வல்வை தீருவில் பூங்கா மீது தாக்குதல்! பின்னணியில் இராணுவம்

4.8.13

வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாத நபர்களினால் அடித்து நொருக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் குறித்த சம்பவத்தின் பின்னணியில் இராணுவத்தினரே இருப்பதாக தமிழ்தேசிய கூட்டமைப்பு இன்று குற்றம்சாட்டியுள்ளது.
குறித்த பகுதியில் விடுதலைப் புலிகளின் நினைவிடம் ஒன்று அமைந்திருந்த நிலையில் அது யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரால் அடித்து நொருக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்தப் பகுதியில் வல்வெட்டித்துறை நகரசபைக்குச் சொந்தமான பூங்காவை நகரசபை புனரமைத்து மக்கள் பாவனைக்கு விட்டிருந்தது.
இதற்கு எதிராக இராணுவத்தினர் வல்வெட்டித்துறை நீதிமன்றில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்ததுடன், அந்தப் பகுதி இராணுவத்தினருக்குச் சொந்தமானது எனக்கூறி அதனை மீளவும் தம்மிடம் தரவேண்டும் எனவும் கேட்டுவந்தனர்.
எனினும் அதனை அவ்வாறு வழங்க முடியாதென நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில், அண்மையில் நகரசபை தலைவரின் வீட்டிற்குள் நுழைந்த நபர்கள் அங்கிருந்த மடிகணனியை மட்டும் திருடிச் சென்று அதிலுள்ள ஆவணங்களை பரிசீலித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றிரவு பூங்காவிற்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் பூங்காவின் பெயர் பலகை உள்ளிட்ட அனைத்தையும் அடித்து நொருக்கியுள்ளனர்.
இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இராணுவமே இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளதுடன், பூங்காவை உடைத்துச் சேதப்படுத்தும் அநாகரீகமான வேலையினை மக்கள் செய்ய மாட்டார்கள், செய்ய வேண்டிய அவசியமும் அவர்களுக்கு கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

0 கருத்துக்கள் :