த சேரன், அங்கு காத்திருந்த ஏராளமான நிருபர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கண்ணீர்விட்டு அழுதுவிட்டார். உடன் நின்றிருந்த சரத்குமார், ராதாரவி, அமீர் ஆகியோர் அவரை சமாதானப்படுத்தினார்கள்.

இருந்தாலும் கண்ணீர் மல்க அவர் கூறியதாவது:-
பொதுவாக நான் காதலை ஆதரிப்பவன். நான் காதல் திருமணம்தான் செய்துள்ளேன். நான் பெரிய பணக்காரன் அல்ல. சாதாரண, மிகவும் கீழ்நிலையில் இருந்து வந்தவன் நான். இப்போதும் நான் பணக்காரன் அல்ல. சாதி, மத பேதம் பார்ப்பவனும் அல்ல. எனது பிள்ளைகளையும் அதுபோல்தான் வளர்த்துள்ளேன். எனது மகளை நான் மிகவும் நேசிக்கிறேன். நான் எனது மகளை முழு சுதந்திரம், உரிமை கொடுத்து வளர்த்தேன்.

அவளது காதலை முதலில் நான் ஆதரித்தேன். ஆனால் ஒரு தகப்பன் என்ற முறையில், எனது மகளுக்கு கணவனாக வருபவரையும், எனக்கு மருமகனாக வருபவரையும், நல்லவரா, கெட்டவரா என்று பார்க்க கூடாதா? ஒரு தவறான பையனை எப்படி எனது மகளின் கணவனாக ஏற்றுக்கொள்ள முடியும். அந்த பையன் கொடுத்த தொல்லையால் மன உளைச்சல் அடைந்த எனது மகளை 15 நாட்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை கொடுத்தேன். அப்போது அவளுக்கு அதிக ரத்த அழுத்தம் இருந்தது.

எனது மகளே வலிய வந்து கடந்த மாதம் 10-ந் தேதி அன்று, அந்த பையன் மீது புகார் கொடுத்தாள். அவன் ஒரு சேடிஸ்ட் என்றும், பல பெண்களுடன் சுற்றுகிறவன் என்றும், அவன் மிரட்டுகிறான் என்றும், அவனிடம் இருந்து தன்னை மீட்க வேண்டும் என்றும், பாதுகாப்பு தரவேண்டும் என்றும், புகாரில் கூறி இருந்தாள்.
இப்போது என்மகளே என்மீது, நான் மிரட்டுவதாக புகார் கூறி இருக்கிறாள். நான் வன்முறையை விரும்பாதவன். எனது படத்தில் கூட வன்முறை காட்சிகளை வைக்கமாட்டேன். எனது மகள் நல்லபடியாக என்னிடம் வருவாள். அவள் விரும்பும் பையன் நல்லவனாக இருந்தால், ஏற்றுக்கொள்ள தயார்.

இவ்வாறு அவர் கண்ணீருடன் உருக்கமாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, நான் கொடுத்துள்ள புகார் மனு மீது, உரிய நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் உறுதி அளித்தார் என்றும் தெரிவித்தார். சேரன் வெளியில் வந்தவுடன், கமிஷனர் ஜார்ஜ், இந்த வழக்கை விசாரிக்கும் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் டாக்டர் சிவகுமார், உதவி கமிஷனர் சியாமளாதேவி ஆகியோரை அழைத்து பேசினார்.

தனது மகளின் காதல் பிரச்சினையில் உண்மையில் நடந்தது என்ன? என்பதை டைரக்டர் சேரன், கமிஷனரிடம் கொடுத்த புகார் மனுவில் விளக்கி கூறி உள்ளார்.

சேரன் போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகார் மனு விவரம் வருமாறு:-
சென்னை சூளைமேடு வள்ளலார் முதலாம் தெருவில் வசித்துவரும் சந்துரு என்ற சந்திரசேகரை கலை நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்ததாகவும், அவரை விரும்புவதாகவும், தங்களுக்கிடையில் இருக்கும் காதல் கண்ணியமான முறையில் இருப்பதாகவும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எனது மகள் காமினி என்னிடம் தெரிவித்தாள்.

உடனே நான் சந்துருவின் குடும்பத்தினரை அழைத்து பேசினேன். எனது மகள் படிப்பு முடியட்டும் என்றும், சந்துருவும் தனக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளட்டும் என்றும், அதுவரை காத்திருக்கலாம் என்றும் தெரிவித்தேன். அனைவரும் அதை ஏற்றுக்கொண்டனர்.

ஆனால் அதற்கு பிறகு எனது மகள் கடந்த ஒரு ஆண்டுகாலமாக, ஒருவிதமான மன இறுக்கத்தோடு காணப்பட்டாள். இதுபற்றி எனது மகளிடம் கேட்டபோது, சந்துரு நல்லவர் இல்லை என்றும், இரண்டு, மூன்று பெண்களுடன் சுற்றுவதாகவும் அந்த பெண்கள் அவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும் பெண் ஒருவர் தன்னிடம் கூறினார் என்றும், இதனால் சந்துருவை விட்டு, விலக எண்ணியபோது, அவரது செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் எனது மகள் என்னிடம் கூறினாள்.
ஆனால், சந்துரு தொடர்ந்து எனது மகளுக்கு தொல்லை கொடுத்து வந்தார். மேலும் எனது மகளின் ‘பேஸ் புக்’ விஷயங்கள் அனைத்தும் சந்துருவின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஒரு கட்டத்தில் சந்துரு எனது மகளிடம், பேஸ்புக்கில் ஆபாச தகவலை வெளியிடுவேன் என்று மிரட்ட ஆரம்பித்தார்.

இந்த பிரச்சினைகளில் இருந்து நீ விடுபட வேண்டும் என்றால், தனது வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ள பெரும் தொகை தனக்கு தரவேண்டும் என்றும், சந்துரு எனது மகளை பயமுறுத்தியபடி இருந்தார். பணம் தர முடியாவிட்டால், உனது தந்தை எடுக்கும் படத்தில் என்னை கதாநாயகனாக்க வேண்டும் என்றும் எனது மகளை, சந்துரு வலியுறுத்தி இருக்கிறார்.

இந்த இரண்டில் ஒன்று நடக்காவிட்டால், உன் பெயரையும், உன் குடும்பத்தின் பெயரையும் அசிங்கப்படுத்தி, நாசப்படுத்திவிடுவேன் என்றும் சந்துரு தெரிவித்துள்ளார். ஆனால் எனது மகள் இதுபற்றி என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. அதனால்தான் சந்துரு மீது, எனக்கு தெரியாமலேயே என்மகள் போலீசில் புகார் கொடுத்திருக்கிறாள்.
தொடர்ந்து சந்துரு கொடுத்த தொல்லைகளை தாங்க முடியாமல், சந்துரு மீது புகார் கொடுத்த விஷயங்களை பின்னர் எனது மகள் என்னிடம் தெரிவித்தாள்.

இந்த நிலையில்தான் எனது மகளே இப்போது என்மீது பொய்யான புகாரை கொடுத்துள்ளாள். சந்துரு எனது மகளை சூழ்நிலை கைதியாக வைத்துள்ளார் என்று அறிகிறேன். சந்துரு எப்படிப்பட்டவர் என்பதை ஒரு உயர் அதிகாரி மூலம் விசாரணை நடத்திட வேண்டும். ஏற்கனவே சந்துரு மீது என்மகள் கொடுத்த புகார் பற்றியும் உரிய விசாரணை நடத்த வேண்டும். எனது மகளுக்கு சந்துருவால் எந்த ஆபத்தும் வராதவாறு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :