இலங்கைக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்!- ஜெயலலிதா!

6.8.13

தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்பட்டும் இந்தியா மெத்தனமாக இருப்பதால் மீனவர்கள் கொதித்துப் போயிருக்கின்றனர், இலங்கை மீது மட்டுமல்ல தங்களுக்கு உதவ முன்வராத மத்திய அரசின் மீதும் கடும் வருத்தத்தில் அவர்கள் இருக்கின்றனர் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
மீனவர்கள் தொடர்பில் மீண்டுமொருமுறை பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதியிருக்கும் அவர், தனது கடந்த கடிதத்திற்குப் பின்னர், இராமேஸ்வரத்திலிருந்து ஐந்து படகுகளில் சென்ற 20 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கடத்தப்பட்டு நேற்று முன்தினம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.
இவ்வாறாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 90 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கைக் கடற்படையினர் மட்டுமல்ல இலங்கையைச் சேர்ந்த சில விஷமிகளும் தமிழக மீனவர்களைத் தாக்குகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆக இலங்கை நட்பு நாடாக நடந்துகொள்ளவில்லை, அது தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கிவரும் சூழலில் அந்நாட்டிற்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இந்தியத் தூதரக அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு 90 பேரையும் விடுவிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு பிரதமர் உத்திரவிடவேண்டுமென தனது கடிதத்தில் ஜெயலலிதா வலியுறுத்தியிருக்கிறார்.

0 கருத்துக்கள் :