தமது உயிர்களை ஆகுதியாக்கிய வீர மறவர்களதும் பொதுமக்களதும் தியாகங்கள் வீண்போகாது

21.8.13

எதிர்கால தமிழ்ச் சந்ததிகள் தலை நிமிர்ந்து வாழவேண்டும் என்பதற்காகத் தமது உயிர்களை ஆகுதியாக்கி வீரகாவியமான வீர மறவர்களதும் பொதுமக்களதும் தியாகங்கள் என்றும் வீண்போகாது என்பதை வடமாகாணசபைத் தேர்தலில்  பகிரங்கமாக வெளிப்படுத்துவோம்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபை பதில் தலைவரும்,  வடமாகாணசபை வேட்பாளருமாகிய எம்.எம்.ரதன் தெரிவித்தார்.   வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வவுனியா மாவட்ட வேட்பாளர்களுக்கான முதலாவது அறிமுகக்கூட்டம் செட்டிகுளம் மெனிக் பாமில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மெனிக்பாம் இளைஞர் விளையாட்டுக்கழகத் தலைவர் சி.நிரூபன் தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது:
தமிழினத்தின் வரலாற்றில் மற்றுமொரு தேர்தல் வந்துள்ளது. அதை நாம் பலமான முறையில் எதிர்கொள்ள வேண்டும். எமது இனத்தின் கடந்தகாலத் தியாகங்களை மனதிலே நிறுத்தி உறுதியுடன் செயற்பட எமது மக்கள் தயாராக வேண்டும்.   எம்மை ஆயுதவழியில் அடக்கிய ராஜபக்­ச அரசு இன்று ஜனநாயக வழியிலும் எம்மைத் தோற்கடிக்கவேண்டும் எனக் கங்கணம்கட்டி நிற்கின்றது.  
இந்த அரச தரப்பினர் எமது தாயகத்தில் எதையும் செய்யலாம் என்று கனவு காண்கின்றார்கள். ஆனால், எமது மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள்.   வடமாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு வீரம் செறிந்த நாளான ஜூலை 5இல் ஜனாதிபதி மஹிந்த அங்கீகாரம் வழங்கியமை எமது இனத்தின் வரலாற்றில் முக்கியமானதொன்றாகும்.  
இதனடிப்படையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி வாக்கு என்ற ஜனநாயக பலத்தை எமது மக்கள் உறுதியுடன் செலுத்துவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.   ஆண்டாண்டு காலமாக - பாட்டன், கொப்பாட்டன் முதல் நாங்கள் வாழ்ந்த சரித்திர ரீதியான வடக்கு, கிழக்கு இணைந்த தாயக மண் எங்களின் சொந்த மண். நாங்கள் ஆளப்பிறந்தவர்கள்; வாழப் பிறந்தவர்கள்.
நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட வீர மறவர்களையும், இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்களையும் போரிலே காவு கொடுத்த நாம் எவருக்கும் கைகட்டி தலைகுனிந்து நிற்கவேண்டிய தேவையில்லை.   "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' என்று நாங்கள் தலைநிமிர்ந்து நிற்போம் என்றார்.  
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், செட்டிகுளம் பிரதேச சபைத் தலைவர் கபிரியேல் அந்தோனிப்பிள்ளை மற்றும் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட ஏனைய வேட்பாளர் கள் உரையாற்றினர்.  
வடமாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குவீரம் செறிந்த நாளான ஜூலை 5இல் ஜனாதிபதி மஹிந்த அங்கீகாரம் வழங்கியமை எமது இனத்தின் வரலாற்றில் முக்கியமானதொன்றாகும்.

0 கருத்துக்கள் :