தமிழினத்தைத் கருவழிக்க சிறீலங்கா எடுத்துள்ள இன்னொரு ஆயுதம்!

9.8.13

தமிழ் மக்கள் தமது தாய் நிலத்தில் நிம்மதியாக வாழ்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்டம் நடத்தியமைக்காக அப்பாவித் தமிழ் மக்களில் இலட்சம் பேரைக் கொன்று குவித்த சிறீலங்கா அரசாங்கம் இன்று தொடர்ந்தும் மறைமுக இன அழிப்பை மேற்கொண்டு வருகின்றது.

தமிழ் மக்களில் கணிசமானளவு மக்களைக் கொல்வதன் மூலமே இவர்களின் போர்க்குணத்தையும் பலத்தையும் அடக்க முடியுமென்று நினைத்த சிங்கள அரசு, இன்று அதன்படியே தனது கபடத்தை அரங்கேற்றி வருகின்றது. தொடர்ந்தும் இங்கு தமிழின அழிப்பிற்குரிய தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிங்களவர், தமிழர், முஸ்லிம் போன்ற இனங்கள் வாழ்ந்து வருகின்ற இலங்கைத் தீவில் இன்று தமிழினம் மூன்றாவது இனமாக மாறிக்கொண்டிருக்கின்றது. இந்தப் போக்குக்கு வலுச்சேர்ப்பதற்காக தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட வகையில் கருக்கலைப்பு மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டமிடல் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்த விடயம் குறித்து ஈழமுரசு ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்த நிலையில் இதன் தீவிரத்தன்மை தொடர்பில் மீண்டும் வெளிப்படுத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற பதிவேடுகளின் அடிப்படையில் இலங்கையில் இரண்டாவது இனமாக இருந்த தமிழ் இனம் இன்று மூன்றாவது நிலையை நோக்கித் தள்ளப்பட்டுக்கொண்டிருக்க காரணம் என்ன என்பதை வெளிப்படையாக ஆராய வேண்டும். தமிழ் மக்களில் மெத்தப் படித்த வர்க்கத்தினரும் நடுத்தர வர்க்கத்தினரும் ஒழுக்கம், கட்டுப்பாடு என்ற தற்பெருமை உடையவர்கள். தங்கள் குடும்ப நிலைமைகள், கௌரவம் போன்றவற்றுக்கு ஏற்பவே குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்கள்.
ஆனால், தாயகத்திலுள்ள கிராமப்புறங்களில் வாழ்ந்த மக்கள் இந்த நடைமுறைகள் குறித்து எதுவும் யோசிப்பதில்லை. அதிகளவு பிள்ளைகளைப் பெற்று தமது வாழ்வையும் வளம்படுத்திக்கொண்டனர். இந்த நிலையில், தமிழ் மக்களின் சனத்தொகையை தக்க வைத்த பெருமையும் தாயகத்திலுள்ள கிராமங்களின் தமிழ் மக்களையே சாரும். இவர்களின் கிராமங்களிலிருந்து முகிழ்த்தெழுந்த ஆயிரமாயிரம் வேங்கைகளே களமுனைகளிலும் அரும்பெரும் சாதனைகளை நிலைநாட்டியிருந்தனர்.
ஆனால், கடந்த முப்பது வருட காலமாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக இந்தக் கிராமக் கட்டமைப்புகள் உடைந்துள்ளன. முன்னையதைப் போன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்கான நிலைமை அங்கு இருக்கவில்லை. அடிக்கடி இடப்பெயர்வுகள், தாயகத்தில் விதிக்கப்பட்ட சிறீலங்கா அரசின் பொருளாதாரத் தடையால் குழந்தைகளின் பால்மாவு வகைகளின் விலையேற்றம் போன்ற இன்னோரன்ன காரணிகள் கடந்த முப்பது வருட காலமாக தமிழர் தாயகத்தில் கணிசமானளவு பிறப்பு வீதத்தை எட்ட முடியவில்லை.
மறுபக்கம் நோக்கினால், கடந்த முப்பது வருட காலமாக பிறப்பு வீதம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும் இறப்பு வீதம் சடுதியாக அதிகரித்திருந்தது. தினந்தோறும் சிங்களப் படையினரின் தாக்குதல்களால் தமிழ் இளைஞர், யுவதிகள், பெரியவர்கள் என்று இறப்புக்கள் அதிகரித்திருந்தன. மேற்கூறப்பட்ட சம்பவங்களுக்கு மேலாக, இறுதி யுத்தம் என்று சொல்லப்படுகின்ற 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 மே மாதம் வரையான காலப்பகுதிக்குள் வன்னிக்குள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் சிங்கள அரசின் திட்டமிடலுக்கு இணங்க சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.
மேற்படி தரவுகளை வைத்துக்கொண்டு கணிக்கும் பட்சத்தில் தமிழ் மக்களின் வளர்ச்சி வீதத்தை அறிந்துகொள்ள முடியும். யுத்தத்தில் கொல்லபட்ட இலட்சக்கணக்கான பொதுமக்கள் பல சந்ததிகளை உருவாக்கக்கூடியவர்கள். படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இலட்சக் கணக்கான மக்களும் இருந்திருந்தால், குறிப்பாக படையினரால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் திருமணம் செய்து வாழ்ந்திருந்தால் இன்று அவர்களின் பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகள் என்ற ரீதியில் பல இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் பல்கிப் பெருகியிருப்பார்கள்.
ஆனால், சிறீலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட படுகொலைகளால் எமது பல இலட்சம் தமிழ் மக்களை நாம் இழந்திருக்கின்றோம். இவ்வாறான நிலையிலும் சிறீலங்கா அரசாங்கம் தற்போது எஞ்சியிருக்கின்ற தமிழினத்தையும் மறைமுகமாகக் கொல்லுகின்ற, குறைக்கின்ற சதித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. அதாவது கிராமங்களில் திட்டமிட்ட முறையில் கருக்கலைப்பு மன்னர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே படையினருடன் சேர்ந்து இயங்கிய ஒட்டுக்குழு உறுப்பினர்களில் குறிப்பிட்டளவானோரைத் தெரிவுசெய்த சிறீலங்கா இரர்ணுவப் புலனாய்வுப் பிரிவானது அவர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்கியுள்ளது.
அவர்கள் தத்தமது பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை வாழ்வதைப் போன்று காட்டிக்கொண்டு பிரதேசங்களிலுள்ள கர்ப்பவதிகளுக்கு திட்டமிட்டு கருக்கலைப்பு செய்கின்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை நம்பி பல பெண்கள், குறிப்பாக கணவனுடன் குடும்பமாக வாழ்ந்து வருகின்ற பல பெண்களே கருக்கலைப்பு செய்கின்ற நிலைக்குத் தூண்டப்பட்டுள்ளனர். சிறீலங்கா அரசாங்கம் தமிழர் தாயகத்திலுள்ள பெண் மருத்துவ அதிகாரிகளைப் பயன்படுத்தி தெரிவுசெய்யப்பட்ட குறிப்பிட்டளவான குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் மூலமாக பிரதேசத்திலுள்ள பெண்கள் கருக்கலைப்புக்கு தூண்டப்படுகின்றனர்.
அத்துடன், மேற்கூறப்பட்ட அதே பாணியில் தற்போது குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தென்னிலங்கையில் சிங்களவர்களிடையே குடும்பக் கட்டுப்பாட்டு மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழர் தாயகத்திற்கு அந்த மருந்துகள் தாராளமாக விநியோகிக்கப்படுகின்றன. இந்த மருந்துகளைப் பாவிக்குமாறும் கர்ப்பவதிகள் தூண்டப்படுகின்றனர்.
தமிழர்களைத் திட்டமிட்டு இல்லாதொழிக்க எடுக்கப்பட்டு வருகின்ற இத்தகைய செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகும். இந்த விடயத்தில் தமிழர் தாயகத்திலுள்ள உயர் மருத்துவ அதிகாரிகள் சிறீலங்கா அரசுக்கு துணை போகின்றமையும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இந்த நாட்டிலிருந்து தமிழ் மக்களை இல்லாதொழிப்பதற்கு சிங்கள அரசாங்கமும் அதன் புலனாய்வுப் பிரிவும் மேற்கொண்டு வருகின்ற இரகசிய நடவடிக்கைகளுக்கு தமிழர்கள் துணைபோவதானது தன்னினத்தை தானே அழித்தமைக்கு ஒப்பானதாகும்.
கடந்த முப்பது வருட காலமாக இடம்பெற்ற யுத்தம் எமது தாயகத்தைக் கூறுபோட்டுள்ள நிலையிலும் எமது மக்களைக் கொன்று குவித்துள்ள நிலையிலும் எமது தமிழினத்தை மீண்டும் எழுச்சி மிக்க இனமாக மாற்றுகின்ற தேவை தாயகத்திலுள்ள மற்றும் புலம்பெயர் நாடுகளிலுள்ள ஒவ்வொரு தமிழ் மக்களினதும் கடமையாகும். கடமை என்பதற்கு அப்பால் இதுவொரு அரும்பணியாகும். தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமாகிய போது தமிழீழ தேசியத் தலைவர் வேற்று நாட்டு மக்களை நம்பி போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. எமது மக்களை நம்பியே ஆரம்பித்தார்.
ஆனால், எமது மக்களை மகிந்த அரசாங்கம் இன்று திட்டமிட்ட இன அழிப்பின் மூலமாக கொன்றொழித்துள்ளது. இதன் பின்னரும் நாம் வாழாவிருப்போமாயின் எமது இனம் இன்னும் குறுகிய காலத்திலேயே பாரிய நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியேற்படும். எனவே, நாம் இப்போதே திட்டமிட்டு காய்நகர்த்தல்களை மேற்கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் எங்களை நாங்களே அழித்தவர்களாவோம்.
தென்னிலங்கைச் சிங்களவர்களிடையே பிள்ளைப் பிறப்பை ஊக்குவிக்கின்ற செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அரசியல்வாதிகள் தொடக்கம் மத அமைப்புகள் வரை அனைவருமே சிங்கள மக்களை அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு தூண்டுகின்றனர். இதேபோன்றே இங்கு வாழ்கின்ற முஸ்லிம் இனமும் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது.
இந்த நிலையில் தமிழினம் மட்டும் குட்டிச் சுவராக இருக்க முடியாது. தமிழர்கள் எதற்கும் தயாரான இனம். இந்த விடயத்திலும் தமிழர்கள் கூடிய கவனம் எடுக்க வேண்டும். புலம்பெயர் தமிழர்களும் தாயகத்திலுள்ள தமிழ் மக்களும் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும். இது வெட்கப்படவேண்டிதோ வேடிக்கையானதோ அல்ல. சிந்திக்க வேண்டிய விடயம்.
புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் உறவுகள் தாயகத்திலுள்ள உங்கள் உறவினர்களுக்கு இந்த விடயத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். குழந்தைகளைக் கூடுதலாகப் பெற்று எமது தமிழினத்தின் இருப்பைத் தக்க வைக்க முன்னின்று உழைக்க வேண்டும்.
- தாயகத்தில் இருந்து வீரமணி

0 கருத்துக்கள் :