நவநீதம்பிள்ளை அவர்களின் பேனாவில் நிரப்பப்பட்ட வன்னி மக்களின் கண்ணீர்

30.8.13

ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் இலங்கையில் கால்பதித்த நேரம் தொட்டு இந்த நிமிடம்வரை அவரது சுற்றுப் பயணம் திட்டமிட்டபடி இடம்பெற்று வருகிறது.
தமிழர் தாயகமெங்கும் சென்று அவர் நிலைமைகளை ஆராய்ந்து வருவதாக சொல்லப்பட்டாலும், மட்டக்களப்பு, மன்னார் பிரதேசங்களுக்கு அவர் சென்றதான தகவல் எதுவும் இதுவரை இல்லை. ஆனாலும், மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை அவர்களை சந்திப்பதற்கு ஆணையாளர் அழைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வலுவான வாக்குமூலத்தை வழங்கக்கூடியவராக கருதப்படும் ஆண்டகை அவர்கள் தாயக மக்களின் கடந்தகால, நிகழ்கால நிலைமைகளை தெட்டத் தெளிவாக ஆணையாளரிடம் முன்வைப்பார் என எதிர்பார்க்கலாம்.
மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் இலங்கை அரசின் திட்டமிட்ட அவசர குடியேற்றம் பற்றிய தகவல்களை அறியவும், இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற இனப் படுகொலைகளின் எண்ணிக்கை, மற்றும் மனிதாபிமானமற்ற போர்க்குற்றங்கள் பற்றிய தகவல்களை அறியும் நோக்கிலேயே ஆணையாளர் அவர்கள் ஆயரை சந்திப்பதற்கு முன்வந்திருக்கக்கூடும் எனறு கருதுவதற்கு இடமுண்டு. ஆயரை சந்தித்தாலே தாயகத்தின் உண்மை நிலைமைகளை அறிந்து கொள்ள முடியும் என்பது ஆணையாளருக்கு முன்கூட்டியே உணர்த்தப்பட்டிருக்கக் கூடும்.
வடக்கில் திட்டமிட்ட குடியேற்றத்தின் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தை ஏனைய மாவட்டங்களோடு இணைத்து, சிங்கள பிரதேசமாக பங்கு போட்டுக் கொண்டுள்ள இலங்கை அரசு, மன்னார் மாவட்டத்தையும் அதே பாணியில் பிரித்தெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
வடக்கின் தேர்தலுக்குப் பின் எழக்கூடிய காணி அதிகாரப் பிரச்சனைக்கு முன்பாக, சிங்கள குடியேற்றத்தை செய்துவிடவேண்டும் என்பதில் இலங்கை அரசு முனைப்பாகவே இருக்கிறது. அதற்கான பொறுப்பை மகிந்தாவின் மகன் நாமல் ஏற்றுள்ளதாகத் தெரிகிறது. போரின்போது படையினருக்கு செலவிட்ட பணத்தைவிடவும் கூடுதலான பணத்தை போரில்லாத ஒரு நிலையிலும் படையினருக்கே வழங்கி, அவர்கள் மூலமாகவே பாரிய அளவில் சிங்கள குடியேற்றத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது.
இறுதிப் போரின்போது மட்டமல்ல, அதற்கு முன்பான முப்பது ஆண்டுகளில் சிங்கள அரச படைகளால் செய்யப்பட்ட அட்டூழியங்கள், இன அழிப்புகள், மனிதப் படுகொலைகள், உடமை அழிப்புகள், போர்க்குற்றங்கள் போன்ற எவற்றுக்குமே எந்த ஒரு சிங்கள அரசும் அனுதாபம் தெரிவித்ததும் இல்லை, அதை ஒத்துக்கொண்டதுமில்லை.
கடந்த காலத்தில் அரசமைந்திருந்தவர்கள் இப்போது வேதாந்தம் பேசத் தலைப்பட்டாலும், அவர்களும் இன அழிப்பின் குற்றவாளிகளே. இவர்களில் அதிகம் உயிர் பலி எடுத்த பெருமையை பெறுபவர் யார் என்றால், மகிந்தாவே முன்னணியில் நிற்கிறார்;. அதனால்தான் அவரை சர்வதேசம் குறிவைத்துள்ளது.
என்னதான் அவர் வீரம் பேசினாலும், எந்த மேல்நாட்டவருக்கும் நாங்கள் அடிபணியமாட்டோம் என்று சொல்லியிருந்தாலும், நவநீதம்பிள்ளை அவர்கள் வந்து இறங்கிய சமயம், அவரை அலட்சியப் படுத்துவதுபோல் சர்வாதிகார நாடொன்றுக்கு புறப்பட்டுச் சென்றிருந்தாலும்கூட, போகும்போது,“அந்த மனிசி இங்க நிற்குமட்டும் அடக்கி வாசியுங்கோடா...!” என்று தன் கூலிப் படைகளுக்கு சொல்லிவிட்டுச் சென்றிருப்பதாகவே தெரிகிறது. காக்கியுடையினரை முடக்கிவிட்டுச் சென்றிருந்தாலும், காவி உடை தரித்த இனவாதப் பிக்குககளை தூண்டிவிட்டே சென்றிருக்கிறார். அவர்களும் வழமையான தங்களது இனவாதக் குரலை முழங்கவிட்டபடியேதான் இருக்கிறார்கள்.
நவநீதம்பிள்ளளை அவர்களின் வருகையைப்பற்றி இனவாதிகள் மட்டுமல்ல இலங்கை அரசைச் சார்ந்தவர்கள்கூட பலவிதமான கருத்துக்களை சொல்லியுள்ளார்கள். “ஆணையாளரை இலங்கைக்குள் விட்டதே தவறு, அதுவும் வடக்குக்கு செல்ல அனுமதித்தது அதைவிடத் தவறு” என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் சொல்லியுள்ளது. பலவிதமான போராட்டங்கள் கொழும்பில் இடம்பெற்றுவரும் நிலையில், பலவேறு அமைப்புகளும் இதுபோன்ற கருத்துக்களை ஆணையாளருக்கு எதிராக வெளியிட்டு வருகின்றன.
மகிந்த சமரசிங்க, பீரிஸ். திணேஸ் குணவர்தன போன்ற அமைச்சு அந்தஸ்துடையவர்கள், ஆணையாளரை அடிக்கடி சந்திக்கும் நிலையில் உள்ளதாலோ என்னவோ, இராஜதந்திர ரீதியிலான வார்த்தைப் பிரயோகங்களை பாவித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள். ஆனாலும் அவர்களது வார்த்தைகளில் அவநம்பிக்கையின் சாயலே வெளிப்பட்டது.
ஊடக அமைச்சின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஸ் நாணயக்காராவின் கருத்து அதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக இருந்தது. “ஆணையாளர் இலங்கையிலிருந்து சென்றபின் அறிக்கை தயாரிக்கப் போவதில்லை, ஏற்கனவே தயாரித்த அறிக்கையின் அடிப்படையிலேயே இலங்கை வந்துள்ளார்.” என்ற அவரது வார்த்தைகள் இலங்கை அரசின் இயலாமையை வெளிப்படுத்துவதாக இருந்தது.
மகிந்தாவின் அரசில் சண்டியனாக இருக்கும் மேர்வின் சில்வா, எல்லோரையும் மிஞ்சும் வகையில் மிகவும் கீழ்த்தரமான முறையில் நவநீதம்பிள்ளை அவர்களை விமர்சித்திருந்தார். நவநீதம்பிள்ளையை தான் திருமணம் செய்யத் தயாராக உள்ளதாக சொல்லி தனது சுய புத்தியை நிரூபித்துள்ளார்.
இப்படியாக நவநீதம்பிள்ளை அவர்களின் வருகையை சிங்கள இனவாதிகள் கடுமையாக எதிர்ப்பதும், விமர்சிப்பதும் இடம்பெற்று வந்தாலும், ஆணையாளர் அவர்கள் தான் மேற்கொண்ட பணியை தனது அதிகாரத்துக்குட்பட்டு செய்து வருவதாகவே தெரிகிறது. எங்கள் மக்களின் குறைகளை கேட்பதற்கு ஒரு சர்வதேச சக்தி முன்வந்திருக்கிறது என்பது ஆறுதலைத் தரும் விடயம்.
ஒரு பெண்மணியாக இருந்து, பிள்ளைகளை இழந்த தாய்மாரை, கணவனை இழந்த மனைவியரை, பெற்றோரை இழந்த பிள்ளைகளை நேரில் சந்தித்து அனைவரது அவலத்தையும் உள்வாங்கி ஆறுதல் சொல்லியிருப்பது பாதிக்கப்பட்ட எம் மக்களக்கு ஆறுதலைத் தந்திருக்கும் என்று நம்பலாம்.
வன்னி மக்களின் வற்றாத கண்ணீர் ஆணையாளரின் பேனாவை நிரப்பியிருக்கும் என் நம்பலாம். அது அவரது அறிக்கையில் ஊற்றெடுக்க வேண்டும் என்பதே தமிழினத்தின் எதிர்பார்ப்பு. அனைத்து தரப்பினரையும் நம்பி ஏமாந்து நிற்கிறது நம் இனம். இத்தனை வலிகளையும், இழப்புகளையும், துயரத்தையும் கண்ணால் கண்டுசெல்லும் ஆணையாளர் அவர்கள், அந்த மக்களின் விடியலுக்கும், அமைதியான வாழ்வுக்கும் ஏதாவது ஒரு வழி ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
க.ரவீந்திரநாதன்

0 கருத்துக்கள் :