எம்மவர்களைக் கொண்டே எங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்

26.8.13

நம்மை நாமே ஆளும் வகையிலான சுயநிர்ணயஉரிமை என்ற தூரநோக்கு இலக்கை நாம் அடைந்தே தீருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில், நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது, வடக்கு மாகாணசபைத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “தமிழன் அவ்வளவு சுலபமாக துவண்டு விடமாட்டான், வருவது வரட்டும் என முன்னேறுவோம்.

புதிய பரிணாமத்தில் எங்கள் போராட்டத்தை நடத்த வல்லவர்கள் நாங்கள் என்பதை உலகத்திற்கு சொல்ல நாங்கள் முயற்சிக்கிறோம்.
பிரிந்து நின்ற தமிழ்பேசும் மக்கள் வடக்கு மாகாணசபை என்ற அலகின் கீழ் எமது ஒற்றுமையை உலகறியச் செய்வோம்.
அதற்கான மிகச் சிறந்த வாய்ப்பாக வடக்கு மாகாணசபைத் தேர்தல் அமைந்துள்ளது.

எங்கள் ஒற்றுமைக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் அரசாங்கத்துடன் இணைந்திருப்பவர்களே.

தேர்தல் காலத்தில் மட்டும் தேனாகப் பேசி, தேர்ந்தெடுக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசதரப்பினர் முன்வருகிறார்கள்.
அதன்பின் எங்களை மறந்து விடுகிறார்கள். வாக்குரிமை என்பது அவர்களுக்கு ஒருவித பண்டமாற்றாகி விட்டது.
நாங்கள் இதைத் தருகின்றோம். நீங்கள் அதைத் தாருங்கள் என்கிறார்கள்.

ஆனால் தருவது அவர்களா? ஒரு போதும் இல்லை.
இந்த நாட்டு மக்களை எதிரிகளாகக் கருதி கொடும் போரை நடத்தி, எமது மக்களின் வாழ்வாதாரங்களை நிர்மூலமாக்கி, எமது மக்களின் உயிர்களை கொய்தெறிந்து, உடல்களைச் சின்னா பின்னமாக்கி விட்டு தற்பொழுது இராணுவத்தை வைத்து எம்மை அடக்குமுறைக்குள் அகப்படுத்தியிருக்கும் அரசின் தூதர்களே இத்தகைய பண்டமாற்றில் ஈடுபட்டுள்ளார்கள்.

உங்களுக்குத் தெருக்கள் தந்தோம், வீதிகள் தந்தோம், இன்னும் தருவோம் உங்கள் வாக்குகளை எமக்குத் தாருங்கள் என்கிறார்கள்.
தெருக்கள் போட்டார்களே, அதுவும் அவசர அவசரமாகப் போட்டார்களே, அது யார் பணத்தில்?
பாதிக்கப்பட்ட எமது மக்களின் இன்னல்களைப் பார்த்துப் பரிதாபப்பட்டு அண்டை நாடுகள் எமக்கனுப்பிய பணத்தைக் கொண்டு தான் தெருக்கள் போடப்பட்டன.

இதில் வேலை வாய்ப்பு யாருக்குக் கிடைத்தது? எமது மக்களுக்கா அல்லது தெற்கில் இருந்து வந்த சிங்கள மக்களுக்கா?
1956 ம் ஆண்டிலிருந்து 2009 ம் ஆண்டு வரை இந்தப் பக்கம் தலை வைத்தும் பார்க்காத ஆட்சியாளர்கள், ஏன் தெருக்களைப் போட்டார்கள்?

வீடிழந்து, வேலையிழந்து, உற்றார் உறவினரைப் பறிகொடுத்து தமது பாரம்பரிய காணிகளுக்குள் செல்ல முடியாது இராணுவக் கெடுபிடிக்குள் அல்லலுறும் எமது மக்களுக்காகவா இந்த தெருக்கள் அமைக்கப்பட்டன?
இராணுவம் வடமாகாணத்தின் எந்தப் பகுதியையும் உடனேயே சென்றடைய வேண்டும், தமிழ் பேசும் மக்களை அடக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே தெருக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அது மட்டுமல்ல,வடமாகாண விவசாயி வியர்வை சிந்திப்பெறும் விளைச்சல்களை எல்லாம் நேரடியாக விவசாயிகளிடம் இந்த வீதி வழி சென்று குறைந்த பணம் கொடுத்து வாங்கிப் போய் கூடிய விலையில் தெற்கில் விற்கவும் தான் அவை அமைக்கப்பட்டன.
எமது தமிழ்பேசும் அமைச்சர்களை தன்னிடம் வைத்துக் கொண்டே, எமக்கெதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எம்மை கொண்டே, எமக்கு குழிபறிக்க பெரும்பான்மையின அரசு பின் நின்றதில்லை.

டக்ளஸ் தேவானந்தா, தவராசா, அங்கஜன் ஆகிய மூவரும் தமிழ் பேசும் சகோதரர்கள். அவர்கள் போகும் பாதை தவறு என்பது எங்கள் கருத்து.
எங்கள் அரசியல் வரலாற்றை ஆராய்ந்தால், எங்களை வைத்துக் கொண்டு எங்களை அழித்தார்கள்.
மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு துயரம். 2009ம் ஆண்டு நடந்த துயரம் என முக்கியமான சம்பவங்கள் பலவற்றின் போது அரசாங்கத்தில் தமிழ் அமைச்சர்கள் அங்கம் வகித்திருந்தார்கள்.

எம்மவர்களைக் கொண்டே எங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் பண்டமாற்று அடிப்படையிலான அரசியல் செய்ய விரும்பவில்லை.
எங்கள் அரசியலும், நிர்வாகமும் மக்களுடைய நலன்களை அடிப்படையாகக் கொண்ட ஊழலற்ற உயிருள்ள நிர்வாகம்.
அதன்மூலம் சட்டத்தின், நீதியின், ஆட்சியை நிலை நிறுத்துவோம். அதிகார துஸ்பிரயோகத்திற்கு இடமில்லை.

உலகத்தின் உதவிகளுடன் ஜனநாயக வழியில் சென்று எங்கள் இலக்குகளை அடைவதற்கான ஒரு வழியாகவும் இந்தத் தேர்தல் அமைகிறது. நாம் எமக்கென ஒரு அரசை நிறுவி எம்மவரை இணைத்து முன்னேறுவதே காலத்தின் தேவையாக இருக்கிறது.
எமது வடமாகாணத்துக்கு தமிழ் பேசும் எம்மால் அரசு ஒன்று நிறுவப்பட வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

இந்தப் போராட்டத்தில் ஒவ்வொருவரும் பங்காளிகள், போராளிகள் என்பதை மனதிற் கொண்டு செயற்பட வேண்டும்.
நாம் இருநோக்குகளைக் கொண்டிருக்கின்றோம். ஒன்று தூரநோக்கு, மற்றயது கிட்டிய நோக்கு.

தூரநோக்கு என்பது தமிழ் மக்கள் பாராம்பரியமாக வாழ்ந்த அவர்களது பூர்வீகமான வாழ்விடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
நாம் ஒரு தேசிய அலகு என்ற அடிப்படையில் எம்மை நாமே ஆளும் வகையிலான சுயநிர்ணய உரிமை எமக்குரித்தாகிறது என்பதே அந்தத் தூரநோக்கு, அதனை நாம் அடைந்தே தீருவோம்.

கிட்டிய நோக்கை பொறுத்தவரையில் உடனடித் தேவைகளை கருத்தில் கொண்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடைய நலன் சார்ந்த நடவடிக்கைகளை நாம் உடனடியாக மேற்கொள்வோம்,
காணாமல்போனோர் பிரச்சினை, நிலப்பறிப்பு பிரச்சினைகள் போன்றவற்றுடன், இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்குவது. படிப்படியாக எங்கள் மண்ணிலிருந்து முழுமையாக இராணுவத்தை அகற்றுவது போன்றவற்றிலும் நாம் கவனம் செலுத்துவோம்.

அதற்காக மத்திய அரசுடன் நம்பிக்கை அடிப்படையில் புரிந்துணர்வை வளர்க்க வேண்டும்.
அதேபோன்று இளைஞர், யுவதிகளின் தொழில் வாய்ப்பு, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுடைய மறுவாழ்வு போன்றவற்றுடன் கல்வி, பொருளாதாரம் என சகல துறைகளிலும் எங்கள் சமுகத்தை வளர்த்தெடுக்கப் உழைப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.http://www.puthinappalakai.com/view.php?20130826108940

0 கருத்துக்கள் :