நவநீதம்பிள்ளை இன்று காலை இலங்கையை வந்தடைந்தார்!

25.8.13

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று காலை 9.50 மணியளவில், ஜேர்மனியிலிருந்து யுஎல்558 என்ற விமானம் மூலம் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். எமது விமான நிலைய செய்தியாளர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை 7 நாட்கள் இங்கு தங்கியிருப்பதோடு வடக்குக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
தனது வடக்குப் பயணத்தின் போது அவர் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள், யாழ்ப்பாணத்தின் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்கள் ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம், சமகால அரசியல் நிலைமைகள், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தனது பயணத்தின் போது விரிவாக ஆராயவுள்ள மனித உரிமைகள் ஆணையாளர், அது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அறிக்கை ஒன்றையும் சமர்ப்பிக்கவுள்ளார்.
இலங்கையில் நிலவும் மனிதவுரிமைகளின் நிலைமைகள் மற்றும் இறுதி யுத்தத்தின் போது ஏற்பட்ட அவலங்கள் பற்றி அவர் ஆராய்வதுடன், சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து கருத்துக்களை பெறவுள்ளார்.
அத்துடன், தமது இந்த பயணத்தின் பின்னர் அவர் பக்கச்சார்பற்ற அறிக்கை ஒன்றை சமர்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், யுத்தத்தின் பின்னர் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மீளக் குடியமர்வுகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை நேரில் அவதானிக்கவுள்ளார்.

0 கருத்துக்கள் :